Wednesday, 21 October 2020

அரக்கன்

 எங்க வீட்டுல இருந்து அஞ்சாவது வீட்டுல குடியிருந்தார் வேல்முருகன். எங்க அப்பாவுக்கு பங்காளி, அம்மாவுக்கு அத்தைப் பையன், எனக்கு சித்தப்பா. கொஞ்சம் கூட யோசிக்காம சொல்லுவேன், இது வரை நான் பார்த்த திறமைசாலிகள்ல மிக முக்கியமானவர் இவர். ”சிற்பி, ஓவியர், மருந்தாளுநர், பள்ளிக்கூட ஆசிரியர், கல்லூரி உதவி பேராசிரியர்”ன்னு, பன்முகத்தன்மை கொண்டவர்.

கேட்குறவங்க சிரிக்குபடி பேசுறது, எல்லாருக்கும் அமையாத ஒரு கலை. அவருக்கு தெரிஞ்ச பல கலைகளோட இந்த கலையும் கை வரப்பட்டவர். அவர் பேசுறத கேட்க அவர சுத்தி எப்பவும் ஒரு கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். எப்பவும் நக்கல் அடிச்சிக்கிட்டே இருப்பார்.

அவர் கூட பேசுறவங்க இவருக்கு வாழ்கையில கவலையே இல்ல போலன்னு நினைப்பாங்க. சொல்லப்போனா எனக்கு இவர பத்தி பதிஞ்ச முதல் பின்பமே, அவர் இருக்க இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும்கிறதுதான்.

அவர் வீட்டு வாசப்படியில சாயங்காலம் உட்காந்தா பொழுது போறதே தெரியாது. தெருவுல போற வர எல்லாரையும் கிண்டல் பண்ணி சிரிக்க வைப்பார். ஒரு தடவை தீபாவளிக்கு பசங்க எல்லாம் வெடி வச்சுக்கிட்டு இருந்தோம், இவரும் எங்க கூட சேர்ந்து வெடி வச்சாரு. அந்நேரம் பார்த்து இவருக்கு கடன் கொடுத்த ஒருத்தர், அத கேட்க தேடி வந்துட்டார்.

அவர பார்த்ததும், இவர் “தங்கத் தமிழன் டா, அது எங்க அண்ணண் டா”ன்னு நல்லா கைய தூக்கிக்கிட்டு கத்துனாரு. கொஞ்சம் கூட யோசிக்காம அடுத்த நொடி, ஒரு வெடிய எடுத்து, வந்தவர் கையில குடுத்துட்டு, “அண்ணே, நீங்க வெடி வச்சாதாண்ணே அது தீபாவளி!, வைங்கண்ணே. அத நான் ஆசையா பார்க்கனும்”ன்னு அவர ஏத்தி விட்டு வெடிக்க வச்சார்.

அவரும் எதுக்கு வந்தோம்ன்னே மறந்து போய் ஒரே மகிழ்ச்சியா வெடி வச்சுக்கிட்டு இருந்தாரு. அதுல உச்சகட்ட நகைச்சுவையே, கொஞ்ச நேரத்துல வெடி எல்லாம் தீர்ந்து போச்சுன்னு சொல்லி, பணத்த கேட்க வந்தவர்கிட்டயே, வெடி வாங்க இவர் பணம் வாங்குனதுதான்.

இப்படி எந்நேரமும் சிரிப்பும், கேலியுமா இருப்பார். ஆனா அவர் வாழ்கையில நிறைய அடியும் காயங்களும் பட்டவர். 12வது முடிச்சிட்டு ஒரு மருத்துவர் ஆகனும்கிற அவருடைய கனவு ஒரு ஆயிரத்தி ஐநூறு ரூபாய் இல்லாததுனால நிறைவேறாம போச்சு. அப்பறம் கையில இருந்த காச வச்சு மருந்தாளுநர்க்கான (B.Pharm) பட்டப்படிப்ப முடிச்சார்.

மருந்துகளோட குணம் அதோட, வேதியல் கலவைகள பத்தி தெளிவா சொல்லுவார். குடும்பத்துல யார் மருத்துவமனைக்கு போயிட்டு வந்தாலும், முதல்ல கூப்பிடுறது அவரதான். அவர் வரவும், மருந்து எல்லாத்தையும் அவர்கிட்ட காட்டி, எது எதுக்குன்னு கேட்டு தெரிஞ்சிக்குவோம். 

படிக்கும் போதே, தன் அப்பாவோட தொழிலான சிற்ப வேலைகளையும் நல்லா கத்துக்கிட்டார். என்னதான் M.Pharm, M.S. ன்னு படிச்சாலும், அவரோட முழுநேர வேலையா சிற்பத் தொழில்தான் இருந்தது. பித்தளை, வெள்ளி, இரும்பு மாதிரியான உலோகங்கள்ல சிலைகள், சிற்ப வேலைகள் செய்யிறதுல வல்லவர்.

ஒரு கற்பனைய ஓவியமா வரைஞ்சு, அத முழு சிற்பமா அவர் கொண்டு வர்றது அவ்வளவு நேர்த்தியா இருக்கும். இன்னும் சொல்லப்போனா இப்படி வேலை செஞ்சு வந்த காசுலதான், அவர் மேற்படிப்புகள் எல்லாமே படிச்சார்.

சாயங்காலம் வரைக்கும் பட்டறையில இருந்துட்டு, அதுக்கு மேல 11ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியல் பாடம் சிறப்பு வகுப்புகள் (Tution) எடுப்பார். நான் 12வது படிக்கும் போது அவர்கிட்டதான் பாடம் படிச்சேன். பாடம் அவ்வளவு அருமையா எடுப்பார், அதே நேரத்துல கோபமும் நிறைய வரும்.

அப்பேல்லாம் அவர்கிட்ட பயந்துக்கிட்டே இருப்பேன், பதில் சரியா சொல்லலைன்னா, அண்ணண் பையன்ற உரிமையில, கூட நாலு சாத்து விழுகும். இன்னமும் என் கூட படிச்ச பசங்க யாரையாவது பல நாள் கழிச்சு எதார்த்தமா பார்த்தா, எங்கிட்ட இரண்டு சங்கதிகள கண்டிப்பா பேசிடுவாங்க. ஒன்னு என் அம்மாவோட சமையல், அடுத்து இவர் எடுத்த வேதியல் வகுப்புகள்.  

மித்தவங்களுக்கு உதவுற குணம் அதிகம் கொண்டவர். வருடா வருடம் சித்திரை திருவிழாவுல, மீனாட்சி சொக்கர் திருமணத்துக்கு பெரிய அளவுல அன்னதானம் போடுவார். அவருக்கு நண்பர்கள் மிக அதிகம், இன்னும் சொல்லப் போனா தன்னோட இரண்டு குழந்தைகளுக்கும் தனக்கு புடிச்ச நண்பர்களோட பெயரதான் வச்சார்.

கலை மேல விருப்பம் அதிகம் கொண்டவர், அதனாலயே தன்னோட மகனையே பின்னாடி சிற்பம் மற்றும் ஒவியம் கலை கல்லூரியில சேர்ந்து படிக்க சொல்லிக்கிட்டு இருந்தார். அவனுக்கு மருத்துவம் படிக்கலாமா, இல்லை சிற்ப கலையான்னு ஒரு குழப்பம் இருந்தது.

அப்பவும் அவர், “மருத்துவம் படிக்க நிறைய ஆளும் இருக்கு, அதை குறைக்க ‘நீட்’டும் இருக்கு, என்னை கேட்ட நீ சிற்ப கலைய படி அதுக்குதான் ஆள் குறைஞ்சுகிட்டே வருது”ன்னு சொன்னார். ஆனாலும் முடிவ அவன் கையிலதான் விட்டார், அவர் அவன்கிட்ட அடிக்கடி சொல்லும் வாசகம் “உன் வாழ்க்கை உன் கையில்”.

சிற்ப வேலைகள வந்து ஆர்வமா கத்துக்கிறதுக்கு ஆளே இல்லைன்னு பல தடவை சொல்லி வருத்த பட்டிருக்கார். “வேலை பார்க்க ஆள் வரத்தான் செய்யிறாங்க, ஆனா முறையா கத்துக்கனுங்கிற ஆர்வம் ஒரு பயலுக்கும் இல்ல டா”ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். அந்த அளவுக்கு அவருக்கு, கலை மேல ஒரு காதலே இருந்ததுன்னு சொல்லலாம்.

எந்த வேலை அவர ஒரு கலைஞனா ஆக்குச்சோ, அதே வேலை அவர புகை மற்றும் குடி பழக்கத்துக்கு ஆளாக்குச்சு. இரவு நேரங்கள்ல பட்டறையில வேலை நிறைய ஓடும், அதோட சேர்ந்து இது இரண்டும் ஓடும். அந்த பழக்கம் போகப் போக ஆதிகமாயிடிச்சு.

ஒரு கட்டத்துல அதுக்கு முழுமையா அடிமையாகும் நிலை வந்து, உடம்பு மிகவும் கெட்டுப் போச்சு. ஆளே துரும்பா இளைச்சு போய், நினைவு தவறும் படியான நிலைமைக்கு போயிடிச்சு. அப்படியும் அவங்க வீட்டுல அவருக்கு முழு மூச்சா வைத்தியம் பார்த்து, மீட்டு கொண்டுவந்தாங்க.

அடுத்து அந்த இரண்டையும் தொடவே கூடாதுன்னு மருத்துவர்கள் அறிவுரை சொல்லி விட்டாங்க. மருத்துவர்கள் சொன்னத கேட்டு அத தொடமா இருப்பார், ஆனாலும் அது எல்லாமே கொஞ்ச மாசங்கள்தான் நீடிக்கும், மறுபடி அதே கதை. இத மாதிரி கடந்த ஏழு வருடத்துல, மூனு நாலு தடவை மருத்துவமனைக்கு போகவும், வீட்டுக்கு வரவுமா இருந்தார்.

அந்த சமயத்துலதான், அவருக்கு திண்டுகல்ல இருக்க ஒரு கல்லூரியில உதவி பேராசிரியரா வேலை கிடைச்சது. தினமும் மதுரையில இருந்து திண்டுகலுக்கு பேருந்துல போய்க்கிட்டு இருந்தார். அங்க வேலைக்கு சேர்ந்ததுல இருந்து அவருக்கு நிறைய நல்ல மாற்றங்கள் வந்தது. குறிப்பா குடி, புகை இரண்டும் நல்லா குறைஞ்சது.

“கல்லூரி இருக்க நாட்கள்ல, ‘அரக்கன’ தொடுறதே இல்ல டா”ன்னு மகிழ்ச்சியா சொல்லிக்கிட்டு இருந்தார். (குடிக்கு அவர் வச்ச செல்ல பெயர் ’அரக்கன்’). பேசாம இந்த பட்டறை எல்லாம் விட்டுட்டு, மனைவி குழந்தைகளோட திண்டுக்கல்ல போய் இருந்திரலாமான்னு தீவிரமா யோசனை பண்ணிக்கிட்டு இருந்தார். அவருக்கு அந்த வேலையும், அதன் மூலமா இந்த பழக்கங்கள் குறைஞ்சதும், மிகவும் புடிச்சி இருந்தது.

ஆனாலும் சனி, ஞாயிறுகள்ல இந்த பழக்கங்கள், வழக்கமான வேலைய காட்டிக்கிட்டுதான் இருந்தது. அப்பதான் விடைத்தாள் திருத்துறதுக்காக, 3 நாள் பயணமா சென்னைக்கு கிளம்பினார். போனா இடத்துல திடீருன்னு உடம்பு முடியாம போய், மயங்கி நினைவு இழந்துட்டார்.

இங்க இருந்து பதறியடிச்சு, அவர் மனைவியும் பையனும் சென்னைக்கு போனாங்க. அங்க ஒரு நாள் இருந்து பார்த்து, சிகிச்சை அந்த அளவுக்கு சரிப்படாததுனால, அவர ஒரு மருத்துவ வண்டியிலயே வச்சு மதுரைக்கு கூப்பிட்டு வந்து சிகிச்சை ஆரம்பிச்சாங்க. 

மதுரைக்கு வந்தும் இரண்டு நாளா கண் முழிக்காம இருந்தார், மருத்துவர்களும் நம்பிக்கை தரும்படியா எதுவும் சொல்லாம இருந்தாங்க. உதிரப் போக்கு அதிகமா இருந்ததால, ரத்த வங்கியில சொல்லி எல்லாரும் சேர்ந்து அலைஞ்சு ஏற்பாடு பண்ணாங்க. அதை அவர் உடல்ல ஏத்தும் போதும் சில சிக்கல்கள் வந்து சரியா ஏறல, அப்படி இப்படின்னு கொஞ்ச கொஞ்சமா ஏத்திக்கிட்டு இருந்தாங்க.

அப்படி இருந்தும் மூனாவது நாள் நினைவு திரும்பி, நல்ல படியா எந்திரிச்சு உட்காந்தார். குடும்பத்து பெரியவங்க எல்லாரும் நேர்ல போய், அவர அந்த பழகத்த விடச் சொல்லி திட்டிக்கிட்டு இருந்தாங்க. அப்பவும், “எனக்கெல்லாம் ஒன்னும் ஆகாது, அதெல்லாம் நல்ல படியா குணமாகி வந்திருவேன்”ன்னு வந்தவங்களுக்கு இவர் தைரியம் சொல்லிக்கிட்டு இருந்தார்.

இவர் எழுந்து உட்காந்து 2வது நாள் இரவு 2 மணிக்கு அவரோட மகன், என் வீட்டுகாரம்மாவுக்கு கைப்பேசியில கூப்பிட்டு, “அப்பாவுக்கு திடீருன்னு உடம்பு ரொம்ப மோசமாயிடிச்சு, வர முடியுமா”ன்னு கேட்டான். என்னடா இதுன்னு யோசிச்சிட்டு இருக்கும் போதே, எதிர் வீட்டுல இருக்க எங்களோட தாத்தா ஒருத்தர் வண்டி எடுத்துட்டு மருத்துவமனைக்கு கிளம்பிக்கிட்டு இருந்தார்.

சரி, அவர் போய் என்னான்னு நமக்கு சொல்லுவார்ன்னு, ஒரு வித படபடப்போட காத்திருந்தேன். ஒவ்வொரு நொடியும் பாரமா இருந்தது, சரியா கால் மணி நேரத்துல கைபேசியில அழைப்பு வந்தது, துக்க செய்தியோட. வேக வேகமா வண்டி எடுத்துக்கிட்டு நானும் அப்பாவும் மருத்துவமனைக்கு போனோம்.

அங்க அழுது புலம்பிக்கிட்டு இருந்த அவரோட குடும்பத்த கடந்து உள்ள போனேன். நான் வியந்து பார்த்த ஒரு மனிதர இப்படி உயிர் இல்லாம பார்க்கவே முடியல. எல்லாத்தையும் ஏன், எப்படின்னு பார்த்து படிச்சு, உடம்புக்கு எது நல்லது, என்ன மாத்திரை சாப்பிடலாம்ன்னு, ஊருக்கே பாடம் சொன்னவர், தன்னை பத்தி கொஞ்சமும் கவலை படலங்கிறது துயரத்தின் உச்சம்.

ஒரு அரை மணி நேரத்துல அவர வீட்டுக்கு தூக்கிக்கிட்டு வந்தோம். இறுதி மரியாதைக்கு நண்பர்கள், சொந்தங்கள், அவரோட மாணவர்கள்ன்னு எல்லாரும் வந்திருந்தாங்க. சடங்குகள் எல்லாம் முடிஞ்சு, சாயங்காலம் போல மயானதுக்கு கொண்டு போனோம்.

கடைசியா அவர ஒரு முறை பார்த்தேன், என்னை பார்த்த உடனே சிரிக்கிற அந்த முகம், சலனமற்ற அமைதியில இருந்தது. இந்த உலகத்துக்கு சொல்றதுக்கும், குடுக்குறதுக்கும் இன்னும் எவ்வளவோ சங்கதிகள் கொண்ட ஒருவர், இவ்வளவு சீக்கிரம் தன்னோட பயணத்த முடிச்சிருக்கக் கூடாது. அதை நினைக்கும் போது எனக்கு அழுகை கூடவே கோபமும் வந்தது.

எல்லாம் முடிஞ்சு, இரவு 9 மணி போல, அவர் வீட்டு வாசல்ல உட்காந்து, அழுதுகிட்டு இருந்த அவரோட மகனுக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தேன். 11வது படிக்கும் அவன்கிட்ட அப்பவே ஒரு தெளிவு தெரிஞ்சிது, தன்னோட அம்மாவையும், தங்கச்சியையும் கண்டிப்பா நல்லா பார்த்துப்பான்ங்கிற நம்பிக்கை வந்தது.

அவன் கிட்ட சொல்ல முடிஞ்சது ஒன்னுதான், “எதுனாலும் நாங்க எல்லாரும் இருக்கோம், நம்பிக்கையா இரு”. கொஞ்ச நேரத்துல அவன் கிளம்பி உள்ள போனதும், நான், அவர் எப்பவும் உட்காரும் அந்த இடத்துக்கிட்ட கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டு இருந்தேன். பாரதி பாட்டு ஒன்னு நினைவுக்கு வந்துச்சு.

“நல்லதோர் வீனை செய்தே அதை நலங்கெட புலுதியில் எறிவதுண்டோ”, இன்னும் எத்தனை நல்ல வீனைகள், தன்னை தானே குடி பழக்கம் என்னும் புழுதியில் எறிஞ்சிக்கிட்டு இருக்கோ?. இன்னும் எத்தனை பேர், இந்த குடி என்னும் அரக்கனுக்கு பலியாக போறங்களோ?. வீட்டுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி, அவர் வீட்ட ஒரு தடவை பார்த்தேன், முகப்புல அவர் அழகா வரைஞ்சு வச்ச ஒரு வாக்கியம் மட்டும் தெரிஞ்சிது. “தீதும் நன்றும் பிறர் தர வாரா”...  

4 comments:

  1. என் வாழ்க்கையில் நான் பார்த்த நல்ல மனிதர்களில் ஒருவர் என் மாமா (வேல்முருகன்), இந்தக் கட்டுரை அந்த உயர்ந்த மனிதரை நினைவு கூறும் வகையில் அமைந்திருந்தது.இத்தகைய உயர்ந்த மனிதரின் கட்டுரை எழுதிய எழுத்தாளர் எங்கள் அண்ணன்..... அவர்களுக்கு மிக்க நன்றி!!!.இதைப்போல் இன்னும் பற்பல........எழுத வேண்டும்...!!

    ReplyDelete
  2. Some truth in life are hard to accept... One good soul is no more now... We will always miss you terribly... You are always loved & never forgotten...

    ReplyDelete
  3. Great man and poor discipline. Sorry for your loss.

    ReplyDelete
  4. மிகவும் நல்ல மனிதர். உங்களை பிரிந்து தவிக்கும் ஒருவர்களில் நானும் ஒருவன்

    ReplyDelete