Wednesday, 5 August 2020

என் ஒரு நாள்

செல்வேந்திரன் அவர்களின் “நகுமோ.. லேய் பயலே” புத்தக்கத்தை வாசித்து கொண்டிருந்தேன். அதில் ‘செல்வேந்திரனின் ஒரு நாள்’ கட்டுரையை படித்த போது, நாமும் இதை போல் எழுதினால் என்ன? என தோன்ற, எழுதத் துவங்கினேன். அவருக்கு வேலைகள் உண்டு, அதை பற்றி எழுதுகிறார். எனக்கு அப்படி எதுவுமே இல்லையே, எதை எழுதுவது?. சரி ஏதுமே இல்லாத ஒன்றை பற்றியும் எழுதித்தான் பார்ப்போமே என எழுதுகிறேன். தவறு எனில் தயவு கூர்ந்து பொறுத்தருள்க. 

காலை 5:45க்கு கைபேசியில் எழுப்புமணி அடிக்க ஆரம்பிக்கும், அதை இரண்டு அல்லது மூன்று முறை உறங்கச் செய்துவிட்டு, ஒரு வழியாக 6:30 மணி போல் எழுந்திரிப்பது. தூக்கம் முழுவதும் களைவதற்காக, படுக்கையில் அமர்ந்தபடியே படவரி, முகநூல், கீச்சகம் ஆகிய செயலிகளில் கால் மணி நேரம் செலவு செய்வது. (Instagram, Facebook, Twitter)

பிறகு ஒரு குடுவை தண்ணீரை குடித்துவிட்டு, அறை மணி நேரம் இரண்டு இருக்கைகளுக்கு இடையில் 8 வடிவ நடை. நடையின் போது, மீண்டும் படவரி, அதில் புகைப்பட கலைஞர்களின் படங்கள் மற்றும் படங்கள் எடுத்த முறைகளை பார்த்தல். இடையிடையே நடிக, நடிகைகளின் படங்கள் மற்றும் உடற்பயிற்சி ஆலோசனைகளை பார்ப்பது. அடுத்து புகைப்பட கலை பற்றிய பத்திரிக்கையை வாசித்தல்.

காலைக்கடன் மற்றும் குளியல் முடிந்து சிறிது நேரம் புத்தகம் வாசித்தல். அதற்குள் காலை உணவிற்கான அழைப்பு வரும். நான் தாமதிக்கும் நேரம் கூடக் கூட, அதற்கு ஏற்ற விகிதத்தில் என்னை அழைக்கும் சத்தமும் கூடும்.

உணவு வேலைகளில் மட்டும் தொலைக்காட்சி, அதுவும் நகைச்சுவை அல்லது செய்திகள் மட்டும். மற்றபடி தொலைக்காட்சியை அதிகம் பார்ப்பதில்லை. சமீபத்தில் தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பது கூட குறைய தொடங்கி விட்டது. தினசரி எண்ணிக்கையை பார்ப்பதைக் கூட நிறுத்தியாயிற்று.

காலை உணவு முடிந்த பின், இனையதள வகுப்புகள். சில புதிய சங்கதிகள் மற்றும் ஏற்கனவே படித்த பழைய சங்கதிகளை திரும்ப கற்றுக்கொள்ளும் முயற்சி. வகுப்பு என்றதுமே எப்போதும் போல் கண்ணைக் கட்டிக்கொண்டு வரும். வகுப்பு முடியும் தருவாயிலோ அல்லது முடிந்த பின்னரோ இருக்கையிலேயே தூங்கி வழிதல்.

நேரே கட்டிலுக்கு சென்று, ஒன்றிலிருந்து இரண்டு மணி வரை நல்ல உறக்கம். உறங்கும் போது யாரும் அறைக்குள் வந்து தூக்கத்தை தொந்திரவு செய்ய வேண்டாம் என, அறைக்குள் செல்லும் முன்னரே அனைவருக்கும் கட்டளை இடப்படும்.

உறங்கி எழுந்த பின் கணினியில், ஏதேனும் படமோ இல்லை நகைச்சுவை காட்சியையோ பார்த்தல். இதற்கு இடையில் மதிய உணவிற்கான அழைப்பு வரும். அதே போல தாமதிக்கும் நேரமும், அழைக்கும் சத்தமும் விகிதப்படி உயரும்.

முக்கால்வாசி நேரம், அப்போதுதான் தூங்கி எழுந்ததால் பசி பெரிதாக இருக்காது. ஆதலால், சாப்பாடு சிறிதளவுதான் செல்லும், அதுவும் வீட்டின் வசவுகளுக்கு பயந்துதான். அதன் பிறகு சிறிது நேரம் கைபேசியில் விளையாட்டு, முக்கால்வாசி நேரம் மட்டை பந்துதான்.

அடுத்து அறைக்கு வந்து ‘டூடுல்’ எனப்படுகின்ற கிறுக்கல் ஓவியங்களை வரைதல். அதில் அதீத ஆர்வம் இருப்பதனால், நிறைய நேரம் அதிலேயே ஓடும். ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்னும் முதுமொழி, எனது டூடுல்களின் மூலம் திறம்பட நிரூபிக்க பட்டு வருகிறது. இப்போதைக்கு, நிறைய அடுத்தவர் ஓவியத்தை பார்த்து வரையப்படுகிறது, கூடிய விரைவில் அனைத்தும் சொந்த கற்பனையில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிறகு முகநூல் மற்றும் கீச்சகத்தில் சில துணுக்குகள் மற்றும் அன்றைய நிகழ்வுகளை பார்த்தல். அடுத்து எதாவது எழுதுவது, இதைத்தான் எழுத வேண்டும் என்று எந்த வரையறையும் இன்றி எதையாவது எழுதி, குறைந்தது ஒரு பக்கத்தையாவது நிரப்பவது. அது கட்டுரையா, கவிதையா, கதையா இல்லை வெறும் கிறுக்கலா எதுவும் தெரியாது.

மாலை நேரத்தில் சில பல சிற்றுண்டிகள், மற்றும் நொறுக்குத் தீனிகளை கொறித்தல். அந்தி சாய்ந்ததும் தம்பிகள் மற்றும் நண்பர்களுடன் கேரம் எனப்படும் சுண்டாட்டப் பலகை விளையாடுவது, இல்லை அரட்டை அடிப்பது. தம்பிகள் தனியாக சிக்கினால் பழங்கதைகள் மற்றும் அறிவுரைகள் என்ற பெயரில் அறுவையை போட்டு அவர்களை ஒடச் செய்வது.

பிறகு ஏதாவது ஒரு படம் பார்த்தல். இரவு உணவுக்கான அழைப்பு வரும், உணவை முடித்து விட்டு மீதி படத்தை பார்த்தல். படம் முடிந்ததும் படுக்கை. அங்கு மனைவிக்கு கதை சொல்லும் படலம். அது முடிந்த பின், கைபேசியில் நிசப்தம், செல்வேந்திரன் போன்ற சில வலைபதிவுகளை கண் சொக்கும் வரை வாசித்தல், பின்பு உறக்கம்.

இவை அனைத்தும் எனது கொரோனா கால செயல்பாடுகள். அதற்கு முந்தய நாட்களில், மாலை முதல் இரவு வரை நண்பர்களுடன் மதுரையின் பல பகுதிகளில் உலா வருதல். அந்த ஒன்றை தவிர கொரோனா ஊரடங்குக்கு முன்பும் பின்பும் வாழ்வில் எந்த மாறுதலும் இல்லை.

“வெளிசத்துல இருக்கவன்தான் டா, இருட்ட பார்த்து பயப்படனும். நான் இருட்டுலயே வாழ்றவன்!...”

2 comments:

  1. நல்ல பொழுதுபோக்காக இருந்தது

    ReplyDelete