Saturday, 30 April 2016

கலந்தாய்வும். . . கந்திதமும். . .


மனசு முழுக்க பரவசத்தோட பேருந்துல ஏறினேன். அது வரைக்கும் கும்பகோணத்துல, என்னோட தாத்தா வீட்டுக்கு மட்டும்தான் நான் தனியா போயிருக்கேன். முதல் முறையா நானும் என்னோட நண்பன் நீதியலங்கரமும் மட்டும் தனியா சென்னை கிளம்பினோம். இப்ப மாதிரி இல்ல, அப்ப சென்னையில நண்பர்கள் யாருமே கிடையாது, அதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை மட்டும்தான் சென்னை போயிருக்கேன், ஊரப்பத்தியும் ஏதும் தெரியாது. தெரிஞ்சது எல்லாம் கிண்டியில இறங்கி, பசுமைவழிச்சாலை போகணுங்கிறது மட்டும்தான். அதனாலேயே ஒரு பரவசத்தோட கிளம்புனேன், என்னதான் பரவசம் இருந்தாலும் உள்ளுர கொஞ்சம் பயம் இருந்தது.


வண்டி மதுரையை தாண்டுனதும், பக்கத்துல இருந்த நீதியலங்காரத்துட்ட எனக்கு எண்ணமோ கொஞ்சமா பயம் இருக்க தான் டா செய்யுதுன்னு சொன்னேன். அவனோ டேய் நானே பயப்படல, நீ ஏன்டா தேவைல்லாம பயப்படற, அதெல்லாம் சிறப்பா நடக்கும் கவலப்படாதன்னு சமாதானம் சொன்னான்.

சங்கதி இதுதான், இன்னைக்கு பெரிய வழக்கறிஞரா இருக்க நீதியலங்காரத்துக்கு, அப்ப சட்ட கல்லுரியில சேர்றதுக்கான கலந்தாய்வு சென்னையில நடந்துச்சு. அதுக்கு அவன் கிளம்பும் போது, அவனோட அம்மா நான் ரொம்ப ராசியான பையன்னு சொல்லி என்னையும் கூட கூட்டிட்டு போக சொன்னங்கலாம்.

ஏன்னா, அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான், அவங்க தபால் நிலையத்துல எங்க வீட்டு தொலைபேசி கட்டணத்த கட்ட போயிருந்தேன். முதல் ஆளா நான் கட்டி முடிச்சதும், அன்னைக்கு நிறைய பணம் வசூல் ஆனதாம். அதனால நான் கூட போனா, அவனுக்கு மதுரை சட்டக்கல்லூரியிலேயே நல்லபடியா இடம் கிடைச்சிடும்ன்னு அவங்க நம்பிக்கை. ஆனா எனக்கு அதுதான் பயமே, ஒரு வேலை அவனுக்கு இடம் கிடைக்கமா போனா அதுவும் என்னோட ராசின்னு ஆயிடுமோன்னு. ஆனால் என்னோட நல்ல ராசியெல்லாம் தாண்டி, நம்ம பய நுழைவு தேர்வுல நல்ல மதிப்பெண் வாங்கிருந்தான்.  


காலையில கிண்டியில இறங்கினோம். என்ன தான், ஏற்கானவே நான் சென்னை வந்திருந்தாலும், எங்க அத்தை வீட்டுல ஒருநாள் இருந்ததோட சரி, எங்கயும் பெருசா வெளிய போகவே இல்ல. அது போக அப்ப எனக்கு ரொம்ப சின்ன வயசு வேற. அதனால இது ஏறக்குறைய முதல் தடவை வந்த மாதிரிதான். கிண்டியில இருந்து ஒரு தானி பிடிச்சு பசுமைவழிச்சாலைக்கு கிளம்பினோம். போற வழியெல்லாம் ஆன்னு வேடிக்கை பார்த்துட்டே இருந்தேன். மதுரை மாதிரி ஊர்ல இருந்து சென்னை போகும்போது எல்லாருக்கும் வர ஒரு ஆச்சிர்யம்தான்.

பசுமைவழிச்சாலை வந்து சேர்ந்ததும், அங்க சட்ட பல்கலைக்கழகம் எங்க இருக்குன்னு நிறைய பேர் கிட்ட கேட்டு, அளாளுக்கு ஒரு வழி சொல்லி, அந்த சாலை முழுக்க குறுக்கும் நெடுக்குமா நடந்தோம். ரொம்ப குழம்பிப்போய் கடைசியா காவல் அதிகாரிகிட்ட கேட்டோம் அவர்தான் சரியான வழி சொல்லி, இடத்தை காட்டுனாரு. அப்ப இருந்து எப்பவுமே சென்னைல இடம் கண்டுபிடிக்கனும்னா, நேரா எதாவது ஒரு காவலாளிகிட்ட கேட்குறதுதான் வழக்கம்.

அப்பறமா, அங்க பக்கத்துல இருந்த ஒரு கட்டனக்குளியலறையில குளிச்சி கிளம்பி, சாப்பிட ஒரு இடத்துக்கு போனோம். அங்க ஒரு கூத்து, கை கழுவுறதுக்கு தானியங்கி குழாய் வச்சிருந்தாங்க, எனக்கோ அப்ப அப்படி ஒண்ணு இருக்கதே தெரியாது. குழாய எப்படி திறந்து கை கழுவுறதுன்னு அங்கயே 10 நிமிடம் நின்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தேன். நான் வருவேன்னு எனக்காக காத்துட்டு இருந்த நம்ம நண்பன், ஒரு கட்டத்துல பொறுமை இழந்து போய் என்கிட்ட வந்து டேய், சும்மா கைய நீட்டு, தண்ணி தானா வரும் சொல்லிக்கொடுத்தான். நான் உடனே எப்படி டா பின்னால இருந்து எவனும் திறந்து விட்றானா என்ன?ன்னு கேட்க. அது தானியங்கி டா, தற்குறி. சீக்கிரம் சாப்பட வான்னு திட்டிட்டு போனான். கைய கழுவி முடிச்சும் சந்தேகம் தீராம, குழாய்க்கு அந்த பக்கம் எவனாவது திறந்து விடுறனான்னு ஒரு தடவை போய் பார்த்துட்டு வந்தேன். அங்க வெறும் சுவர் தான் இருந்துச்சு.

ஒரு பத்து மணி போல, நம்ம நண்பன் கலந்தாய்வுக்கு உள்ளே போனான். கலந்தாய்வு நடந்த கட்டிடத்துக்கு வெளியில, கும்பலோட கும்பலா நான் உட்காந்திருந்தேன். உள்ள போனவன் 2 மணி நேரம் ஆகியும் வரல, என்னால அங்கிருந்து வேற எங்கயும் போகவும் முடியல. 


இப்ப மாதிரி, வெளிய வந்ததும் எனக்கு கூப்பிடுன்னு சொல்லிட்டு, பாட்டு கேட்டுக்கிட்டே விளையாடி பொழுதுபோக்க, அப்ப நுண்ணறி கைபேசியெல்லாம் கிடையாது. அவ்வளவு ஏன்?, அப்ப எங்க ரெண்டு பேர்கிட்டயுமே சாதாரண கைபெசி கூட கிடையாது. ஒரு வேலை நான் எங்கயாவது போன நேரம் பாத்து அவன் வந்துட்டான்னா, எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு அங்கேயே உட்காந்து கிடந்தேன், நல்ல வேலையா ஒரு வேப்பமரத்து நிழலும், ஊருல இருந்து எடுத்துட்டு வந்த ஒரு குமுதமும் கை கொடுத்தது.

என்னைய சுத்தீலும் நிறைய பெத்தவங்களா இருந்தாங்க. சொல்லப்போனா, வெளிய காத்திருந்தவங்கள்ல நான் ஒருத்தன் தான் சின்ன பையன் (அப்ப எனக்கு 19 வயசு). எனக்கு உடனே எங்க அப்பா ஞாபகம்தான் வந்தது. நான் ஒருவேளை அவர் ஆசைபட்ட மாதிரி பொறியியல் படிக்க போயிருந்தா, எனக்கு கலந்தாய்வு நடக்கும் போது, அவரும் இந்த மாதிரி உட்காந்து இருந்திருப்பர். நான் அவர மாதிரி பொறியியல் படிக்கலைன்னு, அவருக்கு ரொம்பவே வருத்தம். எனக்கு பொரி கூட திங்க புடிக்காது, இதுல எங்கருந்து நான் பொறியாளர் ஆகுறது. 

இவ்வளவு ஏன், இப்ப ஒரு மாசம் முன்னாடி நான் வீட்டுக்கு போனப்ப கூட எங்க அம்மா, நீ மட்டும் நாங்க சொன்ன மாதிரி பொறியாளர் ஆயிருந்தா எவ்வளோ நல்ல இருந்திருக்கும்ன்னு சொன்னங்க. இதுக்கு மேல நான் பொறியாளர் ஆகணும்ன்னா அதுக்கு ஒரே வழி தான், எப்படியாவது நான் கௌதம்மேனன் படத்துல கதாநாயகனா நடிச்சா தான் உண்டு.
                   
                                         - தொடரும்

2 comments: