எனக்கு
புகைப்படங்கள் எடுப்பதில் நிறைய ஆர்வம் உண்டு, ஆனா அத விட அதிகமா பயமும் உண்டு.
நானா நிறைய இடத்துல, நிறைய பேர புகைப்படம் எடுத்திருந்தாலும், தொழில் முறையா
எடுக்க சொன்னா மறுத்துருவேன். எங்க நாம சரியா எடுக்காம போய்டுவோமோ!, அவங்களுக்கு
நாம எடுக்குறது புடிக்காம போய்டுமோ!, குறிப்பா நம்ம ஒரு அரைகுறை ஆர்வக்கோளாறுன்னு
வெளிய தெரிஞ்சிருமோனு ரொம்பவே பயம்.
என்னோட
இந்த பயத்தையும் போக்க ஒரு சந்தர்ப்பம் வந்தது, ஒரு கல்லூரி ஏற்பாடு பண்ணியிருந்த
பத்திரிக்கையாளர்கள் சந்திப்புல புகைப்படங்கள் எடுக்கனும்னு ஒரு வேலை வந்தது. என்கிட்டன்னு
தனியா வந்திருந்தா பயத்துல எதாவது சொல்லி கிளப்பி விட்ருப்பேன். ஆனால் என்னோட
நண்பர் அஜீத் மூலமா எங்க அலுவலகத்துக்கே வந்ததால, வேற வழியே இல்லாம நான் கண்டிப்பா
போக வேண்டியதாயிடிச்சு.
ஒரு
3 நட்சத்திர விடுதியில இந்த சந்திப்ப ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. என்னதான் வழி
சரியா தெரியமா சுத்தீட்டு போனாலும், அடிச்சு புடிச்சு நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு
ரொம்ப முன்னவே, அங்க முதல் ஆளா போய் சேர்ந்துட்டோம். அங்க போன பிறகும் பயத்துல
அவர்கிட்ட, “எதாவது தப்பானா ஒன்னும் பிரச்னை இல்லையே?”ன்னு கேட்டேன். நேத்திலருந்து இந்த கேள்விய நான் அவர்கிட்ட
நூறாவது முறையா கேக்குறேன். “அதெல்லாம் ஒன்னும்
தப்பா வராதுங்க”ன்னு, அவரும் சலிக்காமல் எனக்கு பதில் சொன்னாரு.
10 மணிக்கு
ஆரம்பிக்க வேண்டியது, மணி 10:15 ஆன போதும் கூட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தவிர யாருமே
இல்ல. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஆடி அசைஞ்சு எல்லாம் வந்து சேர்ந்தாங்க, ஒரு வழிய 10:30 மணி போல சந்திப்பும் துவங்குச்சு.
முதல்ல
புகைப்படக்கருவிய கைல வச்சிக்கிட்டு என்ன மாதிரி எடுக்க, எங்க ஆரம்பிக்க?ன்னு
தெரியமா முழிச்சிட்டு இருந்தேன். படம் எடுக்கத் தெரியாமா இல்ல, நமக்குத்தான் ஆரம்பம்
எப்பவுமே பஞ்சாயத்துல, அதான். ஒரு வழியா அங்க பத்திரிக்கைகள் சார்பா வந்த இன்னொரு
புகைப்பட கலைஞர் எடுக்க ஆரம்பிக்கவும், எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா கூச்சம் விலகுச்சு.
ஏட்டுல படிச்ச சங்கதிகள் எல்லாம் நினைவுக்கு வர, நானும் உருப்படியா சுரைக்காய் கிண்டினேன்,
அதாவது நிறைய கோணங்கள்ல வித விதமா புகைப்படங்கள் எடுத்து தள்ளினேன்.
முக்கியமா
எடுக்க வேண்டிய படங்கள் எல்லாம் ஓரளவுக்கு எடுத்து முடிச்சதும், என்னதான்
சொல்றாங்கன்னு ஒரு ஓரமா உட்காந்து கவனிக்க ஆரம்பிச்சேன். அவங்க கல்லூரியோட
சிறப்புகள், சாதனைகள், அதுல புதுசா அறிமுக படுத்தப்போற பாடத்திட்டம், அதனால
மாணவர்கள் மற்றும் சமுதாயத்துக்கு கிடைக்க போற நன்மைகள்ன்னு, நிறைய சங்கதிகள
கல்லுரி சார்பா ரெண்டு பேர் பயங்கர ஆர்வத்தோட சொல்லீட்டு இருந்தாங்க.
சேர்ந்தாப்புல
ஒரு 10 நிமிடம்தான் அத கேட்டேன், உட்காந்த இடத்துலேயே ஒரு சொருகு சொருகி விழ
தெரிஞ்சேன். படக்குன்னு சுதாரிச்சு எந்திரிச்சு, நம்மள யாரும் பார்க்குறாங்களான்னு
சுத்தில பார்த்தா, அவங்கள்ளயே ஒரு ஏலேட்டு பேரு என் நிலமையிலதான் இருந்தாங்க. மீதி
உள்ளவங்களும் பெருசா கவனிச்ச மாதிரி தெரியல.
இதுல
வந்த பத்திரிக்கையாளர்கள் எல்லாத்துக்கும் நுழையும்போதே குறிப்பெடுக்க குறிப்பேடு
வேற கொடுத்துவிட்டாங்க, ஆனா யாரும் அதுல ஒரு வார்த்தை கூட எழுதல. இவ்வளோ ஏன், பல
பேர் அத திறக்க கூட இல்ல. நிகழ்ச்சி, நான் எதிர்பார்த்தத விட வேகமாவே முடிஞ்சிது.
சந்திப்பு முடியும் போதும் கூட ரெண்டு, மூனு பேர் எதோ பேருக்கு சில கேள்விகள்
கேட்டாங்க அதோட சரி.
பொதுவா
பத்திரிக்கைக்காரங்க நல்லா உன்னிப்பா கவனிப்பாங்க, நிறைய கேள்வி கேப்பாங்கன்னுதான்
கேள்விப்பட்ருக்கேன். ஏன் என்னோட நண்பன் அரசகுமார் ஒரு பத்திரிக்கையாளன்தான், அவன்
எல்ல சங்கதிகளையும் கவனிக்கிறதும், அதோட உள்ளர்த்தங்கள புரிஞ்சிக்கிறதும் எங்கள்ல
இருந்து நல்லா வித்தியாசப்படும். இங்க என்னடான்னா, எல்லாம் தேமேன்னு உட்காந்து இருக்காங்கன்னு,
எனக்கு ஒரே வியப்பு.
“நாளைக்கு இந்த
செய்தி எல்லா செய்தித்தாள்லையும் கிளுகிளுன்னு வரப் போகுது போ”ன்னு எனக்கு நானே சொல்லீட்டு கிளம்ப ஆரம்பிச்சேன். சந்திப்பு
நடந்த விடுதியிலேயே சாப்பாடு ஏற்பாடு பண்ணிருந்தாங்க. சும்மா சொல்லக்கூடாது
சாப்பாடு நல்லாவே இருந்தது, நல்லா மனசா சாப்டேன்.
சாப்பிடும்
போது, இந்த வேலைய எங்களுக்கு ஏற்பாடு பண்ண நண்பர்கிட்ட, “ஏங்க நாளைக்கு உங்க கல்லூரியோட செய்தி செய்தித்தாள்ல
உருப்படியா வருமா?”ன்னேன். அவர், “அதெல்லாம் நல்லா
வருமே ஏன் கேக்குறிங்க”ன்னார். “இல்ல யாரும் ஏதும்
குறிப்பெடுத்த மாதிரி தெரியலையே அதான் கேட்டேன்”ன்னேன்.
அவர்
உடனே சிரிச்சிட்டு “அதெல்லாம் ஒண்ணுமே தேவையில்ல, நாளைக்கு எங்கள பத்தி என்னன்ன
போடணும்னு ஏற்கனவே அவங்க எல்லாருக்கும் அனுப்பி வச்சிட்டோம், அத அவங்க
போட்டுக்குவாங்க”ன்னார். நான் ஒரு மாதிரி முழிக்க, அவர் “அது போக வந்தவங்க எல்லாருக்கும் 3 நட்சத்திர விடுதியில
சாப்பாடு, அது போக ‘பிக் பசார்’ல ஐநூறு ரூபாய்க்காண
இலவச சீட்டு(coupon) தரோம்ல”ன்னார்.
நான்
மறுபடி அவர்கிட்டயே “நிருபர்கள் இந்த அளவுக்கா சும்மா இருக்காங்க, வேற ஏதும்
செய்தியே இல்லையா என்ன?”ன்னு கேட்டேன். “வேற ஏதும்
பெருசா செய்திகள் இல்லாதப்பதான நாங்க இந்த மாதிரி சந்திப்பெல்லாம் நடத்துவோம்,
அப்பதான நிருபர்கள் சும்மா இருக்கதுக்கு இதுக்காவது போவோம்ன்னு இங்க வருவாங்க”ன்னு முழு சங்கதியும் சொல்லி முடிச்சாரு.
நான்
வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா அரசகுமாருக்கு கைபேசில கூப்பிட்டு இது பத்தி
கேட்டேன். அவன் “எல்லா சந்திப்பும் இப்படி இருக்காது டா, அந்த கல்லூரிக்கு
விளம்பரம் தேவை பட்டிருக்கும், அதான் இந்த மாதிரி ஒரு சந்திப்பு ஏற்பாடு பண்ணிருப்பாங்க,
இதெல்லாம் எப்பவும் நடக்குறதுதான்”ன்னான்.
அடுத்த
நாள் காலைல நான் செய்தித்தாள புரட்டிக்கிட்டு இருக்கும்போது அதுல ‘நம் நாட்டின் கல்வி தரம் வரும் நாட்களில் வெகு சிறப்பாக
இருக்கும்’ன்னு போட்டிருந்தது, “அதுக்கென்ன,
ரொம்பவே சிறப்பா இருக்கும்!”ன்னு
நினைச்சிக்கிட்டேன்.

Nandru
ReplyDeletegood
ReplyDelete