Wednesday, 3 October 2018

ஒரு பயணம்… பல நினைவுகள்… (பாகம் 2)



எப்போ அசந்தேன்னு தெரியல, யாரோ மூஞ்சில தண்ணிய தெளிச்சு விட்ட மாதிரி இருந்துச்சு, என்னானு பார்த்தா, தர்மபுரி கிட்ட நல்ல மழை. முந்தின இருக்கையில இருந்த புண்ணியவதி சாளரத்த சரியா அவங்க இருக்கை நுனி வரைக்கும் மூடி வச்சிருந்தாங்க. அவங்களுக்கு கொஞ்சம் காத்தோட்டமும், எனக்கு மூஞ்சியில மழை சாரலும் வர்ரதுக்கு சரியா இருந்தது. அவங்கள எழுப்ப சங்டப்பட்டு, அவங்க பக்கத்துல தூங்கீட்டு இருந்தவர எழுப்பி (அவங்களுக்குள்ள என்ன உறவுன்னு தெரியல) சாளரத்த மூட சொன்னேன்.

இதே மாதிரி மூனு தடவை நடந்தது, நான் சொல்ல அவங்க கொஞ்ச நேரம் சாத்திவச்சிட்டு மறுபடி திறக்க, திரும்பவும் நான் எந்திருச்சு சொல்லன்னு, ஒரு சுழல் போயிக்கிட்டெ இருந்தது. ஒரு கட்டத்துல கடுப்பான அந்த புண்ணியவதி “தூக்கத்த கெடுக்காதிங்க”ன்னு ஒரு ‘முரட்டுத்தனமான முறைப்போட’ பக்கத்துல இருந்தவர பார்த்து திட்ட, அவரும் என்னை பார்த்து திருட்டு முழி முழிச்சாரு. நானும் தலையெழுத்து அவ்வளவுதான்னு தூங்குற முயற்சிய கைவிட்டேன், அந்த நேரத்துல கோபம் நிறைய வந்தது, சண்டை போட தோனல. ஆனா ஒன்னு நிச்சயம், கண்டிப்பா அந்த ஆளு அந்தம்மாவோட வீட்டுகாரர்தான்.

ஒரு வழியா 5-30 மணி போல பெங்களூரு வந்தேன், பொம்மனஹள்ளி இந்த பத்து மாசத்துல நிறையவே மாறிபோயிருந்துச்சு, எல்லாம் நம்ம மெட்ரோ புண்ணியம் (‘மெட்ரோ’விர்க்கு தமிழ் பெயர் தெரிந்தால் தயவு செய்து பகிரவும்). நான் இருந்த தெரு முக்குல இருக்க கடைகாரர் என்னை பார்த்ததும் மகிழ்ச்சியோட வரவேற்றார். அவர் கூட கொஞ்ச நேரம் பேசீட்டு நம்ம வண்டனோட மற்றும் அவனோட வீட்டுகாரம்மா தூக்கத்த கெடுத்தேன்.

வரவேற்புகள் மற்றும் நலம் விசாரிப்புகளுக்கு அப்பறம் அவன் எதார்த்தமா தாத்தாவ பத்தி கேக்க, நான் ‘நல்லா இருக்காரு’ன்னு சொன்ன அடுத்த நிமிடம் மின்சாரம் போயிடிச்சு. என்னடா இதுன்னு ஒரு பயம் மறுபடியும் வந்துச்சு, அப்பறம் மனசு “இல்லாத சகுனம் என்னடா பன்னிடும், விடு”ன்னு சமாதானம் சொல்லுச்சு. ஒரு மனிதன மூட நம்பிக்கைகள் வந்து ஆட்கொள்றது இந்த மாதிரி நேரத்துலதான. இந்த மாதிரி சமயத்துல கொஞ்சம் தெளிவா யோசிக்க ஆரம்பிச்சோம்ன்னா, அத கடந்து வந்திரலாம்.

இரவு முழுக்க குளிர்ல வந்தது வேலைய காட்ட, கழிப்பறைக்கு ஓடினேன். மின்சாரம் இல்லாததுனால கைப்பேசிய வெளிச்சத்துக்கு எடுத்துட்டு போயி, ஒரு சின்ன மேடை மேல வச்சுட்டு சிறுநீர் கழிக்கும் போது, ‘பொத்து’ன்னு ஒரு சத்தத்தோட கைப்பேசி பக்கத்துல இருந்த வாளி தண்ணிக்குள்ள விழுந்துருச்சு.


பதறி போயி அத எடுத்து பர்த்தேன், தொப்பலா நனைஞ்சு போயிருந்ததே தவிர நல்லாதான் வேலை செஞ்சிது. சரின்னு தொடச்சு எடுத்து மறுபடி பார்க்கும் போது, பழைய காலத்து படத்துல பாம்பு கொத்துனா மாறுர மாதிரி தொடுதிரை முழுக்க நீலநிறமாயிடிச்சு. நல்லா தொடச்சு, உதறி, காத்து ஊதின்னு என்னென்னமோ பன்னியும் எதுவும் வேலைக்காகல.

என்னை விட வண்டன் அதிகமா பதறுனான், அவன பொறுமையா இருக்கச் சொல்லீட்டு, அவன் கைப்பேசிய வாங்கி இதுக்கு தீர்வு தேடினேன். அதுக்குள்ள அவனே “அரிசி பானைக்குள்ள போட்டு வச்சா சரியாயிடும்”ன்னு சொன்னான். சொல்லி வச்ச மாதிரி நானும் அத ஒரு வலைதளத்துல பார்க்க, அதயே செஞ்சோம்.

ஒரு நாள் முழுக்க கைப்பேசி அரிசிக்குள்ளயே இருக்கனும்ன்னு போட்டிருந்திச்சு. ஆக, ஒரு நாள் முழுக்க கைப்பேசி கிடையாது, மித்த நாளா இருந்தா கூட பரவாயில்ல, அன்னைக்கு காலையில திருமணம் ஒரு இடத்துல, இரவு வரவேற்பு ஒரு இடத்துல, அது போக இரண்டு மூனு நண்பர்கல வேற பார்க்கப் போகனும், இதெல்லாம் கைப்பேசி இல்லாம கடினம்தான். இது எல்லாத்தையும் விட முக்கியமா தாத்தாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்க வீட்டுல என்னய தொடர்புகொள்ள முடியாது.

அரிசி பானைக்குள்ள மூடி வச்சுட்டு உட்காந்த போது “எப்படிங்க பதறாம, கோபப்படாம இருக்கீங்க, நானே இப்படி பதறீட்டேன்”ன்னு வண்டன் என்னை பார்த்து கேட்டான். உண்மையில எனக்கே அது வியப்பாத்தான் இருந்தது, அவன பார்த்து “என்னோட வீட்டுக்காரம்மா இல்லைல கோபத்த காட்ட”ன்னு சொல்லி சிரிச்சேன். அப்பதான் என்னோட மொத்த கோபத்தையும் வீட்டுக்காரம்மா கிட்ட மட்டும்தான் காட்டுறேன்கிற கசப்பான உண்மை எனக்குப் புரிஞ்சிது. “ஆணாதிக்கம்”கிற மிக மோசமான ஒரு பழக்கத்த என்னை அறியாம நல்லாவே பழகுறேன்.

அடுத்து என்னான்னு யோசிச்சு, வண்டன்கிட்ட வேற ஏதாவது கைப்பேசி இருக்கான்னு கேட்டேன், இல்லைன்னு சொன்னான். அவனோட கைப்பேசிய வாங்கி திருமணத்துக்கு வரப்போற நண்பர்கள் யார்கிட்டயாவது ஏதாவது கைப்பேசி கூடுதலா இருக்கான்னு கேட்டேன் அதுவும் இல்ல.

சரின்னு அவனோட கைப்பேசில இருந்து, அன்னைக்கு நான் பார்க்கப்போற நாண்பர்கள் எல்லாரோட கைப்பேசி எண்னையும் எழுதி கையில எடுத்துக்கிட்டேன் (எங்க இரண்டு பேருக்குமே பொதுவான நண்பர்கள், அதனால இந்த மட்டுக்கும் தப்பிச்சேன்). அப்படியே வீட்டுக்கும் கூப்பிட்டு நடந்ததச் சொல்லி, எல்லா எண்களையும் கொடுத்து, ஏதாவது அவசர செய்தி இருந்தா இவங்களுக்கு சொல்லுங்கன்னு சொன்னேன்.

குளிச்சு கிளம்பி திருமணத்துக்கு தயாரானா, எப்படி யார்கூட போறதுன்னு தெரியல. மூனு நாலு பேர் கூட பேசி, நிறையா குழம்பி (கைப்பேசி உபயம் வண்டன்), கடைசியா ஒரு தானிய புடிச்சி திருமணத்துக்கு போய் சேர்ந்தேன். திருமணம் ஒரு கோவில்ல ரொம்பவே எளிமையான முறையில நடந்தது, ஆட்கள் கூட கம்மியாதான் வந்திருந்தாங்க. பையன் மும்பை மலையாளி குடும்பம், பொண்ணு பெங்களூரு தமிழ் குடும்பம்.


ஏகப்பட்ட யோசனைகள், தடங்கல்கள் இருந்தாலும், எல்லாத்தையும் தாண்டி முக்கியமா வந்தது நண்பர் ‘சுஜி’காகத் தான், அவர் எனக்கு ரொம்ப நெருக்கம். அதுவும் இல்லாம, வேற மொழி மற்றும் மாநிலத்தச் சேர்ந்த பொண்ணக் காதல் பன்னி, அத பெத்தவங்கல ஒத்துக்க வச்சு, அவங்க சம்மதத்தோட திருமணம் பன்றது சாதாரன சங்கதியா என்ன?. 
- தொடரும்

1 comment:

  1. Flow semmayaa vanthirukku sir....

    ReplyDelete