Monday, 4 May 2020

கண்காட்சி (பாகம் - 1)


“மாமா, அடுத்த 5 நாள் நாம கள்ளக்குறிச்சிக்கு போறோம், நீ வந்தே ஆகனும்”, இப்படி திடீருன்னு திண்டுக்கல் சாரதி சொன்னான். உண்மைய சொல்லப்போனா, முதல்ல இத தட்டிக்கழிக்கனும்ன்னு தான் யோசிச்சேன். ஆனா சமீபத்துல வீட்டுல வாங்குன வசவுகள், கிண்டல்கள், மற்றும் நண்பனின் கோரிக்கை எல்லாம் சேர்ந்து என்னைய கிளம்ப வச்சுது.

பெங்களூருல வேலைய விட்டுட்டு வந்து இங்க பல மாதங்கள் நான் வேலையும் இல்லாம காசும் இல்லாம, சும்மாவே இருந்தேன் (இன்னமும் அப்படிதான் இருக்கேன்). நடுவுல கொஞ்ச காலம், நண்பன் தி.சாரதி கூட சூரிய மின்னாற்றல்(Solar Energy) வேலைகளுக்கு அப்பப்போ போய் அதப்பத்தி ஓரளவுக்கு தெரிஞ்சுக்கிட்டேன். அதுலையும் கடந்த ஒரு வருடமா எனக்கு வேலை இல்லாம இருந்தது.

“வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோ உயர்வான்”ங்கிற மாதிரி. வேலை இல்ல, அதனால கையில காசு இல்ல, அதனால என்னோட நிலைமை அதல பாதாளதுக்கு போக ஆரம்பிச்சு, அதனால என்னோட மானம் வானுயர காத்துல பறக்க ஆரம்பிச்சிது.





இப்படியாப்பட்ட சூழ்நிலையிலதான் “மாமா அறந்தாங்கில வேலை இருக்கு வரியா டா?”ன்னு நண்பன் தி.சாரதி கேட்டான். அந்த கேள்வி ‘தேனோடு தெள்ளமுது’ கலந்த மாதிரி இனிக்க, உடனே சரின்னு கிளம்பீட்டேன். அங்க வேலை பார்த்துட்டு இருக்கும் போதுதான், கள்ளக்குறிச்சியில ஒரு கண்காட்சி நடக்குது, அதுல 5 நாள் உதவிக்கு வரச்சொல்லி அவனுக்கு அழைப்பு வந்தது.

அது ஐதிராபாத்துல இருக்க நிறுவனம், இப்பதான் தமிழ்நாட்டுக்குள்ள வர்றாங்க. அவங்களுக்கு தமிழ் கூட தெரியாது, அதனாலயே எங்கள கூப்பிட்டங்க. இதுல முக்கியமான சங்கதி என்னான்னா, உதவிக்குன்னு போறதுனால எங்களுக்கு சம்பலம்ன்னு எதுவுமே கிடையாது. ஆனா அவங்களால எங்களுக்கு அடுத்து பல வேலைகள் வர இருப்பதால சரின்னு ஒத்துக்கிட்டோம்.

அறந்தாங்கில வேலைய முடிச்சிட்டு வீடு வரவே வியாழக்கிழமை இரவு ஆயிடிச்சு. மறுநாள் காலையில ‘வைகை’யில கிளம்பலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும் போதே, சொல்லி வச்ச மாதிரி நீதியலங்காரம் கூப்பிட்டு திருவண்ணாமலைக்கு போகலாமான்னு கேட்டான். ‘பழம் நழுவி பால்ல விழுந்தது போல’ இருந்தது, எப்படியும் அவன் கள்ளக்குறிச்சி வழியா தான் போயாகனும். அவன் கூடயே பகுமானமா சீரூந்துல(Car) போய் இறங்கிக்கலாம். (ஒரு சின்ன சந்தேகம், பழம் நழுவி பால்ல விழுந்தா, பால் பாத்திரத்துல தட்டி, பாலும் கீழ கொட்டி, பழமும் வீனாயிடாது?) 

மறுநாள் காலை 10:30 மணி போல நீதிமன்றத்துக்கு எங்கள வரச் சொன்னான், அங்க இருந்து இன்னும் இரண்டு பேர கூப்பிட்டுட்டு கிளம்புறதா திட்டம். திட்டப்படி நானும், தி.சாரதியும் சரியா 10:45 மணிக்கு அங்க போக, நீதியலங்காரமும் வேலைய முடிச்சிட்டு 12 மணிக்கெல்லாம் தாயாராக, மீதி இரண்டு பேருல ஒருத்தர் 1 மணிக்கும், இன்னொருத்தர் 1:30 மணிக்கும் அங்க வர, 10:30 எடுக்க வேண்டிய வண்டிய, நேரம் தவறாம 1:45 மணிக்கெல்லாம் எடுத்து கிளம்பினோம்.

தி.சாரதி, “வைகையில ஏறியிருந்தா, இந்நேரம் நாம அங்க போய் 1 மணி நேரம் ஆகியிருக்கும்”ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னான். சொல்லி வச்ச மாதிரி அந்த நிறுவனத்து ஆளுங்க எங்களுக்கு கைபேசியில கூப்பிட்டு அவங்க வந்துட்டதாகவும், நாங்க எப்பொ வர்றோம்ன்னு கேட்டாங்க. “கவலையே படாதீங்க இன்னும் 4 மணி நேரத்துல வந்துருவோம்”ன்னு நண்பன் அவங்களுக்கு ஆங்கிலத்துல ஆறுதல் சொல்லிக்கிட்டு இருந்தான்.

என்னதான் கிளம்பினது தாமதமா இருந்தாலும், நல்ல வேகத்துல போயிட்டு இருந்தோம், அப்போ தான் கண்காட்சி நடக்குறது கள்ளகுறிச்சியில இல்ல, அதுக்கு 30 கிலோ மீட்டர் மூன்னாடி இருக்க ‘தலைவாசல்’ங்கிற ஒரு ஊர்லன்னு தெரிஞ்சிது. சரின்னு அங்க போயி பார்த்தா, பெரிய அலங்கார வலைவுகள், பெரிய மேடை, இருநூறுக்கு மேற்பட்ட சின்ன சின்ன காட்சியகங்கள்ன்னு(Stalls), அது சாதாரண கண்காட்சியா இல்ல. அது போக, அத தொடங்கி வச்சு பேச, ஞாயிற்று கிழமை முதலமைச்சர் உட்பட பல முக்கிய புள்ளிகளும் வர்றாங்கன்னு வேற தெரிஞ்சிது.  




உண்மைய சொல்லனும்ன்னா எங்க இரண்டு பேருக்குமே இவ்வளவு பெரிய கண்காட்சி நடக்க போகுதுன்னு தெரியாது. ‘ஆ’ன்னு வேடிக்கை பார்த்து கிட்டே, அந்த நிறுவனதுக்கு ஒதுக்கப்பட்ட காட்சியகத்துக்கு போனோம். அவங்களுக்குன்னு இரண்டு இடம் ஒதுக்கி இருந்தாங்க, ஒன்னு வழக்கமான காட்சியகம் (புத்தக கண்காட்சிகள்ல இருப்பதப் போல), இன்னொன்னு வெட்ட வெளியில சூரிய மின்சக்தி தகடுகள் வச்சு, அது மூலமா ‘பம்பு செட்டுல’ தண்ணீர் இறைக்கும் முறைய காட்டும் விளக்க வடிவம்.

இரண்டு நாள்ல இத அமைச்சு வைக்கனும், அடுத்து மூனு நாளும் வர்ற மக்களுக்கு இத விளக்கி சொல்லனும்ன்னு, அந்த 5 நாளுக்கான வேலைகள நண்பன் சொன்னான். எனக்கு மனசுக்குள்ள ஒரு பயம் ஆரம்பிச்சது, ‘இவ்வளவு பெரிய கண்காட்சியில நாம எப்படி வர்றவங்களுக்கு எடுத்துச் சொல்லப்போறொம், எதுவும் தப்பா சொல்லிற கூடாதே’ன்னு யோசிச்சிட்டு இருந்தேன். “எதுக்கும் பயப்படாத, எதாவது தெரியலைன்ன என் கிட்ட கேளு”ன்னு நண்பன் தைரியம் சொன்னான்.

அந்த ஐதிராபாத் நிறுவனத்து சார்பா, இரண்டு பேர் வந்திருந்தாங்க, (தமிழ் தெரியாத ந(ண்)பர்கள்). நான் பயங்கர மிடுக்கா எதிர்பார்த்தா, அவங்க பார்க்க மிகச் சாதாரனமா இருந்தாங்க. சரின்னு, அவங்கக்கிட்ட போய் “ஐதிராபாத்துல இருந்து எப்படி வந்தீங்க? நடந்தா இல்ல பேருந்துலயா?, அங்க மழை தண்ணி எப்படி இருக்கு?, பேருந்துல வரும் போது நாலு சக்கரமும் நல்லபடிய சுத்துச்சா?”ன்னு, பொதுவா கொஞ்ச நேரம் பேசீட்டு, வேலைய துவங்குனோம்.

வேலைய ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல, “தம்பீ, அவங்க வந்துட்டாங்களா?”ன்னு கேட்டுக்கிட்டே ஒரு 50 வயது மதிக்கதக்க பெண்மணி வந்தாங்க. அவங்கதான் எங்களோட காட்சியகத்துக்கு ஒதுக்க பட்ட அதிகாரி, வேளாண்மை பொறியியல் துறையில, ஆத்தூர்ல உதவி பொறியாளரா இருக்காங்க. வந்தவங்க எங்கள பார்த்துட்டு, “தம்பீ, நீங்கதான் இவங்க கூட வந்தவங்களா, தயவு செய்து இங்க வந்து இத பாருங்கப்பா”ன்னு எங்கள கூப்பிடாங்க. (அவங்க ஒவ்வொரு முறையும் எங்கள அப்படித்தான் கூப்பிட்டாங்க, ‘தம்பி’ குறில் அல்ல ‘தம்பீ’ நெடில்).

நேரா எங்களோட காட்சியகத்துக்குள்ள போயி அங்க பெரிசா இருந்த விளம்பர பதாகைய காட்டி “என்னாப்பா இது”ன்னு அவங்க கேட்க அப்போதான் நானும் பார்த்தேன், உடனே அடக்க முடியாம சிரிப்பு வந்துருச்சு. “எப்படியாவது இத உடனே மாத்தீருங்க தம்பீ, இல்லைனா தப்பா போயிடும்”ன்னு சொல்லீட்டு, அத மாத்தாம விட்டா அவங்களுக்கு மேலிடத்துல இருந்து என்னென்ன பிரச்சனைகள் வரும்ன்னு அரை மணி நேரம் பேசீட்டு (புலம்பீட்டு) கிளம்பிப்போனாங்க.

அவங்களோட புலம்பலுக்கு காரணம், ஆளுயர விளம்பரப் பதாகையில “பிரதமர் உழவர் எரிசக்தி பாதுகாப்பு திட்டம்”ன்னு இருக்க வேண்டிய இடத்துல, ‘உ’ங்கிற எழுத்த விட்டுட்டு, “பிரதமர் ‘ழவர்’ எரிசக்தி பாதுகாப்பு திட்டம்”ன்னு அச்சடிச்சு வச்சுடாங்க. விவசாயிகள பத்தி பேசாம, காதலர்கள பத்தி பேசுற மாதிரி இருந்தது. (அவங்க ஆளுங்களுக்கு வேற காதல்னாலே புடிக்காது).




 ஆனா அத உடனே மாத்தனும்ன்னா எங்க போறது?, அப்பவே மணி 8 ஆயிடிச்சு, நாங்க இரண்டு பேரும் ஊருக்கு புதுசு, அவங்க இரண்டு பேரும் மாநிலத்துக்கே புதுசு. அதுலையும் கண்காட்சி நடந்த இடம் வேற ஊர்ல இருந்து 7 கி.மீ தள்ளி, தேசிய நெடுஞ்சாலையில இருந்தது. அவங்களோ நாளைக்கு காலைலயே உயர் அதிகாரிகள் அய்வுக்கு வந்துருவாங்க, அதுக்குள்ள மாத்தனும்ன்னு ஒரே வார்த்தையில சொல்லிடாங்க.

என்னடா செய்யன்னு முழிச்சுக்கிட்டு நின்னப்ப, எங்களுக்கு பக்கத்து காட்சியகத்துல இருந்தவர், “கவலை படாதிங்க, நாங்க நாளைக்குதான் பதாகையே வைக்கப் போறோம், அதெல்லாம் போயி காலையில மாத்திக்கலாம்”ன்னு தைரியம் சொன்னாரு. அப்பாடான்னு இருந்த அடுத்த நொடி அவரே “எங்க தங்க போறீங்க, இந்த ஊர்லையும் சரி, இந்த ஊர சுத்தி இருக்க எந்த ஊர்லையும் சரி, தங்குறத்துக்கு அறையே இல்லையே”ன்னு. அடுத்த குண்ட போட்டாரு.

200க்கும் மேற்பட்ட நிறுவனத்துல இருந்து ஆட்கள் வந்திருக்காங்க, அது போக பாதுகாப்புக்கு வந்திருக்க காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள்ன்னு எல்லாரும் முன்கூட்டியே வந்து தங்கிட்டதுனால சுத்துவட்டாரத்துல எங்கயுமே அறைகள் இல்ல. மறுபடி என்னாடா செய்யன்னு முழிக்க ஆரம்பிச்சோம். தெரிஞ்ச நண்பர்கள் எல்லாருக்கும் கூப்பிட்டு, இந்த ஊர சுத்தி யாரும் தெரிஞ்சவங்க இருந்தா எங்கயாவது அறை எடுத்து தர முடியுமான்னு கேட்க ஆரம்பிச்சோம்.

பல பேர் கூட பேசி, எதுவும் வேலைக்கு ஆகல. எங்கள இறக்கி விட்டுட்டு திருவண்ணாமலை போன நீதியலங்காரத்துக்கிட்ட, அங்கயே எதாவது அறை கிடைக்குமான்னு கேட்டோம். தினமும் போக வர 3 மணி நேரம் ஆனாலும் பரவாயில்ல, தங்குறதுக்கு ஒரு இடம் கிடைச்சா போதும்ன்னு இருந்தது. ஆனா மறுநாள் முழுநிலவு, அங்க கிரிவலம் நடக்கிறதுனால அவங்களுக்கே அங்க அறை எதுவும் கிடைக்காம தேடிக்கிட்டு இருந்தாங்க போல. இன்னைக்கு தெருவுல தான் தூங்கனும் போலயேன்னு பயந்துட்டு இருந்தோம்.

கொண்டு போன துணிமனி பையைக்கூட எங்க வைக்கன்னு தெரியல, இதுல நான் வேற பகுமானமா, என்னோட மடிக்கணிணிய வேற தூக்கிக்கிட்டு போயிருந்தேன். தீடீர் திருப்பமா நீதியலங்காரமே கூப்பிட்டு, அவனுடைய நண்பர் ராஜா அண்ணன்கிட்ட பேச சொன்னான். சரின்னு அவருக்கு கூப்பிட்டோம், “தம்பி, ஒன்னும் பிரச்சனை இல்ல, எங்க மாமா இப்ப உங்கள கூப்பிடுவாரு, அவரே உங்களுக்கு இடம் அமைச்சு தருவாரு சரியா”ன்னு சொல்லி, அரண்டு போய் கிடந்த எங்க வயித்துல ஆவின் பால ஊத்துனாரு. அவருக்கு ஒரு பெரிய நன்றி சொன்னோம்.

அவர் சொல்லி அஞ்சாவது நிமிடம் ராஜா அண்ணனோட மாமா எங்கள கைபேசில கூப்பிட்டு, ஒருத்தர் பேர சொல்லி, அவரோட கைபேசி எண்னையும் கொடுத்து, அங்க இரண்டு பசங்க மட்டும் தங்கியிருகாங்க, அவங்க வீட்டுலயே போய் தங்கிக்கோங்கன்னு சொன்னாரு. மகிழ்ச்சியாகி, நன்றி சொன்னேன், அவரோ “அட, இதெல்லாம் எதுக்கு தம்பி, பாத்துகோங்க. வேற எதாவது வேணும்ன்னாலும் கூச்சப்படாம கேளுங்க”ன்னு சொல்லிட்டு வச்சுட்டாரு. (உங்கள மாதிரியெல்லாம் ஆள் இருக்கதுனாலதான் நாட்டுல கொஞ்சமாது மழை பெய்யிது).

தாமதிக்கவே கூடாதுன்னு உடனே அந்த நபருக்கு கூப்பிட்டேன், அவரும் எங்க இருக்கோம்ன்னு கேட்டுட்டு, எங்க எப்படி வரனும்ன்னு சொன்னாரு. அவர்கிட்டயே நாங்க வர கொஞ்ச நேரமாகும்ன்னு சொல்லிவச்சோம். அவங்களும் பரவாயில்ல, எவ்வளவு நேரமானாலும், ஊருக்குள்ள வந்துட்டு கூப்பிடுங்கன்னாரு. (அந்த மனசு இருக்கே, அதுதாங்க கடவுள்).

சரின்னு ஒரளவு வேலைகள முடிச்சிட்டு, 10:30 மணி போல கிளம்பினோம். அப்பவும் எங்க கிரகம் கேனத்தனமா வேலை செய்ய, தலைவாசல் ஊருக்கு போக எங்க பேருந்து ஏறனும்ன்னு? அங்க இருந்த ஒருத்தர்க்கிட்ட கேட்டோம். அவரும், தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லாம, “இங்க பேருந்து எதுவும் நிக்காது, சுங்கசாவடி கிட்ட போயிடுங்க அங்கதான் நிக்கும்”ன்னு சொல்லிவிட்டாரு. நாங்களும் பக்கத்துல 500 மீட்டர்ல இருக்க பேருந்து நிறுத்ததுக்கு போகாம, 2.5 கி.மீ தள்ளி இருக்க சுங்கச்சாவடிக்கு பைய தூக்கிக்கிட்டு லொங்கு லொங்குன்னு நடந்து போனோம்.

இதுக்கு நடுவுல எங்களுக்கு தங்க இடம் கொடுத்தவங்களுக்கு கைபேசியில கூப்பிட்டு, நாங்க வர கொஞ்சம் நேரமாகும்ன்னு சொல்லிவச்சேன் (பாவம் அவரு நல்ல தூக்கத்துல இருந்தாரு). சுங்கச்சாவடிக்கு போய் நின்னா ஒரு பேருந்தும் அங்க நிக்கல, வெகு நேரம் களிச்சு ஒன்னெ ஒன்னு நின்னுச்சு, ஆனா அதுவும் தலைவாசல்ல நிக்காதுன்னு சொல்லிடாங்க. 



போற போக்கப் பார்த்தா, இன்னும் 4 கி.மீ நடந்தேதான் போகனும் போலயேன்னு யோசிச்சிட்டு இருக்கும் போது, தெய்வாதீனமா ஒரு பகிர்வு தானி (Share Auto) வந்தது. தலைவாசல் போகலமான்னு கேட்டதும், “ஏறுங்க”ன்னு சொன்னார். எவ்வளவு காசுன்னு கேட்கவும் “குடுக்குறத குடுங்க தம்பி”ன்னு சொல்லிட்டு வண்டிய ஓட்ட ஆரம்பிச்சுட்டாரு. ஊர்ல போய் இறங்கும் போது 50 ரூபா குடுத்தோம், சிரிச்சிகிட்டே வாங்கிக்கிட்டாரு. ”நீங்க புள்ள குட்டிகளோட நல்லா இருக்கனும் சாமி”ன்னு மனசார வாழ்த்தீட்டு இறங்கி நடந்தோம்.

இறங்கி கைபேசில கூப்பிட்ட 5 நிமிடத்துல கார்த்தி எனும் நண்பர் வண்டில வந்து எங்கள அவர் வீட்டுக்கு கூட்டிகிட்டு போனாரு. அங்க எங்களுக்குன்னு அறைய ஒதுக்கி வச்சு, பாய், தலகானி, போர்வை கொசுபத்தி முதற்கொண்டு எடுத்து கொடுத்தார். அவருக்கிட்டயே எங்களோட அடுத்த பிரச்சனையான விளம்பர பதாகைய பத்தி சொல்லி, அச்சடிக்கிற கடை எங்க இருக்குன்னு கேட்டு வச்சுக்கிட்டோம்.

தூங்கப் போறதுக்கு முன்னாடி, இடம் குடுத்ததுக்காக, அவருக்கும் ஒரு நன்றி சொன்னோம். நண்பன் படுத்ததும் தூங்கிட்டான், நான் தூக்கம் வராம, நினைவுகள அசை போட்டுக்கிட்டு இருந்தேன், அந்த ஒரு நாள் மட்டும் எத்தன பேருக்கு நன்றி சொல்லிருக்கேன், அவ்வளவு உதவிகள் வந்திருந்தது. அதுல பல பேர பார்க்குறதே அதுதான் முதல் தடவை, இந்த மாதிரி பயணங்கள்தான் புது புது நபர்கள, நண்பர்களா மாத்துது. 

தொடரும். . .
 

1 comment: