Thursday, 2 April 2020

எழுவோம்

“எதை எதையோ பார்த்துட்டோம், இத பார்க்க மாட்டோமா” இதுதான் இன்னைக்கு காலையில எழுந்ததும் நான் கேட்டது. என்னோட அம்மா யார்கிட்டயோ கைபேசியில சொல்லிக்கிட்டு இருந்தாங்க. எங்கும் எதிலும் எப்பொழுதும் கொரோனா பத்தியேதான போய்க்கிட்டு இருக்கு. உலகத்தையே ஆட்டி படைக்கிற ஒன்னப் பத்தி எப்படி பேசாம இருக்க முடியும்.

நாமளே சும்மா இருந்தாலும், இன்னைக்கு புதுசா இத்தனை பேருக்கு வந்திருக்கு, அதுல இறந்தவங்க இத்தனை பேருன்னு, காலங்காத்தாலையே நம்ம கைக்குள்ள தகவல் வந்திருது. இது உலகத்தின் முதல் தொற்று நோய் இல்ல, இதுவே கடைசியாவும் இருக்கப் போறதும் இல்ல. எத்தனையோ நோய்கள பார்த்திருக்கோம்ன்னாலும் இது பரவுற விதமும் வேகமும்தான் அச்சத்தக் கொடுக்குது.


மொத்தமா பார்க்கும் போது, பொது வெளியில தனிமனித சுத்தம் நமக்கு குறைவுதான். ஆனா, இப்ப அதுதான் அதிகமா தேவைப்படுது, அத விட முக்கியமா, இந்த நோய பத்தி உருப்படியான ஒரு புரிதலும் மிக அவசியமா தேவைப்படுது. இது எப்படியெல்லம் பரவுது, எதுக்கு நாம தனியா இருக்கனும் மாதிரியான சங்கதிகள எல்லாருக்கும் இன்னும் தெளிவா புரியவைக்கனுமோன்னு தோனுது.

இதுல படிச்சவங்க, படிக்காதவங்க அப்படிங்கிற வேறுபாடு கிடைவே கிடையாது. 22ஆம் தேதி சாயங்காலம் 5 மணிக்கு மேல நாடே அடிச்ச கூத்தையும், 23ஆம் தேதி இரவு கோயம்பேட்டுல மக்களோட கவனக்குறைவையும், 24 ஆம் தேதி அரசாங்கமே 12வது தேர்வு நடத்துறதையும், அதுக்கு முன்னாடி டெல்லியில வழிபாட்டுக்கு கூடுன மக்களையும் பார்க்கும் போது பகீர்ன்னு இருக்குது. இதுல கோயம்பேட்டுல கூடுன கூட்டம் கூட ஒரு பயத்துல கூடுனதுன்னு வச்சிக்கலாம். ஆனா, கூட்டமா கைத்தட்டி ஊர்வலம் போறது, தேர்வு, வழிபாடு இதெல்லாம் என்னானு சொல்ல. (அவரவர் மாடியில் கை தட்டியவர்களை நான் ஒன்றும் கூறவில்லை).


சென்னை மாதிரியான நகரத்துல, இந்த மாதிரியான நேரத்துல தனியா இருக்கது மிக மிக சிரமம்தான், இல்லைன்னு சொல்லல. ஆனா, இப்படி தெரியாத கூட்டதுக்கு நடுவுல போய், நோய் தொற்றுக்கான அபாயத்த தனக்கும், தன் குடும்பத்துக்கும் அதிகரிக்கிறது உருப்படியான செயல் இல்ல.

 இது தவிற, என்னதான் வெளியில வர வேண்டாம்ன்னு சொன்னாலும், தேவை இல்லாம வீம்புக்கு வர்ற சிலர் இருக்காங்க. “எனக்கெல்லாம் எதுவும் ஆகாது”ன்னு நினைக்கிறது, “நான் சும்மா தான் சுத்துனேன் எதையும் தொடக்கூட இல்லை”ன்னு சமாதானம் சொல்றது. சங்கதி இதுதான் ஒருத்தர் போனா அவங்கள பார்த்து இன்னுருத்தரும் போகதான் செய்வாங்க. இது கொஞ்சம் கொஞ்சமா நடமாட்டத்த அதிகரிக்கத்தான் செய்யும். போன ஞயிற்று கிழமை அதுதான் நடந்தது.

இந்த ஊரடங்கு எல்லாருக்கும் பிரச்சனைதான், வீட்டுக்குள்ளயே இருப்பது கடினமானதுதான். மாத சம்பலக்காரர்கள் கொஞ்சம் தாக்கு புடிக்க முடியும், ஆனா, தினமும் சம்பலம் வாங்குறவங்க என்ன செய்ய முடியும்?. இருக்கதுலயே அவங்களுக்கு தான் பிரச்சனை அதிகம். சேமிப்புகள் கரையும், வீட்ட விட்டு கிளம்பினாத்தான் சமாளிக்க முடியும்ங்கிற நிலைமை வரும். அதுக்கு அரசாங்கம் தான் உரிய நடவடிக்கை எடுக்கனும். நம்ம பங்குக்கு வீட்டு வாடகைய கொஞ்ச நாள் கேட்காம இருக்கது மாதிரியான உதவிகள செய்ய முடியும்.

இப்படியான ஒரு அசாதாரண சமயத்துல கூட வதந்திகளையும், கேனத்தனமான விளக்கங்களையும் கிளப்பி விடுற பல பைத்தியங்கள் இருக்குது. இப்போதைக்கு முக்கால்வாசி பேர் கைப்பேசியும் கையுமாத்தான் இருக்கோம், ஆனா, அதுலையும் பார்க்குற, கேக்குற சில சங்கதிகள் படு மோசமா இருக்கு.

“நம்ம ஊரு வெயிலுக்கு அது தானா செத்துருமாமே”, “பொதுவாவே நமக்கு சூடான உடம்பு தான, அது வந்தாலும் நம்மல ஒன்னும் பன்ன முடியாது”, மாதிரியான நம்மல கவனக்குறைவா இருக்க வைக்கிற பகிர்வுகள் முதல், “நீரழிவு நோயும், ரத்தக் கொதிப்பும் இருக்கவங்களுக்குத்தான் இது கண்டிப்பா வருமாமே”ன்னு பயத்துலயே சாக வைக்கிற அளவுக்கான வதந்திகள், “இது கண்டிப்பா ஒரு உலகப்போர் தான், இது தான் (Bio War) எனப்படும் உயிரியல் போர்”ங்கிற வரைக்கும் சமூக வலைதளங்கள்ல நிறையவே உலாவுது. இப்படி தேவை இல்லாதத துளியளவும் யோசிக்காம தூர வீசிரனும்.

இதெல்லாம் தாண்டி குறிப்பிட்ட மதத்துனால தான் இங்க அந்த நோய் நிறைய பரவுதுன்னு சொல்லி, இப்படியாப்பட்ட ஒரு சூழ்நிலையிலக் கூட மதத்தையும், வெறுப்பையும் முன்னிறுத்துற சில சில்லறைகள என்ன செய்யிறதுன்னே தெரியல. மக்கள் எல்லாருமே ஒரு தெளிவு இல்லாம நடந்துக்கும் நேரத்துல, ஒரு மதத்த இதுல இழுத்துவிட்டு குளிர்காயிறது கொடூரமான மனநிலைன்னு தான் சொல்லனும்.  

அவங்க செஞ்சது தவறு இல்லையானு கேட்டா?, நிச்சயமா அது தவறுதான். இப்படி ஒரு நிலைமையில அப்படி கூடியிருக்கக் கூடாது. ஆனா ஊரடங்கு உத்தரவு போட்டதும் சொந்த ஊருக்கு போக எப்படி கூட்டம் கூடினது தவறோ, அதே மாதிரியான தவறுதான். இதுல மத வெறுப்ப வளர்க்க நினைக்கிறது குற்றம், நிச்சயமா வர்ற தொற்றுக்கு மதம் தெரியாது.

சமீபத்திய சுழ்நிலை எப்படி எப்படியோ போகுது, இது எப்ப முடியும், எப்படி முடியும்ன்னு யாரலும் சொல்ல முடியாத நிலைமையில இருக்கு. 21 நாளுக்கு அப்பறம் எல்லாம் சரி ஆயிடுமா?, பல பேர் பல கருத்துக்கள சொல்றாங்க, ஆனா வெறும் கருத்துக்கள் உண்மையாவோ, நடைமுறையாவோ மாறப்போறது இல்ல. கண்டிப்பான முறையில தனிமை படுத்திக்கிட்டு, பொறுமை காக்குறதத் தவிர, இப்ப நம்ம முன்னாடி வேற வழியும் இல்ல.

நிச்சயமா இது உலகத்தோட முடிவு கிடையாது, இப்போதைக்கு இதுக்கான நிரந்தரத் தீர்வு இல்லையே தவிர, கண்டிப்பா தீர்வே இல்லாம போகாது. கண்டிப்பா இந்த நோய்க்கு ஒரு முடிவு கட்டுவோம், பல நாடுகளும் மருந்து கண்டுபிடிக்க போராடிக்கிட்டுதான் இருக்கு. அது எப்போ வரும்ன்னு தான் தெரியல, அதுவரைக்கும் தைரியத்த விடாம நிக்கனும்.

பயப்படாம, அதே சமயம் கவனக்குறைவாகவும் இருக்காம, நம்மல மட்டும் இல்லாம, நம்ம வீட்ட சேர்ந்தவங்களையும் காப்பாத வேண்டிய பொறுப்புல ஒவ்வொருத்தரும் இருக்கோம். தனித்தனியா நின்னாலும் ஒன்ன இந்த நோய எதிர்த்து போராடுவோம். கட்டாயமா நாம இதுல இருந்து மீண்டு எழுவோம் அப்படிங்கிற நம்பிக்கை மட்டும் அவசியம்.

No comments:

Post a Comment