Monday, 12 August 2013

எதோ எனக்கு தெரிஞ்சத சொல்றேன்!!!




சங்கதம் வலைப்பூவை படிக்க வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன், உங்கள் அனைவருக்கும் முகரனின் அன்பு வணக்கங்கள். பொதுவா கடந்த சில நாட்களாகவே, ஏன் மாதங்கள்ன்னு கூட சொல்லலாம், இல்ல ஆண்டுகள்ன்னே சொல்லுவோம், ஒரு வழியா ஒரு நூற்றாண்டு அப்படின்னே சொல்லி முடிச்சிருவோம், தமிழக மக்கள் இந்த பிரச்சனைய சந்திச்சிட்டு இருக்காங்க. இது முதல்ல நகரத்துல இருந்து துவங்கப்பட்ட ஒரு பிரச்சனைதான், ஆனால் நாளடைவுல இது பரவி கிராமங்களையும் ஆக்கரமிச்சு, இப்ப இது இல்லாத இடமே இல்ல அப்படிங்கற நிலைமையில இருக்கு. அந்த பிரச்சனை என்ன?, அதனுடைய தாக்கம் எப்படியெல்லாம் இருக்கு, அது என்னன்ன விதமா மாற்றம் அடையிது, அத பத்திதான் இப்ப பேச போறோம்.

“என்னடா? திடிருனு பிரபல தொலைக்காட்சில ஒரு விவாத நிகழ்ச்சில வர ‘அங்கி’ அணிந்த அறிவிப்பாளர் மாதிரி பேசுறே”ன்னு கேக்குறீங்களா. அடடே புரிஞ்சிக்கிடிங்களே, வாழ்த்துகள் நீங்க ரொம்பவே புத்திசாலிதாங்க. புரிஞ்சிக்க முடியாதவங்க தயவு செய்து நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள பார்த்து, உங்க அறிவ வளர்க்க முயற்சி பண்ணுங்க, சரிங்களா.

சரி நாம இப்ப சங்கதிக்கு வருவோம், மேற்ச்சொன்ன தொலைக்காட்சி நிகழ்ச்சிய தற்செயலா பார்த்தேன். அதுல “ஆங்கிலம் இன்றைய இளைய தலைமுறையின் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு முக்கியமானதா இருக்கு!” அப்படின்னு கருத்துரையாடல் நடந்துட்டு இருந்தது. அந்த மேடையில ஒரு பக்கம் பெற்றோர்கள், இன்னொரு பக்கம் குழந்தைகள் உட்காந்திருந்தாங்க. அந்த நிகழ்ச்சியில மனச பாதிச்ச நிறைய சங்கதிகள் நடந்தது.

எண்ணி ஒரு பத்து நிமிடம்தான் அந்த நிகழ்ச்சிய பார்த்திருப்பேன், ஆனா அதுக்குள்ளயே அங்க வந்திருந்த பெற்றோர்களும், பிள்ளைகளும் பேசுறத கேட்கும் போது என் மனசுல பலவிதமான உணர்ச்சிகள் வந்து போச்சு. சிலர் பேசுறத கேட்க்கும் போது அடங்காத கோபமும், சிலர் பேசுறத கேட்கும் போது வயித்தெரிச்சலும், அப்படியே குழந்தைகள் பேசும் போது அவங்க மேல பரிதாபமும் வந்துச்சு.

அங்க பேசுன பெற்றோர்களோட மொத்த கருத்து என்னன்னா, “என் பிள்ளை தமிழில் பேசக்கூடாது, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்”. அதுல ஒரு அம்மா பேசும் போது, அவங்களோட அறியாமைய நினைச்சு ரொம்பவே வேதனையா போச்சு. “நான் படிக்கவே இல்ல, ஆனா என் பிள்ளை படிச்சு என்கிட்ட ஆங்கிலத்துல பேசும் போது, அவன் என்னை முதல்முதலா ‘அம்மா’ன்னு கூப்பிட்ட போது வந்த மகிழ்ச்சிய விட, இது அதிகமா இருந்தது”, அப்படின்றாங்க. 

அதுக்கு மேல ஒருத்தர், “ coffee Day  போன்ற உயர் தரமான இடங்களுக்கு போகும் போது, என்னோட பிள்ளை ஆங்கிலத்துலதான் பேசனும்னு சொல்லி குடுத்து வளர்த்திருக்கேன். அப்படியும் பேச்சுக்கு ஊடால தவறிப் போய் ஒன்னு ரெண்டு வார்த்தை தமிழ்ல பேசுனா, நான் பயங்கரமா கோபப்படுவேன். என்னோட முகம் மாறுவத பார்த்த உடனே, என் பிள்ளை தானா ஆங்கிலத்துக்கு மாறிடுவா” அப்படினு ரொம்பவே பெருமை பொங்க சொல்றாரு.

ஒண்ணுமில்ல, பொதுவா தமிழ்நாட்டுல நிறைய பேருக்கு இருக்க அறியாமைதான் அங்க வந்திருந்த பெற்றோர்களுக்கும் இருந்தது. “ஆங்கிலம் பேசுறவன்தான் அறிவில் சிறந்த மேதாவி, அதனால நம்ம பிள்ளையையும் ஆங்கிலம் படிக்க வைக்கணும், பேச வைக்கணும்” அப்படிங்கற அறியாமை. தாராளமா இன்றைய பிள்ளைகள் ஆங்கிலம் படிக்கட்டும், அதுல பெரிய மேதையா கூட ஆகட்டும். அதுல எங்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை, ஆனா அதுக்காக தமிழ்ல பேசவே கூடாதுன்னு சொல்லி, பிள்ளைகள்கிட்ட ஆங்கிலத்த திணிச்சு, தாய் மொழிய வம்பா விரட்டாதிங்க.

பல பேர் பல தடவை சொல்லி சொல்லியே ஓஞ்சு போன ஒரு சங்கதிதான், “ஆங்கிலம் என்பது அறிவு இல்லை. அது ஒரு மொழி, அவ்வளவேதான்”. அதுல பேசுறவன்தான் அறிவாளின்னா, அதுக்கு எதுக்கு 14 வருடம் கிட்ட பள்ளிக்கூடத்துல படிக்கணும், அதுக்கு அப்பறம் சில வருடம் கல்லூரிக்கும், போய் நேரத்த வீணாக்கணும்?. அதான் முப்பதே நாள்ல நல்லா ஆங்கிலம் பேச கத்துத்தறேன்னு, முக்குக்கு முக்கு கடைய திறந்து வச்சிருக்காங்களே. அங்க போனா, ஒரு மாதத்திலேயே ஆகச்சிறந்த அறிவாளியா மாறிடலாமே?.

இன்னும் எத்தனை நாள்தான் தமிழ் தமிழ்னு இங்கயே இருக்கது எல்லாத்தையும் உடைச்சிட்டு வெளிய வரணும், அப்படினு ரொம்பவே புரட்சிகரமா சிந்திக்கிறதா நினைக்கிற பெற்றோர்களுக்கு ஒன்னு சொல்றேன். நீங்க உங்க பிள்ளைகள உங்களுக்கே தெரியாம ஒரு அடிமை சிறைக்குள்ள தள்ளிக்கிட்டு இருக்கீங்க. பிள்ளைங்களுக்கு தன்னோட தாய்மொழியில போதிய அறிவு இருந்தாத்தான், சுயமா சிந்திக்கிற அறிவு வளரும். சின்ன வயசுல இருந்து இந்த ஆங்கிலத்தையே கட்டி அழுதா, மனப்பாட திறமை மட்டும்தான் வளரும்.

இப்ப இருக்க போட்டி நிறைந்த உலகத்துல ஆங்கிலம் இல்லாம பிள்ளைகள் ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க. ஆங்கில மொழி அறிவும் தேவையே தவிர, அது மட்டுமே தேவைன்னு சொந்த மொழிய ஒதுக்கக்கூடாது. எனக்கு தெரிஞ்சமட்டும் பள்ளிக்கூடத்துல தமிழ் வழி படிச்ச பசங்க, கல்லுரிக்கு போன புதுசுல கொஞ்சம் திணறுனாலும், பிறகு அவங்கதான் ஆங்கிலத்தையும் உருப்படியா கத்துக்குறாங்க. ஆரம்பத்துல இருந்தே தமிழ்ல பேசுனா அடிக்கிறதும், அபராதம் போடுறதுமா இருக்க, ‘கொள்ளைகும்பல் மெட்ரிக்குலேசன் பள்ளி’கள்ல படிக்கிற பசங்க எல்லாத்துலையும் அரைகுறையாவே இருக்காங்க. இத நான் சொந்த அனுபவத்துல சொல்லறேன், நானும் ஆங்கில வ(லி)ழி கல்வி படிச்சவன்தான்.

அது நிதர்சனமான உண்மைதான், தமிழ் வழி கல்வி படிச்சவங்கத்தான், ஒரு துறைய தேர்ந்தேடுத்து அதுலயே நல்ல படியா போய், துறை சார்ந்த வேலைகள்ல இருகாங்க. ஆங்கில வ(லி)ழி படிச்சு, அத முழுசாகவும் கத்துக்காம, வெருமுனு பேச மட்டும் தெரிஞ்ச அறிவாளிகள் முக்கால்வாசி பேர் இப்ப “பிபிஓ (BPO)”கள்ல இரவு நேர பூசைதான் பாத்துட்டு இருக்காங்க. இத நானா சொல்லல, அண்மையில் வந்த சில ஆய்வுகள் சொல்லுது. 

நம்மளால எதை செய்ய முடியலையோ அதையெல்லாம் செய்யற எந்திரங்களா பிள்ளைகள தயவுசெய்து மாத்தாதீங்க. பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது நாமதான் சொல்லித்தரணும், அதுக்கு முன்னாடி நல்லது எது கெட்டது எதுன்னு நமக்கு போதிய அறிவு இருக்கணும். குழந்தைகளுக்கு அறிவ புகட்டுறேன்னு சொல்லி, நம்மளோட அறியாமையும், அடிமை புத்தியையும்தான் புகட்டுறோம். சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்கிற பிள்ளைக்கு, மொட்டை மாடியில நிலவா காட்டி சோறு ஊட்டுறதுக்கும். காலையில வேலைக்கு கிளம்புற அவசரத்துல, பிள்ளைங்க வாயில வம்பா சாப்பாட்ட திணிக்கிறதுக்கும் நிறையவே வித்யாசம் இருக்கு.

இதை படிச்ச உடனே, “வந்துட்டாங்கய்யா அறிவுரை சொல்லறதுக்கு, இந்த மாதிரி எல்லாம் தமிழ் தமிழ்னு பேசி, இவங்க ஒரு பெரிய அறிவாளி மாதிரியும், போராளி மாதிரியும் காட்டிக்கிறாங்க” அப்படினு நினைச்சிங்கன்னா அது உங்க தப்பு. ஒரு சக தமிழன பார்த்து “என்கூட தமிழ்ல பேசு”ன்னு சொல்ற நாங்க, எங்கள பெரிய அறிவாளியா காட்டிக்க முயற்சி பண்ணல, சாதாரண தமிழனா இருக்கோம் அவ்வளவுதான்.

ஒரு தாய் குத்துயிரும் கொலையுயிருமா சாகக் கிடக்கும் போது, வீட்டுல இருக்க பிள்ளைகள் சும்மா பாத்துட்டு இருக்கப்ப, ஒன்னு இரண்டு பேர் மட்டும் அவங்கள காப்பாத்த முயற்சி பண்றாங்க. இதுல பெற்ற தாயை காப்பாத்தாம, தெண்டமா இருக்கவன் கையாலாகாத முட்டாளே தவிர. அவளோட உயிர காப்பாத்த முயற்சி எடுக்குற ஆட்கள் பெரிய அறிவாளியோ, போராளியோ இல்லை, அவளோட பிள்ளைகள் அவ்வளவுதான். அதனால எங்களுக்கு அந்த மாதிரி பட்டமெல்லாம் கொடுக்காதிங்க, வேண்டாம்.

பல்லாயிரக்கணக்கான வருடமா சீரும் சிறப்புமா நிலைச்சு இருக்க நம்மளோட தமிழ் மொழிய, நாம இப்ப அழிவின் விளிம்புல நிறுத்தியிருக்கோம். ஏற்கனவே ஒரு பக்கம் தமிழர்கள் அழியிறத கண்ணுக்கு முன்னாடி பார்த்தும் காப்பாத முடியல, தமிழ் மொழியையாவது காப்பாத்துவோமே. இது வெறும் மொழி இல்ல நண்பர்களே, நம்மளோட தாய். கால மாற்றத்துக்கு ஏற்ப வாழுறோம்னு சொல்லி, பெற்ற தாயவே மாத்திக்க முயற்சிக்கிறது ரொம்பவே கேவலம்.        

No comments:

Post a Comment