இரண்டரை வருடத்துக்கு முன்னாடி, எனக்கு திருமணம்
ஆனா புதுசு, வீடுக்காரம்மா ஊர்ல படிச்சிட்டு இருந்ததுனால, நான் பெங்களூர்ல நண்பர்களோடயே
தங்கிருந்தேன். அப்ப ஒரு நாள், அதிகாலை 7-30 மணி இருக்கும் என்னோட கைபேசி அலற
ஆரம்பிச்சுது, வீடுகாரம்மாதான் கூப்பிடுராங்க போலன்னு எடுத்து பார்த்தேன். யாரோ
தெரியாத எண்ல இருந்து அழைப்பு வந்தது, அரை துக்கத்துல எடுத்து யாருன்னு கேட்டேன்.
எதிர் முனைல ஒருத்தர் “ஏங்க உங்க பணப்பை (purse) எங்க விடுதி வாசல்ல கிடக்குதுங்க,
அதுல உங்க எண் இருந்துச்சு அத வச்சு கூப்பிடோம், வந்து வாங்கிரிங்களா?”ன்னு
கேட்டார்.
முதல்ல பசங்கதான் யாரோ விளையாடுறாங்க போலன்னு
நினைச்சு, “டேய் யாரு இது ஒழுங்கா சொல்லு டா”ன்னு கேட்டேன். அதுக்கு அவர் பொறுமையா
“தம்பி நம்புனா நம்புங்க உங்க பணப்பை இங்கதான் இருக்கு வந்து வாங்கீட்டு போங்க”ன்னு
சொல்லி, நான் இருந்த வீட்டுல இருந்து மூணு தெரு தள்ளி இருந்த தெரு பேர் சொல்லி வரச்சொன்னாரு.
அப்பையும் நம்பாம, என்னோட அறைக்கு வெளிய போய்
பார்த்தேன். நண்பர்கள் மூணு பேரும் நல்லா தூங்கிட்டுருந்தாங்க, சரின்னு என்னோட கணினி
மேசைய பார்த்தேன், அங்க என்னோட பணப்பை இல்ல. நேத்து வெளிய போகும் போது எங்கயும்
விழுந்துருச்சோன்னு யோசிச்சிட்டு இருக்கும் போதுதான் கவனிச்சேன், அதுக்கு
பக்கத்துலையே இருந்த, திருமணத்துக்கு பரிசா வந்த என்னோட கைகடிகாரத்தையும் காணாம்.
பதறி போய் வாசக்கதவ பார்த்தேன், அது வெளிப்பக்கமா பூட்டிருந்துச்சு, அப்பதான்
என்னோட மரமண்டைக்கு புரிஞ்சிது, வீடு புகுந்து எவனோ திருடிருக்கான்.
நண்பர்கள எழுப்பி சங்கதிய சொன்னேன், எந்திரிச்சு
அவங்க பொருள்கள் என்னன்னா திருட்டு போயிருக்குன்னு பதறி போய் தேட ஆரம்பிச்சாங்க.
ரெண்டு கைபேசி, மூணு பணப்பை, ரெண்டு கைகடிகாரம், ரெண்டு செருப்பு, அது போக எங்களோட
கணினி மேசைல இருந்த விரலி (pendrive) மாதிரியான சின்ன சின்ன பொருள்கள்ன்னு நிறைய
திருட்டு போயிருந்துச்சு.
பிரச்சனை இதுதான், நாங்க அப்ப குடியிருந்த
வீட்டுல, கதவுக்கு ஒட்டுனாப்புல சாளரம் இருக்கும். அது வழியா கைய விட்டா கதவோட
மூணு தாழ்பாளையும் அனாமத்தா திறக்கலாம். நாங்க நல்லா சாளரத்த திறந்து வச்சுட்டு
தூங்க, சத்தம் காட்டாமா உள்ள நுழைஞ்சி, எத எத எடுக்க முடியுமோ எடுத்துட்டு
போயிருக்கான். இத்தனைக்கும் நண்பர் சுஜித் அன்னிக்கு கூடத்துலதான் படுத்திருந்தார்.
எல்லாம் பொலம்பிகிட்டு, எப்படி, இப்படி
தூங்குனோம்ன்னு தன்னை தானே திட்டிக்கிட்டு, என்ன செய்யிறதுன்னு தெரியமா உட்காந்து
இருந்தோம். அப்பறம் நான் எனக்கு கைபெசில கூப்பிட்டவர போய் பார்த்தேன். என்னோட
பணப்பைய எடுத்து வச்சவர் ஒரு விடுதியோட காவலாளி. திருடுனவன் பணத்த எடுத்துட்டு
பணப்பைய அங்க தூக்கி போட்டு போயிட்டான் போல. காலைல வெளிய வந்த இவர், அத பார்த்து
எடுத்து வச்சிருந்து எனக்கு கூப்பிட்டிருக்கார்.
அவர் கிட்ட நன்றி சொல்லீட்டு, அப்படியே வேற
எதாவது பணப்பை இங்க யாராவது பார்த்தாங்களான்னு கேட்டேன், அவர் என்னை ஒரு மாதிரி
பார்த்தார். நான் திருட்டு போன சங்கதிய சொல்லி மறுபடி கேட்டேன், “அதெல்லாம் எனக்கு
தெரியாது தம்பி, இத மட்டும்தான் பார்த்தேன்”ன்னு சொல்லீட்டு அங்க இருந்து நகந்துட்டார்.
ஒருவேளை, அவர் மேல சந்தேகப்படுறேன்னு நினைச்சாரோ என்னவோ. அப்படியே நான் ரெண்டு
மூணு தெரு தேடி பார்த்தேன் வேற யாரோடதும் கிடைக்கல.
வீட்டுக்கு திரும்பி வந்த போது அங்க, நண்பர்கள்
எல்லாம் காவல் நிலையம் போறதா வேணாமான்னு பேசிட்டு இருதாங்க. ஆனா குறைந்தபட்சம்
“ஓட்டுனர் உரிமம்”, “ஏ.டி.எம்” மாதிரியான பொருள்கள திரும்ப விண்ணப்பிக்கிறதுக்கு
எஃப்.ஐ.ஆர் (F.I.R) தேவைப்படும், அதனால கண்டிப்பா போயே ஆகனும்ன்னு முடிவு பண்ணோம்.
பக்கத்துல கன்னடம் தெரிஞ்ச எங்க நண்பர் ஒருத்தர கூட்டிக்கிட்டு காவல்
நிலையத்துக்கு கிளம்பினோம்.
10 மணி போல காவல் நிலையதுக்கு போனோம், நான்,
சுஜித், அஜீத், அப்பறம் நண்பர் ரிச்சர்ட் நாலு பேர் மட்டும் உள்ள நுழைஞ்சோம். நாங்க
என்ன செய்யிறதுன்னு முழிக்கும் போது, நண்பர் ரிச்சர்டே உள்ள போய் எல்லாம்
கேட்டுட்டு வந்தாரு. ஆய்வாளர் கொஞ்சநேரத்துல வந்துருவாங்கன்னு காத்திருக்க
சொன்னாரு. அரைமணிநேரம் கழிச்சு நல்ல திடகாத்திரமான ஒரு பெண்மணி வந்தாங்க, மித்தவங்கல்லாம்
பம்முரத பார்த்ததுமே அவங்கதான் ஆய்வாளர்ன்னு தெரிஞ்சு போச்சு.
நண்பர் மறுபடி அவங்க கிட்ட போய் எல்லத்தையும்
சொன்னாரு, அந்த அம்மா ஏங்க மூணு பேரையும் ஏற இறங்க பார்த்துட்டு, எங்கள பத்தி
விசாரிச்சாங்க. நண்பர் ரிச்சர்ட தவிர வந்திருக்கது எல்லாரும் வெளி மாநிலத்து
பசங்கன்னு தெரிச்சதுமே அந்தம்மா முகம் வேற மாதிரி மாறிடிச்சு. குறிப்பா அதுல
ரெண்டு பேர் தமிழ் நாடுன்னு தெரிஞ்சதும் அவங்க பார்த்த பார்வையே தினுசா மாறிடிச்சு.
அந்தம்மா கொஞ்ச நேரம் பார்த்துட்டே இருந்துட்டு,
“அதுக்கு நாங்க என்ன பண்றது”ன்னு கன்னடத்துலையே கேட்டாங்க. நண்பர் மறுபடி பேச
ஆரம்பிக்கவும், அவர நிறுத்த சொல்லிட்டு, எங்கள பேச சொன்னங்க. நாங்க மூணு பேரும் ‘பே’ன்னு
முழிச்சிட்டு இருந்தோம், கடைசியா அஜீத் தான் “கன்னடா கோத்தில்லா மேடம்”ன்னு
கண்ணடத்துல நாங்க கத்துக்கிட்ட ஒரே வாக்கியத்த சொன்னாரு. அதாவது “கன்னடம்
தெரியாதுன்னு” சொன்னாரு. (அப்பதான் அப்படி, இப்ப நண்பர் அஜீத் நல்லவே கன்னடம்
பேசுறாரு, ஆனா எனக்கு இப்பவும் தெரிஞ்சது அது மட்டும்தான்).
அத கேட்டதும் அந்தம்மா நிறுத்தாம 15 நிமிடம்
பேசுனாங்க, அதும் முழுக்க முழுக்க கன்னடத்துல. ஆனா என்ன சொல்லவராங்கன்னு நல்லா
புரிஞ்சிது. “இங்க வந்துட்டு கன்னடம் தெரியாம என்ன பண்றீங்க, இதே நாங்க தமிழ்நாட்டுக்கு
வந்து கன்னடம் மட்டும் பேசுனா சும்மா இருப்பிங்கலா”ன்னு கண்டபடி திட்ட
ஆரம்பிச்சாங்க.
கடனேன்னு அவங்க கிட்ட திட்டு வாங்கீட்டு, மறுபடி
எங்க நண்பர விட்டே திருட்டு போன எங்க பொருள்கள
பத்தி கேட்டோம். அதுக்கு அந்தம்மா “திருட்டு நடந்தப்ப நீங்க என்ன பண்ணிட்டு
இருந்தீங்க, நீங்க குடிச்சிட்டு கதவக்கூட மூடாம தூங்கிருப்பீங்க, எவனாவது
எடுத்துட்டு போயிருப்பான் இதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்”ன்னு மறுபடி திட்ட
ஆரம்பிச்சாங்க. எனக்கு ரொம்பவே கோவம் வந்துருச்சு, பொதுவா காவல்துறை ஆசாமிகள் மித்தவங்கள
எப்படி நடத்துவாங்கனு கேள்விப்பட்ருக்கேன், ஆனா இவளோ கேவலமா இருக்கும்ன்னு
நினைச்சு கூட பார்க்கல. சொல்லி வச்சாப்புல சுஜி என்னோட காதுக்கிட்ட வந்து “நாம
குடிச்சிட்டுதான் தூங்குனோம்னு இவங்களுக்கு தெரியுமா?. எதோ, நாம எங்கயோ போய்
திருடிட்டு வந்த மாதிரி இப்படி திட்டுறாங்க”ன்னு கடுப்புல சொன்னாரு.
அந்தம்மா கத்தி முடிச்சிட்டு, “கண்டுபிடிகிறது
ரொம்பவே சிரமம், எல்லாமே சின்ன சின்ன பொருளா இருக்கு”ன்னாங்க. நான் “அடுத்த தடவை வேணும்ன்னா,
கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது பெரிசா எதாவது திருட்டு குடுத்துற்றோம். இந்த
ஒரு தடவை இருக்கத வச்சு கொஞ்சம் பாத்து செய்ங்க”ன்னு சொல்லலாம்னு நினைச்சேன்.
அப்பறம் எதுக்கு இப்ப வீணா அடிவாங்கனும்னு அமைதியா இருந்துட்டேன். நான் நினைச்சது
புரிஞ்சிதா, இல்ல அவரும் இதே மாதிரி யோசிச்சரான்னு தெரியல சுஜி என்னை பார்த்து
சிரிச்சாரு.
கடைசியா, “ஒரு புகார் எழுதி குடுத்துட்டு போங்க,
என்னானு பார்க்கலாம்”ன்னு சொன்னாங்க. சரின்னு அஜீ ஒரு புகார் மனு எழுதி கொண்டு
போய் அந்த ஆய்வாளர்கிட்ட குடுத்தாரு. அத படிச்சு பார்த்துட்டு “என்ன இது,
“திருடிடாங்கன்னு” எழுதிருக்க?, “தொலைச்சுடோம்ன்னு” எழுதி கொண்டு வா”ன்னு
சொன்னங்க. நாங்க இது ஏன் கேட்டா, யாராவது எங்க கிட்ட இருந்து அடிச்சு
புடுங்குனாதான் அது திருட்டாம். வீட்டுல இருந்த பொருள் காணாம போச்சுன்னா, அது
நாங்க தொலைச்சதாம். இந்த விளக்கத்த கேட்டு, இதுக்கு மேல எதுவும் பேச வேணாம்
சாமின்னு முடிவு பண்ணி, தொலைச்சுடோம்னே எழுதி குடுத்தோம்.
இந்த முறை அதை வாங்கி வச்சுட்டு, “சரி
கிளம்புங்க”ன்னு சொன்னாங்க. நாங்க எஃப்.ஐ.ஆர் நகல் வேணும்ன்னு கேட்டோம், குறிப்பா
அது எதுக்கு வேணும்ன்னு சொன்னோம், வந்ததே முக்கியமா அதுக்குத்தான. உடனே அந்தம்மா
ஏளனமா ஒரு பார்வை பார்த்து, என் வாழ்க்கையில மறக்கவே முடியாத ஒரு வாக்கியத்த
சொன்னாங்க. “உங்களுக்கு எதுதான் வேணாம் சொல்லுங்க, எஃப்.ஐ.ஆர் வேணும், எங்களுக்கே
தண்ணி இல்லைன்னாலும் காவேரி வேணும், எல்லாம் வேணும்”. இத கேட்கவும் திராவிடம்தான்
எப்பவும் சிறந்ததுன்னு பேசுற, ஒரு சிலரோட முகம் கண்ணு முன்னாடி வந்து போச்சு.
அப்பறம் அந்தம்மாவே “இதுக்கெல்லாம் எஃப்.ஐ.ஆர்
போட முடியாது, புகார் மனுவோட நகல் தர சொல்றேன் அத வச்சு வாங்க வேண்டியத
வாங்கிங்கோங்க, போங்க”ன்னு சொல்லி அனுப்புனாங்க. நானும், சுஜியும் செம கடுப்புல
இருந்தோம், எங்கள பார்த்து அஜீயும், ரிச்சர்டும் எங்கள முதல்ல போக சொல்லிட்டு,
அவங்க இருந்து புகார் மனுவ வாங்கீட்டு வந்தாங்க.
வெளிய வரவும்தான் கொஞ்சம் நல்லா இருந்தது,
என்னமோ நாங்க தப்பு பண்ணிட்டு காவல் நிலையத்துல விசாரணைக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு
உணர்வு. இங்க சக மனிதனுக்கான மரியாதை துளியளவு கூட கிடையாது. அதுலையும் நாங்க
தமிழர்கள்ன்னு தெரியவும் மரியாதை இன்னும் கிழிஞ்சு காவேரிக்கே போயிடிச்சு.
வீட்டுக்கு நடந்து போகும்போது நானும், சுஜியும்
திருட்டு போன பொருள்களோட மொத்த மதிப்பு எவ்வளோன்னு கணக்கு பார்த்துட்டு இருந்தோம்.
அத பார்த்துட்டே வந்த அஜீ, “அதுல புகார் மனுவோட நகல் வாங்க நான் இப்ப குடுத்த 1000
ரூபாயும் சேர்த்துக்கோங்க”ன்னாரு. அத கேட்ட சுஜி, “அந்த திருடன் மட்டும் என் கையில
கிடைச்சான், இன்னைக்கு இங்க அசிங்க பட்டத்துக்கும் சேர்த்து வாங்குவான்”ன்னு
முட்டிய முறுக்கிக்கிட்டு சொன்னாரு. ஆனா இன்னைய வரைக்கும் யாரும் மாட்டவும் இல்ல,
ஏங்க பொருள்கள பத்தி ஏதும் தெரியவும் இல்ல.



Anna nandha Prakash
ReplyDeleteRomba bayangaramaa nadadhuruku