Tuesday, 18 February 2014

தமிழ் ஐயா


மதுரை அமெரிக்கன் கல்லூரியில படிக்கிற வாய்ப்பு கிடைகிறது, கண்ண்டிப்பா ஒரு வரம் அப்படின்னுதான் நான் சொல்லுவேன். அது பழம்பெருமைகளோட, அருமையான நிலையில இருக்கும் போது படிச்சவன் நான். சமீப காலமா அங்க நடந்த சம்பவங்கள் அதனால அது அடைந்த நிலை, அங்க ஏற்கனவே படிச்ச எங்கள மாதிரி ஆட்களுக்கு ரொம்பவே வருத்தமான ஒரு சங்கதி. ஆனா இப்ப நான் எங்க கல்லூரிய பத்தி எழுதல, அத பத்தி எழுதனும்னு ஆரம்பிச்சா எழுதிக்கிட்டே போகணும். இப்ப நான் எழுத போறது அங்க எனக்கு அறிமுகமான ஒரே ஒரு மனிதர பத்திதான்.
     
அமெரிக்கன் கல்லூரி பாடத்திட்டத்தில, முதல் வருடம் முழுக்க ஆங்கிலம் கட்டாய மொழிப்பாடமா இருக்கும். இரண்டாம் வருடத்துல நாம ‘இந்தி’, ‘பிரெஞ்ச்’ அல்லது ‘தமிழ்’ இதுல எதாவது ஒன்ன தேர்வு செஞ்சுக்கலாம். எங்க வகுப்புல இருந்த ஐம்பது பேர்ல, நாங்க ஆறே பேர் மட்டும் தமிழ தேர்வு செஞ்சோம். அது போக மித்த துறையில இருந்து நிறைய பசங்க தேர்வு செஞ்சிருந்தாங்க.

முதல்நாள் தமிழ் வகுப்புக்கு நானும், நம்ம ‘யானமூஞ்சியும்’ போன போது வகுப்புல ஒரு பயலும் இல்ல, வாசல்ல யாரோ ஒரு பையன் மட்டும் இருந்தாப்புல. அந்த பையன வச்சுகிட்டே ‘யானமூஞ்சி’ “எவன் டா தமிழ் பாடம் எடுக்க வரப்போறா?”ன்னு என்னைய கேட்க, நானும் “எவன் வர்ரானோ தெரியலடா”ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். நம்ம ‘யானமூஞ்சி’ அந்த பையன் கிட்ட “நீ எந்த துறை?” அப்படின்னு கேட்கவும் அவர் நான் “தமிழ் துறை”ன்னு சொன்னாரு. உடனே ‘யானமூஞ்சி’, “தம்பி அப்போ உனக்கு தெரியுமே, எவன்ப்பா தமிழ் பாடம் எடுக்கப்போறது?”ன்னு கேட்டான். அதுக்கு அந்த பையன் சாதரணமா “நான்தான்”ன்னு பதில் சொன்னார். இப்படியா எங்களுக்கு ‘தமிழ் ஐயா’ அறிமுகமானதே சரியான கூத்துதான்.

‘முனைவர் உல.பாலசுப்பிரமணியன்’ தஞ்சாவூர் மாவட்டத்த சேர்ந்த கருப்பூர் கிராமத்துல, ஒரு விவசாய குடும்பத்துல பிறந்தவர். தமிழ் படிக்க விரும்பி இளங்கலை தமிழ்ல துவங்கி, தமிழ் இலக்கணத்துல முனைவர் பட்டம் பெற்றவர். ஆனா ஆள பார்த்த இதெல்லாம் ஒன்னும் தெரியாது, ரொம்ப ஒல்லியா, சாப்பாட்டுக்கு வழியில்லாத மாதிரியே இருப்பார். அதே மாதிரி இன்னைக்கு பார்த்தாலும் இருபத்தி அஞ்சு வயசு பையன் மாதிரிதான் இருப்பார். 

அவர் கூட பழகுறதே வித்தியாசமா இருக்கும், அதுவரைக்கும் ‘ஆசிரியர்கள்’ அப்படினாலே எனக்குள்ள இருந்த ஒரு பின்பத்த ஒடச்சு, எகுடுதிப்பா என்னை ஆச்சர்யப்படுத்துனவர். அவருக்கு பலதுறைகள்ல நல்ல அறிவு உண்டு. வெறும் தமிழ் மட்டும்ன்னு இல்லாம ஏகப்பட்டத தெரிஞ்சு வச்சிருப்பார், எதைப்பத்தியும் அவர்கிட்ட விவாதிக்கலாம். தெரிஞ்ச செய்திகளுக்கு எப்படி தெளிவுபட விளக்கம் தருவாரோ, அதே மாதிரி தெரியாத சங்கதிகள எந்த தயக்கமும் இல்லாம கேட்டு தெரிஞ்சுக்குவார். அவரோட வகுப்புகள்ல இருக்கும் போது, எனக்கும் அவர மாதிரி ஒரு ஆசிரியரா ஆகணும்னு ஆசை வரும். 

பாடம் சொல்லி தரும் போதுதான் ஆசிரியர், அவர எப்பவும் வம்புக்கு இழுக்குற ‘யானமூஞ்சி’க்கு நக்கலா பதில் சொல்லும்போதும், எங்க கூட கொடைக்கானல், அங்க இங்கன்னு சுற்றுலாவுக்கு வரும்போதும், அப்படியே எங்க நண்பர் கூட்டத்துல ஒருத்தரா மாறிடுவார். சொல்லப்போனா எனக்கு நண்பரா மாறுன முதல் ஆசிரியர் அவர்தான்.

அவருக்கு வாசிக்கிற பழக்கம் அதிகம். வீட்டுல ஒரு அறை முழுக்க புத்தகங்கள்தான் இருக்கும், ஏறக்குறைய ஒரு நூலகமே வச்சிருந்தார். என்னதான் எனக்கு முன்னாடியே புத்தகங்கள் படிக்கிற பழக்கம் இருந்தாலும், அப்ப நான் படிச்சது எல்லாம் வடநாட்டு புராணங்கள்தான். அவர் பழக்கத்துக்கு பிறகுதான் அறிவ வளர்க்குற புத்தகங்கள் நிறைய தேடி படிக்க துவங்குனேன். அதுபோக அவர்கிட்ட இருந்து ‘சே.குவேரா’ சுயசரிதை உட்பட சில புத்தகங்கள கடத்திக்கிட்டு வேற வந்திருக்கேன்.

அவரோட பழகும்போது எனக்கு கிடைச்ச அனுபவங்கள் ரொம்பவே புதுசு. எனக்கு எப்பவுமே நகர்புறங்கள்ல வாழ்ந்துதான் பழக்கம். என்னதான் எங்க ஊரச் சுத்தியே சின்ன சின்னதா நிறைய கிராமங்கள் இருந்தாலும், எங்கயாவது ஊருக்கு போகும்போது அத கடந்து போனதோட சரி, எங்கயும் தங்குனது இல்ல. அதை மாத்தினதும் அவர்தான், தன்னோட பரம்பரைக்கு சொந்தமான கோவில மராமத்து பண்ணி, அதோட குடமுழுக்கு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார், அதுக்கு பசங்களோட கருப்பூர் போனது ஒரு அருமையான அனுபவம்.

அந்த கோவில் இருந்தது வயக்காட்டுக்கு நடுவுல, நான் அந்த மாதிரி கோவிலுக்கு அதுவரைக்கும் போனதே இல்ல. வரப்புல, நல்ல இருட்டுல பயந்துகிட்டே நடந்து அவர் வீட்டுக்கு போனது. அங்க வழி இல்லாம ஏணி வச்சு ஏறி, ஓட்டு ஓரமா நடந்து மோட்ட மாடிக்கு போய் தூங்குனது. காலையில் ‘பம்ப்பு செட்’ல பசங்களோட ஆட்டம் போட்டதுன்னு, மறக்க முடியாத ஒரு பயணம் அது.

எல்லாத்துக்கும் உச்சகட்டமா, அவர எப்ப பார்த்தாலும் வம்புக்கு இழுகுற நம்ம ‘யானமூஞ்சி’ய அங்க கிறுக்கு பிடிக்க வச்சாரு. நாங்க எல்லாரும் வயக்காட்டுல கோவிலுக்கு பக்கமா உகாந்திருக்கும் போது, ‘யானமூஞ்சி’ய மட்டும் கூட்டிகிட்டு பக்கது ஊர் வரைக்கும் நடந்து போனார். போற வழியில அவன மட்டும் சுடுகாட்டுல விட்டுட்டு ஓடிட்டாறு, அதுவும் நல்ல கும்மிருட்டுல!. ஒரு பத்து நிமிடம் அவன தவிக்க விட்டுட்டு அப்பறம் கூட்டிகிட்டு வந்தார். பய திரும்பி வரும் போது செம கடுப்புல வந்தான், ஆனா அவரோ சிரிச்சிகிட்டே வந்து “நல்ல அரண்டுடான் டா”ன்னார்.

அவர் இதுவரைக்கும், “தொல்காப்பியக் கலைச் சொற்களஞ்சியம்” மற்றும் “சங்க இலக்கிய அறிமுகம்”ன்னு இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கார். அது போக, தமிழறிஞர் திரு ‘மு.அருணாசலம்’ அவர்கள் தமிழ் இசையோட வரலாற்ற பத்தி ஒரு விரிவான புத்தகமா எழுதி, அத வெளியிடுறதுக்கு முன்னாடியே இறந்துட்டார். அவரோட கையெழுத்து பிரதியா அந்த புத்தகத்த “தமிழ் இசை இலக்கிய வரலாறு” மற்றும் “தமிழ் இசை இலக்கண வரலாறு”ன்னு இரண்டு தொகுதிகளா பிரிச்சு, அத பதிப்பிச்சு வெளியிட்டார் நம்ம ‘முனைவர்’.

அவர் கூட அப்ப ஒரு சில சமயங்கள் இருந்ததால சொல்றேன், இந்த புத்தகத்த பதிப்பிக்க அவர் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமில்ல. அப்பதான் அமெரிக்கன் கல்லூரில பஞ்சாயத்துகள் உச்சகட்டதுல இருந்த சமயம், அவருக்கு பல மாசமா சம்பளமே வராம இருந்தது. ரொம்பவே இக்கட்டான சூழ்நிலையில இருந்தாலும், அத வெற்றிகரமா செஞ்சு முடிச்சாரு. இந்த வெற்றிக்கு பரிசா ‘மகாகவி பாரதியார் அறக்கட்டளை’யில் இருந்து ‘மகாகவி பாரதியார் விருது’ கடந்த 2011ல அவருக்கு கிடைச்சிது.

இப்ப வாழ்கை தேவைகளுக்காக நான் பெங்களூர் வந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமா அவர சந்திக்கும் சந்தர்பங்கள் ரொம்பவே குறைஞ்சு போச்சு. ஒரு வருடத்துக்கு முன்னாடி மதுரைக்கு போயிருந்தப்போ, திடிருன்னு அவரோட ஞாபகம் வந்து நம்ம ‘விஞ்ஞானி’ய கூட்டிகிட்டு கல்லூரிக்கு போனேன். ஆளு நல்லா அகப்பேய் சித்தர் மாதிரி நிறையா முடியும், தாடியும் வளர்த்துட்டு இருந்தார். “ஏன் இந்த கோலம்?”னு கேட்டேன், வெறும் சிரிப்பு மட்டும்தான் பதிலா வந்தது.
  
அவர பத்தி எழுத இன்னும் ஏகப்பட்ட சங்கதிகள் இருக்கு. ஆனா எனக்கு அவ்வளவு திறமை பத்தாது, இப்பவுமே அவர பத்தி உருப்படியா எழுதிருக்கேனான்னு கூட தெரியல. நான் அவருக்கு ஒரு நல்ல மாணவனா இருந்தேனான்னு தெரியல, ஆனா அவர் இப்பவும் எனக்கும், நம்ம பசங்களுக்கும் ஒரு நல்ல நண்பரகாவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருந்துட்டு இருக்கார். அதனால இப்போதைக்கு என்னோட ‘தமிழ் ஐயா’வுக்கு நன்றி சொல்லி முடிச்சுகிறேன்.


2 comments:

  1. Good Post! I have missed Tamil class when we were doing @ The American College! But still have met another good Professor Meenathchi Sundaram

    ReplyDelete