நம்மோட வாழ்க்கை பயணம் ஒரு பக்கம் என்ன ஏதுன்னு தெரியாம போய்க்கிட்டு இருந்தாலும், வாழ்க்கைல நாம போற பயணங்கள் என்னைக்குமே சுவாரசியமானதுதான். ஒவ்வொரு முறையும் நமக்கு அது எதாவது ஒரு புது அனுபவத்த கண்டிப்பா கொடுக்கும். குறைந்தபட்சம் தான் போனதுல ஒரு பயணமாவது பிடிக்காத ஆட்கள் யாரையும் இதுவரைக்கும் நான் பார்த்ததில்ல. என்னதான் பயணங்கள் குறிப்பா சாலைவழி பயணம் சிலருக்கு சரிவராதுன்னாலும், அத மிகவும் விரும்புவாங்க. நம்ம ‘ம.மன்னன்’ முக்கால்வாசி பயணத்துல வாந்தி எடுத்துருவான், ஆனா அவன் அதுக்காக எங்கயும் வரமாட்டேன்னு சொன்னதே இல்ல.
எனக்கு பயணங்கள் எப்பவுமே பிடிச்ச ஒரு சங்கதி, நண்பர்களோட போன உல்லாச பயணத்துல இருந்து வீட்ட விட்டு ஓடிப்போன திகில் பயணம் வரை நிறைய நினைவுகள். அதுலயும் சின்ன வயசுல அப்பா அம்மா கூட ‘திருவள்ளுவர்’ அப்படின்னு அழைக்கப்படுற சொகுசு பேருந்துல அடிக்கடி போற பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். இத்தனைக்கும் அது லோடலோடன்னு அந்துநொந்துபோய் ஓடுனாலும் இருக்கை கொஞ்சம் பெருசா, பின்னாடி சாயிர வசதியோட, சாதாரண பேருந்த விட நல்ல இருக்கும். அப்போ அதுல போறது பெரிய சமாச்சாரம் வேற.
சாலைவழி பயணங்கள் அப்படினாலே நமக்கு உடனே நினைவுக்கு வர்றது பேருந்துகள்தான். எப்பவுமே நாம ஒரு பயணத்த துவங்கும் போது பேருந்து நிலையத்துக்கு போய் நல்ல வண்டியா, படம் போடுவாங்களா, எப்ப எடுப்பாங்கன்னு நிறைய பார்த்துதான் ஏறுவோம். ஆனா நம்ம தி.திமிங்கலம் ஒரு பேருந்துல போறதுக்கு, அந்த வண்டியோட வண்ணபூச்சுல இருந்து ஓட்டுனரோட வங்கிக்கணக்கு வரைக்கும் சரியா இருக்கணும். இதுக்கு மேல நம்ம ‘வங்கி வசங்கண்டவன்’ எப்பவும் சாதாரண அரசு பேருந்துல ஏறவே மாட்டான், சொகுசு பேருந்து அல்லது தனியார் பேருந்துலதான் ஏறுவான். ஒருநாள் காரணம் கேட்டதுக்கு அவன் சொன்ன பதில் இதுதான் “டேய் அது பாடை மாதிரி இருக்கு டா, நாம வேற வண்டில போவோம்!”.
சீருந்துகள்ல(car) போற பயணம் பேருந்துல போறத விட வித்தியாசமானது. அதுல எல்லாமே நம்ம வசதிதான், அலுங்காம குலுங்காம போகலாம். எந்த வழியாவும் போகலாம், குறிப்பா போகும் போது வழியில எதாவது நல்ல காட்சிகள் வந்துச்சுன்னா அங்க நிறுத்திக்கலாம். என்ன! சில சமயங்கள்ல நிறைய பேரோட ஒரு சின்ன வண்டில அடச்சுக்கிட்டு போக வேண்டியிருக்கும் அதுதான் இம்சை. நான் மொதமொதல்ல சீருந்துல போகும் போது நாலு பேர் உட்காரக்கூடிய வண்டில பத்து பேர் போனோம். அந்த பயணத்துல நான் கடைசி வரைக்கும் ஓட்டுனர் இருக்கைக்கும் அதுக்கு அடுத்த இருக்கைக்கும் நடுவுல ஒட்டிக்கிட்டேதான் போனேன்.
என்னதான் சாலை வழி பயணத்துல ஆயிரம் வசதிகள் இருந்தாலும், தொடர்வண்டில போறது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்னு. என்னைய மாதிரி குட்டி பிள்ளைகள்ல இருந்து உங்கள மாதிரி பெரியவங்க வரைக்கும் வயசு வித்யாசம் இல்லாம எல்லோரும் அதுல போகத்தான் அசை படுறோம். அதுவும் நண்பர்களோட போனமுன அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. சும்மாவா கின்னஸ் விருது வாங்க துடிக்கும் பல்கலை வித்தகர் “தேசிங்கு ராஜேந்தர்” அட அவர்தாங்க நம்ம “விஜய.டி.அர்”, அவரே “ரயில் பயணங்களில்” அப்படின்னு படம் எடுத்திருக்காருனா பாத்துக்கோங்க.
என்னைக்குமே பேருந்துகள விட தொடர்வண்டிகள் கலகலப்பா இருக்கும், தொடர்வண்டில தான் எல்லாரும் நல்ல பேசிகிட்டு வருவாங்க, ஆனா பேருந்துல போகும் போது எல்லாரும் எதோ எழவு வீட்டுக்கு போற மாதிரி கம்ம்முன்னு வருவாங்க. என்ன! இப்பெல்லாம் தொடர்வண்டிலகூட நம்ம கூட வர்ற சக பயணிகள்கிட்ட பேசுறது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுக்கிட்டு வருது. எங்க வண்டில ஏறுன உடனே காதுல கட்டு கம்பிய மாட்டிகிட்டு பாட்டு கேட்க தொடங்கிர்றோம்.
இதுல வேற சில திருடர்கள் செய்யிற வேலையினால, கூட வர்ற எல்லாரையும் சந்தேகமாதான் பார்க்க வேண்டிய இருக்கு. இப்படிதான் ஒரு தடவ சென்னைல இருந்து போய்க்கிட்டு இருக்கும் போது எனக்கு முந்தின இருக்கைல வந்த குட்டி பையன் என்கிட்ட நல்ல விளையாடிக்கிட்டே வந்தான். அப்பறமா நான் பசிக்குதேன்னு, வச்சிருந்த ஈரட்டிய(biscuit) எடுக்க அவன் வேணும்ன்னு கேட்டான், உடனே அவனோட அம்மா படாருன்னு அவன எங்கிட்ட இருந்து வாங்கிக்கிட்டாங்க. எனக்கு ஒருமாதிரி ஆகிப்போய் அத சாப்பிடாமலே வச்சுட்டேன்.
விமான பயணம் எல்லாரும் போக ஆசைபடுற ஒன்னு. ஆனா நான் விமானத்துல போகும் போது (போனதே விபத்துதான்) பாதி உசிரா, மிகுதியான வலியோட எப்படா மருத்துவமனைக்கு போவும்ன்னு போனதால அந்த பயணத்த அவ்வளவா அனுபவிக்க முடியல. என்ன விமானம் தரையிறங்கும் போது நான் வலியில முனங்குரத பார்த்து பக்கத்துல இருந்தவர் “ஒன்னும் ஆகாது பயப்படாதீங்க” அப்படின்னு ஆறுதல் சொன்னாரு. அடடா எவ்வளவு நல்ல மனிதர், ஆமா இவருக்கு எப்படிடா நமக்கு உடம்புக்கு சரியில்லேன்னு தெரியுமுன்னு யோசிச்சப்பறம்தான் தெரிஞ்சது, அவர் நான் விமானத்துல வர பயப்புடுறதா நினைச்சு சொல்லிருக்காரு!. சாகுற நிலைமைல கூட அடுத்தவங்ககிட்ட அசிங்கபடாம இருக்கவேமாட்டோம் போலன்னு நினைச்சுக்கிட்டேன்.


Characteristic and improvising. Am becoming fan of your writing man.....
ReplyDelete