கடந்த மூன்று பதிவுகளா கூடிய மட்டும் யாரையேல்லாம் வம்புக்கு இழுக்கலாமோ அத்தனை பேரையும் இழுத்தாச்சு. இப்போ மட்டும் என்னோட கதைய எழுதல, பல பேர்க்கிட்ட நான் சாத்து வாங்கவேண்டியதுதான். ஆனா என்னோட காதல் கதை எப்படி துவங்கி எப்படி முடிஞ்சதுன்னு எனக்கே இன்னைய வரைக்கும் சரியா புரியல, இந்த லட்சணத்துல அத உங்களுக்கு எப்படி புரியவைக்க.
சும்மா இருக்காம நானும் என்னோட உறவுக்கார பொண்ண காதலிச்சேன். சரி காதலிச்சுடேன் அத அந்த பொண்ணுகிட்ட சொல்லணுமே, நாம வேற சும்மாவே வீரமான ஆளு. பயந்துக்கிட்டே மூனு வருடமா சொல்லவே இல்ல, வழி தெரியாம வழக்கம் போல நண்பர்கள்கிட்ட போய் நின்னேன். பசங்களும் சளைக்காம பல நல்ல யோசனை சொல்லத்தான் செஞ்சாங்க, நான் எல்லாத்தையும் சொதப்பீட்டேன். நேர்ல சொல்லத்தான் முடியல ஒரு கடிதம் எழுதி கொடுன்னு நம்ம 'நீதியலங்காரம்' சொன்னான், என்ன செய்ய இந்த யோசனைய கூட நமக்கு யாராவது சொல்லணும். கடிதம் என்னமோ எழுதிட்டேன் ஆனா அத கொடுக்கத்தான் முடியல.
இப்படியே போனா இவன் சொல்லவே மாட்டான்னு கடுப்பாகி போன பசங்க 'நாய் சேகரோட' ஆளவச்சு தொலைபேசில அந்த பொண்ணுகிட்ட சொல்ல வச்சுட்டாங்க. பதில் என்னமோ தெரிஞ்சதுதான், அவ ஒத்துக்கல. நானும் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு பேசாம இருந்துட்டேன். ஆனா நானே விடச்சொன்னாலும் நம்ம 'நாய் சேகரும்' அவனோட ஆளும் விடுறாப்பல இல்ல. அந்த சகோதரி எனக்காக மாசக்கணக்குல அவகிட்ட பேசுனாங்க, ஆனா ஒன்னும் வேலைக்காகல.
ஒருநாள் நானும் நம்ம 'நீதியலங்காரமும்' நல்ல மழையில ஆத்துப்பக்கம் போகும் போது நம்ம 'நாய் சேகர்' வீட்டுக்காரம்மா திடீருன்னு கைபெசில கூப்பிட்டு, "உங்க ஆளு சம்மதம் சொல்லீட்டாங்க" அப்படின்னு ஒரே ஆனந்தமா சொன்னங்க. நான் அத சுத்தமா நம்பவே இல்ல, ஏன்னா அவகிட்ட பேசுனது முழுக்க நம்ம சகோதரிதான், நானா ஒரு தடவ கூட இத பத்தி பேசவே இல்ல. நேர்ல அவகிட்ட கேட்குறதுக்கு வேற தயக்கம், பயம்ன்னு கூட சொல்லலாம், உடனே நம்ம 'நீதியலங்காரம்' அபாரமா ஒரு யோசனை சொன்னான்.
என்னன்னா " நீ பேசும் போது அவளோட கண்ண பாரு, உன்னோட கண்ண பார்க்க முடியாம அவ திணறுனா கண்டிப்பா உன்னதான் காதலிக்கிறா". நானும் அத கேட்டுட்டு போய் வெறிச்சு அவ கண்ணையே பார்த்துக்கிட்டு இருந்தேன், "ஏன்டா இப்படி முழிக்கிறேன்னு" திட்டு வாங்குனதுதான் மிச்சம். இப்படியே ஒரு வாரம் போக, ஒரு நாள் உசிர கைல பிடிச்சுக்கிட்டு தொலைபேசில "உன்ன காதலிக்கிறேன்னு" ஒருவழியா சொல்லி அவகிட்டயும் அதே பதில வாங்கிட்டேன்.
இந்த காதல சொல்லுரதுலத்தான் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி முயற்சிகள் பண்றான், ஆனா காதல் கை கூடுனதுக்கு அப்பறம் எல்லா பயலும் ஏறக்குறைய ஒரே பாதைலதான் போவானுங்க. நான் மட்டும் என்ன வித்யாசமாவா செய்ய போறேன் அதேதான், தெண்டமா கடலை போடுறது, எங்கயாவது வெளிய போறது, போற இடங்கள்ல நான் மட்டுமே செலவு பண்றது, கொடூரமா கவிதைகள் எழுதுறது, மற்றும் இத்யாதிகள். உதவுறதுக்கும் நம்ம நண்பர்கள் மட்டும்ன்னு இல்லாம சில சகோதரிகளும் இருந்தாங்க.
நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு, திடீருன்னு ஒரு நாள் கைபேசில கூப்பிட்டு "மறந்துரு, எனக்கு மூனு மாசத்துல திருமணம் நடக்க போகுது" அப்படின்னு சொல்லீட்டு வச்சுட்டா. அப்பவும் நான் அசரல எப்படியாவது வீட்ட சம்மதிக்க வச்சுரனும் அல்லது ஓடிப்போயாவது திருமணம் பண்ணியே தீருவதுன்னு ஒரு முடிவுல இருந்தேன். ஆனா அதுக்குள்ள அந்த புனியவதி ஊரு முழுக்க "எனக்கு ஒன்னும் தெரியாது, அவன்தான் காதலிக்க சொல்லி கொடுமை படுத்துறான்னு" ஒரே போடா போட்டா.
இதுல என்ன கொடுமைன்ன என்னோட அப்பா அம்மா கூட என்னை முழுசா நம்பல, அப்படியே உடைஞ்சு போயிட்டேன். நானும் யார்கிட்டயும் நம்ப வைக்க முயற்சி பண்ணல, இது என்ன கொலை வழக்கா நான் ஒரு தப்பும் பண்ணலைன்னு நிரூபிக்க. அதுவும் இல்லாம நம்ம ஊர்ல எந்த காலத்துல பசங்கள நம்பிருக்காங்க, அவுங்கள பொறுத்த வரை பொண்ணுங்களுக்கு பொய் சொல்ல தெரியாது.
பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு, அப்ப பசங்க மட்டும் இல்லேன்னா இந்நேரம் கண்டிப்பா கிறுக்கனாத்தான் சுத்திக்கிட்டு இருப்பேன். எதுக்குமே கலங்காத நம்ம 'ஆங்.அரச குமார்' மற்றும் 'நீதியலங்காரம்' மாதிரியான ஆட்கள்ல இருந்து 'நாய் சேகர்' மாதிரியான ஆட்கள் வரைக்கும், என்னோட தோல்விக்காக கலங்குனாங்க. எனக்கே எனக்கா இத்தனை நண்பர்கள் கூட இருக்கும் போது, கேவலம் என்னோட வீணாப்போன காதலுக்காக நான் ஏன் கலங்க போறேன்.
இவ்வளவு ஆனதுக்கு பிறகு கூட எனக்கு சில பெண்கள் மேல ஈர்ப்பு வந்திருக்கு, ஆனா அவுங்கக்கிட்டயெல்லாம் நான் பேசுறது கூட இல்லையே, தெளிவா கழண்டு வந்துருவேன். போதும், ஒரு தடவ வாங்கு பட்டதே பல நாள் தாங்கும், "வாழ்க்கை என்பது ஒரு அனுபவம் தானே".
correctu inaiku mazhai vara mathiri tha iruku
ReplyDelete