Wednesday, 14 October 2020

ஓட்டம் (பாகம் - 2)

முந்தய பாகம்

உலகமே இருண்டு போன அந்த நிலைமைல, எதார்த்தமா கால்சட்டை பையில கைய வைக்க அதுல ஒரு ஐம்பது ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் இருந்தது. வண்டியில ஏறுனதும் பயனசீட்டு வாங்கிட்டு மீதி பணத்த இந்த பையில வச்சிருக்கேன்.

அத பார்ததும், பல நாள் பசியில இருந்தவன் பழையசோத்த மாதிரி, பரவசமாகி போனேன். இனி யோசிக்கவே கூடாது செத்தாலும் வீட்டுல போயி அப்பா அம்மா கையிலதான் சாகனும்ன்னு முடிவெடுத்து மதுரை போற பேருந்த தேடி போனேன்.


போற வழியில ஒரு பொது தொலைபேசிய பார்த்ததும், சரி வீட்டுல என்ன நிலவரம்ன்னு பார்த்திடலாம்ன்னு தோன, அதுக்கு முன்னாடி, நேரா போயி மதுரைக்கு பயனச்சீட்டு எவ்வளவுன்னு தெரிஞ்சிட்டு வந்தேன் (மறுபடி தெருவுல நிக்கக்கூடாதுல). மரண பயத்தோட வீட்டுக்கு கூப்பிட்டா, அப்பா தொலைபேசிய எடுத்து சாதாரணமா “ஹலோ யாருங்க”ன்னாரு, அரண்டு போயி வச்சிட்டேன். ஒரு வேலை நம்ம வீட்டுல நம்மல காணாம்ன்னு இன்னும் தேட ஆரம்பிக்கல போலன்னு நினைச்சேன்.

அடுத்ததா என்னோட அத்தை பையனுக்கு கூப்பிட்டு நடந்தத சொன்னா, அவனோ “டேய் தம்பி, என்னையவே ஏமாத்த பாக்குறியா, அதெல்லாம் உன்னால முடியாது”ன்னு துப்பறியும் சாம்புவோட குரல்ல சொல்லிகிட்டு இருந்தான். என்னக்கோ இவனுக்கு புரியவைக்கிறதுக்குள்ள இங்க தொலைபேசி காசு கூடிருமோன்னு பயம். ஒரு கட்டத்துக்கு மேல முடியாம “நீ நம்பலைன்னா திரும்ப எங்க வீட்டுக்கு கூப்பிட்டு கேட்டுக்கோ”ன்னு சொல்லிட்டு வச்சுட்டேன்.

நேரா மதுரை பேருந்துல போய் ஏறுனேன், இந்த முறை பயனச்சீட்டு போக மீதி காச பத்திரமா உள் பையில வச்சுக்கிட்டேன். வரும் போது இருந்த மாதிரி இல்லாம சுத்தமா தூக்கம் வரல. மறுபடி வீட்டுக்கு போய் அப்பா மூன்னாடி நிக்க போறோம்ன்னு நினைக்கவே அல்லைய கவ்வுச்சு.

மதுரைய நெருங்க நெருங்க பயம் அதிகமாயிட்டே இருந்துச்சு. திருமங்கலம் நுழையவும் சரியா பெரியார் நிலையதுக்கு ஒரு பேருந்து கிளம்ப, இந்நேரத்துல மாட்டுதாவணி போயி என்ன செய்யன்னு, படக்குன்னு அதுல ஏறிட்டேன். 1:30 மணி போல பெரியார்ல இறங்குனேன். வீட்டுக்கு போக பயமா இருந்தது, இந்நேரத்துல வேற எங்க போறதுன்னும் தெரியல.


நேரா வீட்டுக்கு போகனும்ன்னு திருநெல்வேலியில தெளிவா யோசிச்ச புத்தி, மதுரை வரவும் மறுபடி கிறுக்காயிடிச்சு. திருட்டு முழி முழிச்சிட்டு நின்ன போது, பட்டுன்னு நண்பன் சுப்புனி ஞாபகம் வந்தது, நேரா அவன் வீட்டுக்கு போறதுன்னு முடிவு பண்ணேன். (அவங்க அப்பாவுக்கு வேலைய வேற ஊருக்கு மாத்திடதுனால, வீட்டுல அவன தவிற யாரும் இல்ல). ஆனா எப்படி போறதுன்னு தெரியல கையில இருந்த மிச்ச காசும் பேருந்து மாறுனதுல தீந்து போச்சு.

வேற வழி இல்லாம, பெரியார் நிலையத்துல இருந்து வில்லாபுரத்துக்கு நடந்தே போக அரம்பிச்சேன். இந்நேரம் எப்படியும் வீட்டுல தேடிக்கிட்டுதான் இருப்பாங்க, அப்பா இந்த பக்கம் தேடி வந்து நடு வீதிலயே விட்டு வெளுத்துருவாரோன்னு, பயம் வேற. அதனாலயே சின்ன சின்ன தெருவா பாத்து போயிட்டு இருந்தேன்.

வில்லாபுரம் பாலம் தாண்டுனதும், காவலர்கள் இரண்டு பேர் வந்து “இந்நேரத்துல எங்க போற”ன்னு கேட்டாங்க. பையில இருந்த பயனச்சீட்ட காட்டுனதும், பார்த்து போக சொல்லி அனுப்பி விட்டாங்க. அடுத்ததா அவன் வீட்டுக்கிட்ட போகும் போது மொத்தமா ஏழு நாய் என்னை துரத்த ஆரம்பிச்சது, நான் பேய் வேகத்துல ஓடி தப்பிச்சேன்.


பலதரப்பட்ட சோதனைகள தாண்டி, இரண்டரை மணி போல சுப்புனி வீட்டுக்கு போய் கதவ தட்டுனேன். அவன், யாரோ எவரோன்னு அரண்டு போயி கதவ திறக்காம, “நான் திறக்க மாட்டேன், யாரா இருந்தாலும் காலையில வாங்க”ன்னு பயத்துல கதறிக்கிட்டு இருந்தான்.

ஒரு வழியா நான்தான்னு புரிய வச்சு அவன் வீட்டுக்குள்ள போறதுக்கு கால் மணி நேரம் ஆயிடிச்சு (வீட்டுக்குள்ள போனதும் அப்படி ஒரு நிம்மதி). உள்ள போய் நடந்தது எல்லாத்தையும் அவன்கிட்ட சொல்லிட்டு, எங்க வீட்டுல நடந்தது எதும் தெரியுமான்னு கேட்டேன். அவன் சாயங்காலம் முழுக்க, எங்க வீட்டுல இருந்துட்டு, ஒன்பது மணி போல வந்திருக்கான்.

நான் திருநெல்வேலியில இருந்து கூப்பிட்ட போது எங்க வீட்டுல ஒரு ஊரே இருந்திருக்கு. சுப்புனி உட்பட என்னோட நண்பர்கள் எல்லார்கிட்டையும் பலத்த விசாரனை வேற நடந்ததது போல. நான் தொலைபேசியில பேசுன எங்க அத்தை பையன் மூலமா, வீட்டுக்கு என்னை பத்தி தெரிஞ்சிருக்கு,

எங்க அப்பா, சித்தப்பாகள், மாமா மற்றும் பலர்ன்னு, எல்லாம் என்னை தேடி மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம்ன்னு போறாதா சொன்னங்கலாம் (யார் கையிலையும் சிக்காம வந்திருக்கேன்). பாவம் எங்க அம்மாதான் அழுதுகிட்டே இருந்தாங்கலாம்.

எல்லாத்தையும் சொல்லிட்டு, “சரி வாடா வீட்டுக்கு போவோம்”ன்னு சொன்னான். “வீட்டுக்கு போக பயந்துதான் டா இங்கயே வந்தேன், எதுவா இருந்தாலும் காலையில பார்த்துகலாம்”ன்னு பகுமானமா சொல்லிட்டு, ஒரு தலகானி எடுத்து போட்டு படுத்துக்கிட்டேன். அலைச்சல், அதிக தூரம் நடந்தே வந்துது, எல்லாம் தாண்டி அவ்வளவு நேரம் இல்லாத ஒரு பாதுகாப்பான உணர்வு வர, நல்லா தூங்கிட்டேன்.

அவன்தான் பாவம் எப்படியாவது எங்க அம்மாகிட்ட சொல்லிறலாம்ன்னு, பொது தொலைபேசி தேடி போயிருக்கான். அனா, அந்நேரத்துல எதுவுமே இல்ல. காலைல சீக்கிரம் எந்திரிச்சு, பக்கத்து வீட்டுல இருந்து தொலைபேசில எங்க வீட்டுக்கு கூப்பிட்டு நான் வந்தத சொல்லிருக்கான். எங்க அம்மா ஒரு பெரிய பெருமூச்சு விட்டு, “அவன முதல்ல இங்க இழுத்துட்டு வாப்பா”ன்னு சொல்லிருக்காங்க.

என்னை எழுப்பி அவனே கூட்டிகிட்டு போனான். எங்க தெரு முக்குக்கு போகும் போதே “வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை” உருல துவங்குச்சு, அப்படியே நின்னுகிட்டு இருந்தவன சுப்புனி தர தர இழுத்துட்டு போனான். வாசல்லயே இருந்த அம்மா, என்னை பார்த்து சாதாரணமா “உள்ள போடா”ன்னு சொல்லிட்டு, சுப்புனிக்கு நன்றி சொல்லி அனுப்பி வச்சாங்க.

உள்ள போனா, அப்பா தூங்கிக்கிட்டு இருந்தாரு, விடிய விடிய என்னைய தேடின களைப்பு. கொஞ்ச நேரம் கழிச்சு அம்மா வந்து “ஏன் டா இப்படி பண்ண?”ன்னு கேட்டுட்டு ஒரே அழுகை, அடுத்து ஒரே அறிவுரை. அப்பா எந்திரிச்சு வந்து என்னைய ஒரு பார்வை பார்த்துட்டு, ஒன்னும் பேசாம போயிட்டாரு. உண்மைய சொல்லனும்ன்னா அவர் திட்டிருந்தா கூட அப்படி பயந்திருக்க மாட்டேன்.

சித்தப்பாக்கள், மாமா, மற்றும் என்னை தேடி அழைஞ்சவங்க எல்லாம் வந்து அறிவுரை சொல்ல, கிண்டல் அடிக்கன்னு வரிசையா நடந்து, சூழ்நிலை கொஞ்சம் இலகுவானது. அப்பா அன்னைக்கு முழுக்க ஒன்னும் பேசவும் இல்லல, சாப்பிடவும் இல்ல. எல்லாரும் என்னை போய், அப்பா கிட்ட பேச சொன்னாங்க. எனக்கோ அவர நிமிர்ந்து பார்க்கவே பயமா இருந்துச்சு, இதுல எங்க போய் பேசுறது, அமைதியாவே இருந்துட்டேன்.

சாயங்காலத்துக்கு மேல அப்பா என்னை தனியா கூப்பிட்டாரு, குலசாமிய நல்லா கும்பிட்டுட்டு, கிட்ட போயி நின்னேன். “என்ன டா பிரச்சனை, எதுவா இருந்தாலும் சொல்லு”ன்னு அமைதியா கேட்டாரு. எல்லாத்தையும் பயந்து பயந்து சொன்னேன். பொறுமையா கேட்டுட்டு, எனக்கு நிறையா தைரியம் சொன்னாரு.

அப்பா கூட உட்காந்து இப்படி பேசுறது அதுதான் முதல் தடவை. கடைசியா “இன்னும் கொஞ்ச நாள்தான, அப்பறம் அந்த பள்ளிக்கூடத்து பக்கமே நீ போக போறது இல்ல, அதனால தைரியமா இரு. படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்ல டா, அதனால இனிமேல இந்த மாதிரி கிறுக்குதனம் எல்லாம் செய்ய கூடாது சரியா”ன்னு சொல்லி முடிச்சாரு.


என்னமோ தெரியல அப்பா கூட பேசுனதுக்கு அப்பறம் பெரிய பாரம் இறங்கி, ஒரு தைரியம் வந்தது, பயப்படாம பள்ளிக்கு போறதுன்னு முடிவு பண்ணேன். அப்ப இருந்து இப்ப வரைக்கும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும், அப்பா ஒரு வார்த்தை தைரியம் சொன்னா போதும், மொரட்டு தெம்பா இருக்கும்.

அடுத்த நாள் முழுக்க மருத்துமனையில நோயாளிய பார்க்க வர்ற மாதிரி, சொந்த பந்தங்கள் வரிசையா என்னைய பார்க்க வந்தாங்க (ஆரஞ்சு பழமும், ஹார்லிக்ஸும்தான் இல்ல). ‘எப்படி ஒடுன?, எங்கெல்லம் போன?’ன்னு வரிசையா கேள்விகள் கேட்டுட்டு இருந்தாங்க. “நான் என்ன ‘இபின் பதூதா’வா என்கிட்ட வந்து பயண குறிப்புகள் கேட்டுகிட்டு, புத்தி கெட்டு போயி ஓடுனேன், பாதி வழியில பீதி ஆகிபோய் திரும்பி வந்துட்டேன், அவ்வளவு தான்”ன்னு பகுமானா பதில் சொன்னேன்.

மறுபடி பள்ளிக்கு போனேன், ஆனா அங்க எதுவுமே மாறல, அந்த வாத்தியாரோட தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்ந்துகிட்டேதான் இருந்தது. பல்லகடிச்சுகிட்டு அடுத்த இரண்டு மாசத்த ஓட்டி முடிச்சேன். அந்த பள்ளிய விட்டு வெளிய வந்ததும் மிகவும் நிம்மதியா இருந்தேன்.

பல மாதங்கள் கழிச்சு பொதுத் தேர்வு முடிவுகள் வந்தது 58 விழுக்காடுகள் எடுத்து தேர்ச்சி அடைஞ்சிருந்தேன். ஆனா எங்க வீட்டுல அது அவங்களோட மரியாதைக்கு பெரிய கலங்கத்தை ஏற்படுத்துனதுனால, என் மேல பயங்கர கோபத்துல இருந்தாங்க.

தேர்வு முடிவு வந்த அன்னைக்கு சாயங்காலம், எங்க அம்மா என்னை நிறுத்தாம திட்டிகிட்டு இருக்கும் போது (அதற்கு நான் நீலிக்கண்ணீர் விட்டுகிட்டு இருக்கும் போது). எங்க வீட்டுக்கு அப்பாவோட நண்பர் வீட்டுல இருந்து வந்தாங்க, உடனே அப்பா அவங்களுக்கு சாப்பிடுறதுக்கு எதாவது வாங்கிக்கிட்டு வர சொல்லி, என்கிட்ட 500 ருபா குடுத்து அனுப்பினாரு.

சரின்னு வீட்ட விட்டு 10 அடி கூட தாண்டிருக்க மாட்டேன், எங்க அப்பா பின்னாடியே ஓடி வந்து என்னை நிப்பாட்டி, “டேய் இது மோசமான மார்க்கெல்லம் இல்ல, அதெல்லாம் நல்ல ஒரு கல்லூரில சேர்ந்திரலாம் சரியா?”ன்னு சொன்னாரு. இப்ப எதுக்கு இவர் இப்படி ஓடி வந்து இத சொல்றாருன்னு நான் முழிக்கும் போதே, அடுத்ததா, “நீ பாட்டுக்கு 500 ருபாய எடுத்துட்டு எங்கயாவது ஓடி போயி தொலைஞ்சிறாத டா”ன்னார்!!.

✦முற்றும்

2 comments:

  1. “வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை” உருல துவங்குச்சு, 😂😂😂

    ReplyDelete
  2. சிறப்பான தரமான சம்பவம் பண்ணிருகிங்க அன்னே

    ReplyDelete