Sunday, 13 March 2016

சொப்பன சுந்தரி


ஒரு நல்ல நாளில், காலை 9:30 மணி போல நானும் என்னோட நண்பன் அரசகுமாரும், தள்ளாகுளம் தபால் நிலையத்து வாசல்ல நின்னு, அந்த பக்கம் போற மிதிவண்டியெல்லாம் பாத்துட்டு இருந்தோம், சரியா சொல்லப் போனா ஒரு மிதிவண்டிய தேடிக்கிட்டு இருந்தோம். எங்களோட இலக்கு மிதிவண்டியில வர்ற காக்கி சேலை கட்டுன ஒரு பெண்மணிய கண்டுபிடிக்கிறது. ஏன்னா?.


மனிதனுக்கு சனி எங்க வேணும்னாலும் இருக்கலாம், ஆனா நாக்குல மட்டும் இருக்கவே கூடாது. நான் கேணத்தனமா எதாவது உளறும் போதெல்லாம், என்னோட நண்பன் ஒருத்தன் இத சொல்லுவான். உண்மையில சனின்னு ஒண்ணு இருக்கா, அதுவும் என்னோட நாக்குல இருக்கான்னு தெரியல, ஆனா நான் அடிக்கடி கேணத்தனமா உளறுவேன்றது என்னமோ உண்மைதான். அப்படி சும்மா இருக்காம என் வாயினால கெட்ட சம்பவம்தான் இது.

எனக்கு சேமிப்பு ரொம்பவும் பிடித்தமான பழக்கம். என்னுடைய வாழ்க்கையில சில முக்கியமான பொருட்கள, சேமிக்கும் பழக்கம் மூலமாதான் வாங்கினேன், உதாரணமா என்னுடைய முதல் புகைப்பட கருவி. வங்கியில ஒரு சிறு சேமிப்புக் கணக்கு துவங்கனும்ன்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை இருந்தது. ஆனா அத ஆரம்பிக்க ஆயிரம் ருபாய் தேவை பட்டது, அதுவும் இல்லாம எதாவது அடையாள அட்டை வேற கேட்டாங்க. அப்ப (கல்லுரி முதலாம் ஆண்டு படிக்கும்போது) என்கிட்ட வாக்காளர் அடையாள அட்டை கூட கிடையாது. சரி அப்பறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.

ஒருநாள் என்னோட நண்பன் நீதியலங்காரத்துட்ட, இந்த ஆசை பத்தி பேசிட்டு இருந்தேன். அவன் என்னடா திடிருன்னு?, எதுவும் காரணமான்னு கேட்டான். காரணங்களுக்கா பஞ்சம், நமக்குன்னு ஒரு இருப்புக் கையேடு (Pass Book) தருவாங்க (அத வச்சு பசங்கக்கிட்ட பகுமானம் பண்ணலாம்), வட்டி கிடைக்கும் (அஞ்சு பத்து வந்தாலும் லாபம்தான), முக்கியமா பத்திரமா இருக்கும் (நாம நினைக்கும் போதெல்லாம் பணத்துல கை வைக்க முடியாது).

எல்லாத்தையும் கேட்டுட்டு, நீ ஏன் இதே சேமிப்பு கணக்க தபால் நிலையத்துல துவங்க கூடாது?, நீ கேக்குற எல்லாமே இருக்கு. வெறும் இருபது ருபாய் இருந்தாலே போதும் டா. எங்க அம்மாகிட்ட சொன்னா செய்யப் போறாங்கன்னு சொன்னான் (அவனோட அம்மா தபால் நிலையத்துலதான் வேலை பாக்குறாங்க). அட இப்படி ஒண்ணு இருக்கா, இத்தன நாளா இது தெரியாம போச்சேன்னு யோசிச்சு. உடனே அவன நச்சரிச்சு, அவனோட அம்மாவ பாக்க அவங்க அலுவலகத்துக்கே போனோம்.

போனதுந்தான் தெரிஞ்சுது, அங்க சேமிப்பு கணக்கெல்லாம் துவங்க முடியாதுன்னு. அது அரவிந்த் கண் மருத்துவமனைக்குன்னு இருக்க தனி கிளை (Special Branch). அங்க அந்த மருத்துவமனையோட தபால்கள அனுப்புறதோட சரி, வேற ஏதும் செய்ய மாட்டங்க போல. ஆனா அவனோட அம்மாவே, “‘ஞான செல்வின்னு என்னோட தோழி தள்ளாகுளம் தலைமை தபால் நிலையத்துல வேலை பாக்குறாங்க, அவங்கள போய் பாத்தா, அங்கயே உனக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணி தந்துருவாங்கன்னு சொல்லி அனுப்புனாங்க.

சரின்னு நாங்க அங்கிருந்து கிளம்பும்போது டேய், காலைல சீக்கிரம் போய் நின்னுடாதிங்க டா, அவங்க ரொம்ப தூரத்துல இருந்து வரதுனால, கொஞ்சம் மெதுவாத்தான் வருவாங்க. அதே மாதிரி நீங்க பாட்டுக்கு நேரா அலுவலகத்துக்குள்ள போய் அவங்கள எங்கன்னு கேட்டுடாதீங்க. (அவங்க தாமதமா வந்தது தெரிஞ்சிருமாம்). காக்கி சேலை கட்டி மிதிவண்டி ஓட்டிட்டு வருவாங்க வாசல்லே வச்சு புடிச்சிருங்க சரியான்னாங்க.  

அன்னைக்கு இரவு பசங்களோட இத பத்தி பேசிக்கிட்டு இருக்கும் போதே நானும் வரேன்னு அரசகுமரும் சொன்னான். மறுநாள்தான் நானும் அவனுமா நின்னு வர போற மிதிவண்டிய எல்லாம் சலிச்சிட்டு இருந்தோம். ஒருவழியா, 10:30 மணி போல ஒருத்தவங்க காக்கி சேலை கட்டிட்டு வந்தாங்க. நான் மட்டும் அவங்க கிட்ட போய் உங்க பேர் செல்வ சுந்தரியா?ன்னு கேட்டேன். அவங்க உடனே என்னை பார்த்து இல்லப்பா, உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டாங்க. நானும் செல்வசுந்தரின்னு இங்க வேலை பார்க்குற ஒருத்தவங்கள பார்க்க வந்தோம்ன்னு சொன்னேன். அவங்க ஒரு மாதிரி முழிச்சிட்டு அப்படி யாருமே இங்க வேலை பார்க்கலப்பான்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.


நான் வேகமா அரசகுமார்கிட்ட போய் போச்சு டா, செல்வசுந்தரின்னு ஒருத்தவங்க இங்க வேலையே பாக்கலையாம் டா. அவன் என்னடா சொல்லற செல்வசுந்தரியா?, வேற எதோ பேர்லடா சொன்ன?!ன்னு கேட்க. நான் பேர மாத்தி சொன்னதே எனக்கு அப்பதான் புரிஞ்சிது, அதுமட்டும் இல்லாம அவங்க பேரும் மறந்து போச்சு.

நான் ஒரு கேன முழி முழிச்சிட்டு ஓ வேற பேர்ல, ஆமா டா அவங்க பேர் என்ன?ன்னு கேட்டேன். உடனே டேய் கொலையே பண்ணிருவேன், நேத்து உங்கிட்டதான பேர் சொன்னாங்க, இப்ப என்கிட்ட கேக்குற?ன்னு கத்துனான். நான் சரிடா, உங்கிட்டயும்தான சொல்லி வச்சேன், யோசி!ன்னேன். இப்ப அவன் ஒரு மாதிரி முழிச்சிட்டு எனக்கும் சரியா ஞாபகம் இல்லையே டா, எதோ சுந்தரின்னுதான் வரும்ன்னு சொல்லிட்டு யோசிக்க ஆரம்பிச்சான். அப்ப கைபேசியெல்லாம் வேற கிடையாதா, சரியான பேர் என்னன்னு கேக்கவும் முடியல.  

யோசிச்சிட்டே இருந்த நம்ம பய, திடீருன்னு தபால்நிலையத்த நோக்கி ஓடுனான், அங்க வேற ஒருத்தவங்க காக்கி சேலை கட்டி நின்னுட்டு இருதாங்க, அவங்க கிட்ட எதோ பேசிட்டு திரும்பி வந்தான். என்னடா ஆச்சு?ன்னு கேட்டேன், நாம கேட்க வேண்டிய பேரு ஞான சுந்தரியும் இல்ல டா, அந்த பேர்லயும் யாருமே இல்லையாம்ன்னான்.    

மணி 11 ஆச்சு, எங்க ரெண்டு பேருக்கும் செமையா பசியெடுக்க ஆரம்பிச்சது. சரின்னு பக்கத்துல இருந்த கடைல ஆளுக்கு ரெண்டு வடைய வாங்கி பேசிகிட்டே சாப்பிட்டோம். ஏன்டா செல்வசுந்தரியும் இல்ல, ஞானசுந்தரியும் இல்ல பின்ன என்ன பேரா இருக்கும்?,ன்னு நான் வடைய தின்னுக்கிட்டே கேக்க, கெட்ட வார்த்தைலயே நல்லா திட்டுனான். நான் அவன நிமுந்து கூட பார்காம, கடமையே கண்ணா வடைய தின்னு முடிச்சேன்.    

அப்பெல்லாம் கைல காசு நிறையா இருக்காது. நீதியலங்காரம் சொன்னத கேட்டு கணக்கு ஆரம்பிக்க 20 ரூபாயும், பேருந்து செலவுக்கு 5 ரூபாயுமா, மொத்தமே 25 ரூபாய் தான் எடுத்துட்டு போயிருந்தேன். வடைக்கு காசு கொடுக்கும் போதுதான் தெரிஞ்சுது இந்த அரசகுமார் பயலும் சரியா அதே 25 ரூபாய் எடுத்துட்டு வந்திருக்கான்னு. இரண்டு பேரும் ஒருத்தன ஒருத்தன் முறைச்சிக்கிட்டே, காச கொடுத்தோம்.

இந்த தடவை நான் முந்திக்கிட்டு, இவ்வளோ கம்மியா காசு எடுத்துட்டு வந்திருக்கியே, இப்போ போகும்போது நடந்துதான் போகணும், அப்படின்னு திட்ட ஆரம்பிச்சேன். உடனே நீ மட்டும் என்ன ஆயிரம் ரூபாயா கொண்டுவந்திருக்க?ன்னு அவனும் பதிலுக்கு திட்ட, அங்க எங்களுக்குள்ள ஒரு சண்டையே ஆரம்பிச்சுது.

நாங்க ரெண்டு பேரும் இப்படி தீவிரமா சண்டை போட்டுட்டு இருக்கும்போது எங்கள தாண்டி காக்கி சேலை கட்டுன ஒரு பெண்மணி மிதிவண்டில போனாங்க, நான் உடனே அரசகுமார பார்த்து டேய், போய் கேளு டான்னு சொல்ல, அவன் உடனே ம்ம்ம் நீயே போய் கேளுன்னான். இப்படியே மாத்தி மாத்தி பேசி கடைசியா அவன் என்னைய அவங்க கிட்ட தள்ளி விட்டு, என் பின்னாலயே வந்தான்.

அவங்க எங்கள பார்த்ததும் என்னப்பா வேணும்ன்னங்க. நான் அவங்க கிட்ட போய் நின்னுட்டு, இவன் பக்கமா திரும்பி, என்ன சுந்தரின்னு கேக்க?ன்னேன். செம கடுப்புல இருந்தவன், ம்ம்ம் சொப்பன சுந்தரின்னு கேளுன்னான். நானும் பட்டுன்னு ஏங்க நீங்கதான் சொப்பன சுந்தரியா?ன்னு கேட்டுட்டேன். அவங்க எங்கள ஒரு மாதிரி பார்த்து என்ன கேட்ட?ன்னு சொல்லவும்தான், எனக்கு நான் என்ன உளறுனேன்னே தெரிஞ்சிது, அப்படியே சிலை மாதிரி நின்னுட்டு இருந்தேன். அரசகுமார் என் பின்னால இருந்து, வாடா ஓடிறலாம்ன்னான்.

நல்லவேலையா அவங்க அடுத்து எங்ககிட்ட பேசுறதுக்குள்ள தபால் நிலையத்துக்குள்ள இருந்து யாரோ அவங்கள கூப்பிட்டாங்க. அவங்க யாருன்னு திரும்பி பாக்குற இடைவெளியில, நானும் அரசகுமாரும் அங்க இருந்து தெரிச்சு ஓடிப்போயி ஒரு பேருந்துல ஏறிட்டோம். பேருந்துல ஏறுன முதல் பத்து நிமிடம் ரெண்டு பேரும் நிறுத்தமா சிரிச்சிட்டே இருந்தோம், பேருந்துல இருந்த பல பேர் எங்களையே ஒரு மாதிரி பாத்துட்டு இருந்தாங்க.

இறங்க போற சமயத்துல அரசகுமார் சிரிச்சிகிட்டே கடைசி வரைக்கும் அவங்க பேரும் ஞாபகம் வரல, அவங்களையும் கண்டுபிடிக்க முடியல போ!ன்னான். நான் ரெண்டையுமே கண்டுபிடிச்சிட்டேன் டான்னு சொல்ல, அவன் திடுக்கிட்டு என்னடா சொல்லற, எப்படி?, யாரு?ன்னான். கடைசியா ஒருத்தவங்கள பார்த்து சொப்பன சுந்தரின்னு சொன்னோம்ல, அவங்கள ஒருத்தவங்க ஞான செல்வின்னு கூப்பிட்டாங்கன்னு சொன்னேன். ரெண்டு பேரும் ஒருத்தன ஒருத்தன் பாத்து, மறுபடி நல்லா சத்தமா சிரிச்சோம். மொத்த பேருந்தும் எங்களையே ஒரு மாதிரி பார்க்க, பேருந்த விட்டு இறங்கி நடக்க ஆரம்பிச்சோம்.  

1 comment:

  1. மறதி வருவது இயல்பு
    ஆனா ? உங்களுக்கு ஓவரா
    வருது

    ReplyDelete