மறுநாள் காலையில எந்திரிக்க 8 மணி ஆகிடிச்சு, வீட்டுல யாருமே இல்ல. அந்த இரண்டு பேரும் சீக்கிரமே கிளம்பி வேலைக்கு போயிட்டாங்க போல, நாங்க கிளம்பும் போது வீட்டு சாவிய கீழ் வீட்டுல குடுத்துட்டு போகச் சொன்னாங்க. நேத்து பிரச்சனை முடிஞ்சிது, இன்னைக்கு இரவு எங்க தங்குறதுன்னு யோசிச்சோம். நேத்தே நிறைய வேலைகள் முடிஞ்சதால இன்னைக்கு நிறைய நேரம் இருக்கும், எப்படியாவது அலைஞ்சு திறிஞ்சு ஒரு இடத்த புடிச்சிடனும்.
இத யோசிக்க ஆரம்பிச்சு முழுசா 5 நிமிடம் கூட இருக்காது, கைபேசியில ஒரு அழைப்பு வந்தது, “தம்பீ, அந்த பதாகைய எப்ப மாத்துவிங்க”ன்னு அந்த உதவி பொறியாளர் (உ.பொ) கூப்பிடாங்க. “அட இருங்கமா இன்னும் கடை கூட திறந்திருக்காது, அதுக்குள்ள நீங்க வேற”ன்னு. இரண்டு பேரும் கிளம்பி பக்கத்துல கடை தேட ஆரம்பிச்சு, ஒரு அச்சகத்த புடிச்சோம். கடை பூட்டி இருந்தாலும் கைபேசி எண் இருந்தது, அதுக்கு கூப்பிட்டு “கடை எப்பங்க தெறப்பிங்க”ன்னு நேரத்தையும் கேட்டு வச்சோம்.
அப்பாடா, பதாகை பஞ்சாயத்து முடிஞ்சதுன்னு, ஒரு எலுமிச்சை தேநீர் குடிச்சிட்டு வீட்டுக்குள்ள நுழைய போனோம், “தம்பி நில்லுங்க, யார் நீங்க?, எங்க போறிங்க?”ன்னு கேள்வி. அடுத்த என்ன பஞ்சாயத்துன்னு பார்த்தா, ஒரு 70 வயது பெரியவர், அவர்தான் வீட்டுக்கு சொந்தக்காரர். அவர் கிட்ட நடந்தத எல்லாம் சொல்லி முடிச்சா, “என்கிட்ட கேட்காம உங்கள எப்படி தங்க வைக்கலாம், அவர் உடனே கூப்பிடுங்க”ன்னு கோபப்பட ஆரம்பிச்சிட்டார்.
நம்மளால அந்த நண்பர்க்கு எதுக்கு பிரச்சனைன்னு, கூடியமட்டும் முதல்ல அவர நாங்களே பேசி சமாதானப்படுத்திட்டு, அடுத்ததா அவருக்கு கைபேசில கூப்பிட்டு சொன்னோம். அவங்க இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசி சமாதானம் ஆனாங்க. பேசிக்கிட்டு இருக்கும் போதே என்ன நினைச்சாரோ, “மாடியில ஒரு வீடு சும்மாதான் இருக்கு, அடுத்த நாலு நாள் அதுல வாடகை குடுத்து இருந்துக்குறிங்களா?”ன்னார்.
எங்களுக்கு ஒரு பக்கம் பயங்கர மகிழ்ச்சினாலும், வாடகை எவ்வளவு கேட்ப்பாரோன்னு ஒரு சின்ன யோசனை, ஆனா அவர் எங்கள பேச மட்டும் இல்ல, யோசிக்கக் கூட விடல. நேர அந்த வீட்டு கதவ திறந்தாரு, வீட்ட காட்டிட்டு, உடனே சொல்லுங்கன்னு விடாம கேட்க ஆரம்பிச்சிட்டாரு. அப்படி இப்படின்னு யோசிச்சு, ஒரு நாளைக்கு 500ன்னு பேசி, அவர் கிட்டயே பாய், தலகானி, போர்வை எல்லாம் வாங்கிக்கிட்டு, பால் கூட காச்சாம, புது வீட்டுக்கு குடி போனோம்.
10 மணிக்கு கடை திறந்திரும்ன்னு, கிளம்பி போனோம். போற வழியில காலை சாப்பாட்டுக்கு ஒப்புட்டு சாப்பிட்டோம் (மதுரையில அத ‘போளி’ன்னு சொல்லுவோம்), சும்மா சொல்லக்கூடாது செமையா இருந்தது. சாப்பிடும் போதே, நண்பனும் நானும் புதுத் திட்டம் போட்டோம். “எப்படியும் நேத்து திருவண்ணாமலை போன பசங்க இன்னைக்குதான் கிரிவலம் போவாங்க, நாமளும் 11 மணி போல வேலைய முடிச்சிட்டு அங்க போயிறளாமே”.
சரி வேக வேகமா கடைக்கு போனா, பூட்டியிருந்தது. மறுபடி “கடை எப்பங்க தெறப்பீங்க”ன்னு வடிவேலு மாதிரி கேட்டா, இன்னைக்கு கடைய திறக்கவே மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க. சரிதான்ன்னு, நானும் நண்பனும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து சிரிச்சிக்கிட்டு வேற கடைய தேடி போனோம். அங்க இங்கன்னு விசாரிச்சு, ஒரு வழியா ஒரு கடைய புடிச்சு விவரங்கள் சொல்லி அச்சடிக்கக் கொடுத்தோம்.
கண்காட்சிக்கு போய் அந்த இரண்டு பேரையும் பார்த்து, பதாகை மதியம் 1 மணிக்கு வந்துரும் போய் வாங்கிக்கோங்கன்னு சொல்லிட்டு, கிளம்பலாம்ன்னு திரும்பும் போது. அந்த பசங்க எங்கக்கிட்ட, ஒருத்தர் இங்க இருக்க முடியுமான்னு கேட்டங்க, பாவம் அவங்க இரவு முழுக்க அங்கயே இருந்தாங்க போல. அவங்க அறை எடுத்திருந்ததும் 30 கி.மீ தள்ளி இருக்க ஆத்தூர்ல, அங்க போய் குளிச்சு கிளம்பி வரவே நேரமாயிடும். அதனால கொஞ்சம் உதவ முடியுமான்னு கேட்க, நம்ம நண்பன் அடுத்த நொடி தியாகியாகிட்டான்.
நான் கொஞ்சம் யோசிச்சேன், அப்பறம் தனியாவே திருவண்ணாமலை கிளம்பீட்டேன். முழுநிலவு நாள்கிறதுனால அங்க போற பேருந்து எல்லாமே பயங்கரக் கூட்டம், நேரடி பேருந்து கிடைக்கல. கள்ளக்குறிச்சி போய், அங்க அடிச்சு புடிச்சு ஒரு பேருந்துல இடம் புடிச்சு போனேன். ஆனா, ஏன்டா இந்த வண்டியில ஏறுனோம்ன்னு ஆயிடிச்சு. வண்டி ஆமைய மிஞ்சுற அபார வேகத்துல போச்சு, இதுல பத்து அடிக்கு ஒரு நிறுத்தம் வேற வந்துதது.
ஒரு கட்டத்துல பொறுமை இழந்து, பக்கத்துல இருந்தவர் கிட்ட, “வண்டி இன்னைக்கு இரவுக்குள்ள திருவண்ணாமலைக்கு போயிருமா”ன்னு கேட்டேன். அவர் சிரிச்சுட்டு “இந்த வண்டி அப்படித்தான் போகும் தம்பி கவலை படதீங்க, 3:30 மணி போல போயிடும்”ன்னு சமாதானப்படுத்துனாரு. எனக்கு பசி வேற, காலையில ஒப்புக்கு இரண்டு ஒப்புட்டு சாப்பிட்டதோட சரி. ஒருவழியா ஊர் ஊரா ஊர்ந்து போய், அவர் சொன்ன மாதிரியே 3:30 மணிக்கு இறக்கி விட்டாங்க.
பசங்க தங்கியிருந்த அறைக்கு போன உடனே கிரிவலத்த ஆரம்பிக்கலாம்ன்னு கிளம்பியாச்சு. நான், நீதியலங்காரம், அப்பறம் ஒரு நண்பர், மூனு பேரும் நடத்தோம். சீக்கிரமா நடந்து முடிச்சிட்டு சீக்கிரமா ஊருக்கு கிளம்பனும்ன்னு யோசிச்சோம், ஓரளவுக்கு வேகமா சுத்தியுமே, முடிக்க 4 மணிநேரம் ஆயிடிச்சு. சுத்தும் போது ரமணர் ஆசிரமத்துல மட்டும் நாங்க நல்லா நேரம் எடுத்துக்கிட்டோம்.
அது போக, மலைய சுத்தி 8 லிங்கங்கள் இருக்குது, அதுல குபேர லிங்கத்துல கூட்டம் அதிகமாவும், யமலிங்கத்துல கூட்டம் மிகவும் குறைச்சலாவும் இருந்தது. அத பார்துட்டு நம்ம நீதியலங்காரம், “பார்த்தியா, மக்களுக்கு உயிர் மேலயும், பணத்து மேலயும் எவ்வளவு ஆசை”ன்னான். உண்மைதான், ஆனா யாருக்குதான் இந்த இரண்டு ஆசையும் இல்லாம இருக்கு.
சுத்தி முடிச்ச
கையோட, அறைக்கு போய் பொருள எல்லாம் எடுத்துட்டு கிளம்பியாச்சு. திருவண்ணாமலை ஊர கடந்து
வெளிய வர்றதுக்குள்ள பெரும் பாடா போச்சு. கிரிவலத்துக்கு கூட்டம் வந்துக்கிட்டே இருந்ததால,
ஊர் முழுக்க அவ்வளவு நெரிசல். என்னைய 10 மணி போல கள்ளக்குறிச்சியில இறக்கி விட்டுட்டு,
அவங்க மதுரைக்கு கிளம்பினாங்க. நான் அங்க இருந்து பேருந்துல தலைவாசல் போக 11 மணி ஆயிடிச்சு.
தொடரும். .
.


No comments:
Post a Comment