திருமணம்
முடிஞ்சு எல்லாரையும் வழியனுப்பீட்டு, நண்பர் ‘அஜீ’ கூட அவர் வீட்டுக்கு போயி, அவரோட
குழந்தையப் பார்த்தேன். அப்பறம் அங்க இருந்து இன்னோரு நண்பர் வீடுன்னு சாயங்காலம் வரைக்கும்
வரிசையா ஒவ்வொரு இடமா சுத்திக்கிட்டே இருந்தேன்.
சாயங்காலம்
வரவேற்பு கப்பன் பூங்காவுல நடந்தது, நிறைய கொண்டாங்களோட 8 மணிக்கு ஆரம்பிச்சது முடிய
11 மணி ஆயிடிச்சு. ஒரு நண்பர் கூட சேர்ந்து வாடகைக்கு வண்டி பிடிச்சு வண்டனோட வீட்டுக்குக்
கிளம்பினேன். வெள்ளிக்கிழமை அப்படீங்கிறதுனால, பெங்களூருல அந்நேரத்துலயும் சரியான போக்குவரத்து
நெரிசல், வார இறுதிக்கு ஊருக்குப் போக எங்க பார்த்தாலும் ஒரே கூட்டம்.
மெதுவா
நகர்ர வண்டியில வேடிக்கை பார்த்துக்கிட்டு போயிட்டு இருந்தேன். அன்னைக்கு முழுக்க எந்த
நண்பர பார்க்கப் போனாலும் “உங்க கைப்பேசி கொஞ்சம் கிடைக்குமா”ன்னு கேட்டுட்டுதான் “எப்படி
இருகீங்க”ன்னே கேட்டேன். அன்னைக்கு மட்டும் குறைஞ்சது 10 புது எண்கள்ல இருந்து வீட்டுக்குக்
கூப்பிட்டு இருப்பேன்.
ஒவ்வொருத்தரும்
என்னை ஏதோ வேற்றுக் கிரக வாசி மாதிரியோ, இல்ல ஏதோ ஒரு உறுப்ப இழந்த நோயாளி மாதிரியோ
பார்த்தாங்க. அதுவும் குறிப்பா ஒரு கடைக்காரர், நான் தொலைப்பேசி கேட்டதும் என்னய பார்த்த
பர்வை இருக்கே, பிச்சை கேட்டா கூட இப்படிப் பார்க்க மாட்டாங்க.
முன்னையெல்லாம்
அங்கங்க பொது தொலைப்பேசி இருக்கும், நாம பாட்டுக்கு பேசுனோமா, காச குடுத்தோமான்னு வந்திரலாம்.
இப்போ ஊரு முழுக்க ஒரு இடத்துல கூட அது இல்ல, அதுக்கான தேவையும் பெருசா இல்லாம போச்சு,
மாற்றங்கள் இங்க அசுர வேகத்துல நடந்துக்கிட்டு இருக்கு. அந்த நாள் முழுக்க, அவசரத்துக்குப்
பேச, வர்ரவங்க போறவங்கக்கிட்டயெல்லாம் கேக்க வேண்டிய இருந்தது.
ஆனா,
அது எல்லாத்தையும் தாண்டி அன்னைக்கு ஒரு ‘விடுதலை’ இருந்தது. நாம எல்லாரும் எந்த அளவுக்குக்
கைப்பேசிய சார்ந்து இருக்கோம்ன்னு நல்லா புரிஞ்சது. வெளியுலக தொடர்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட
அது நம்ம கையில இருந்தா, வெளியுலக தொடர்பே இல்லாம போயி, அதுக்குள்ளயே நாம மூழ்கி போறதுதான்
மிகப்பெரிய ‘நகைமுரன்’.
அழைப்போ
இல்ல செய்தியோ எதுவும் வரலைனாலும், ஒவ்வொரு 5 அல்லது 10 நிமிட இடைவேலையில எடுத்துப்
பார்த்து, சும்மா அதை நோண்டிக்கிட்டே இருக்கோம். அது இல்லாத போதுதான், மித்தவங்கக்கிட்ட
பேசவே செய்யிறோம்.
அன்னைக்கு
மட்டும் தாத்தாவ பத்தின கவலை இல்லைன்னா, இந்தக் கைப்பேசி இல்லாம இன்னமும் மகிழ்ச்சியா,
ஒரு விதமான விடுதலையோட இருந்திருப்பேன்னு தோனுச்சு. 2 மணி நேரத்துக்கு ஒரு முறை வீட்டுக்குக்
கூப்பிட்டு “தாத்தா எப்படி இருக்காரு”ன்னு கேக்க எனக்கே கொஞ்சம் அலுப்பு தட்டத்தான்
செஞ்சிது, ஆனா கேக்காம இருக்க முடியல. எந்த விதமான தொல்லையும் இல்லாம நல்லபடியாதான்
இருக்காரு, பயப்பட வேண்டாம்ன்னு சொன்னாங்க.
ஒரு
தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவு நிறையவே மகிழ்ச்சியானது. அப்பா மகன் உறவு மாதிரி
‘அமைதியான’ புரிதல் இருக்காது, இங்க நிறையா பேச்சு இருக்கும், சிரிப்பு இருக்கும்,
கதைகள் இருக்கும், அதுக்குள்ள முழுக்க முழுக்க அனுபவங்கள் இருக்கும். எனக்கும் அப்படித்தான்,
என்கிட்ட சொல்றதுக்குன்னு எப்பவுமே எதாவது தாத்தாக்கிட்ட இருந்துக்கிட்டே இருக்கும்.
என்னோட
அப்பாவ விட என்கிட்டதான் நிறைய பேசுவார், அப்பாவுக்கே தெரியாத, அவர பத்திய ஒரு சில
சங்கதிகள என்கிட்ட மட்டும் சொல்லிருக்கார், என்மேல நிறைய பாசமா இருப்பார். சின்ன வயசுலயே
மஹாபாரதம், ராமாயனம்ன்னு நிறைய கதைகள, புத்தகத்த படிச்சிகாட்டி சொல்லிக்கொடுத்து, எனக்குள்ள
புத்தகம் படிக்கிற ஆர்வத்த கொண்டுவந்தவர். அவரோட அன்பளிப்பா, ‘நேர்மை’, ‘கோபம்’, ‘புத்தக
ரசனை’ன்னு அவரோட நிறைய குணாதிசயங்கள் அப்படியே என்கிட்ட இருக்கு.
நான்
ஊருக்கு கிளம்புறதுக்கு ஒரு நாள் முன்னாடி கூட, வாய் குழறி சிரமப்பட்டு “நான் சீக்கிரம்
நல்லபடியா போய்ச்சேரனும்ன்னு வேண்டிக்கோ, இதுக்கு மேல நான் இருந்து என்ன பன்ன போறேன்?”ன்னு
சொல்லீட்டு இருந்தாரு. ஆனா என்னால அப்படி வேண்டிக்க
முடியல, அவருக்கு ஏதும் ஆயிட கூடாதுன்னு மறுபடியும் மறுபடியும் மனசு வேண்டிக்கிட்டே
இருந்தது.
நெரிசல்ல
போக நேரம் அதிகமானதுனால, கூட வந்த நண்பர் வீட்டுல இருந்து இரண்டு மூனு கைப்பேசி அழைப்பு
வந்துருச்சு. அவரும் “வந்துக்கிட்டு இருக்கேன்”னு பொறுமையா சொல்லிகிட்டு இருந்தாரு,
ஆனா வண்டி மடிவாலா தாண்ட மட்டும் முழுசா அரைமணி நேரம் ஆச்சு. என்னய பார்த்து “வீட்டுல
இருந்து நிறுத்தாம கூப்பிடுறாங்க, உங்கள பாருங்க கைப்பேசி இல்லாம, தொல்லை இல்லாம இருக்கீங்க”ன்னு
சொன்னாரு.
உண்மைதான்,
சமயத்துல நமக்கான ஒரு சின்ன விடுதலை கட்டாய தேவைதான். என்னதான் அன்புத்தொல்லையா இருந்தாலும்,
சில சமயங்கள்ல அதுவும் ஒரு தொல்லைதான!. எனக்கான இந்த ஒரு நாள் சின்ன விடுதலைய, நான்
இவ்வளவு பெருசா நினைக்கும் போது, இத்தனை வயசுல எதையும் சாப்பிட முடியாம, எழுந்து நடமாட
முடியாம, சரியா பேசக்கூட முடியாம, படுத்தப் படுக்கையா இருக்கும் தாத்தாவுக்கான நிரந்தர
விடுதலை நிறைவே பெருசு இல்லயா?.
அவர்
எங்களை விட்டு போகக் கூடாதுன்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அவர் படும்
அவதிகள்ல இருந்து விடுதலை அடைஞ்சி, அவர் கிளம்ப தயாரானா அத நான் ஏன் தடுத்து நிறுத்த
நினைக்கனும். எதையும் (குறிப்பா மரணத்த) கட்டுப்படுத்துற ஆற்றல் யார்கிட்டையும் இல்ல.
இந்த மாதிரி சமயத்துல, ஏதும் நடந்துருமோன்னு பயந்துட்டே இருக்கத விட, வர்ரது வரட்டும்ன்னு
இருக்கதுதான் சரின்னு பட்டது. அதுவரைக்கும் நிக்காம குழம்பிக்கிட்டே இருந்த மனசுல,
முதல் முறையா ஒரு தெளிவு வந்துச்சு.
முற்றும்.
பின்குறிப்பு:
நான்
பெங்களூரு போயிட்டு வந்து சரியா ஒரே வாரத்துல, என்னோட தாத்தா இயற்கை எய்தினார்.



No comments:
Post a Comment