சமீபத்துல ஒரு புத்தகத்த பார்த்தேன் அதோட பேர் ‘திருமண கையேடு’, இது
என்னடா கண்றாவீன்னு திறந்து பார்த்தா, திருமணத்துக்கு அப்புறம் எப்படியெல்லாம்
நடந்துகனும்ன்னு விளக்கமா சொல்லுறாங்களாம். வர வர இந்த ‘சுய முன்னேற்ற
புத்தகங்கள்’ அப்படிங்கற பேர்ல சிலர் அடிக்கிற கூத்து தாங்க முடியல. ‘வெண்பொங்கலாக
இருங்கள்’, ‘தனது துண்டை விற்ற துறவி’ அப்படி இப்படின்னு ஏகப்பட்ட புத்தகங்கள்
வழியா, சாப்பாட்டுல இருந்து சங்கு ஊதுற சங்கதி வரைக்கும் ஆளாளுக்கு அறிவுரை
சொல்லுறாங்க. புத்தகங்கள்ன்னு இல்ல சில இணையதளங்கள்ல இருந்து வார இதழ்கள் வரைக்கும்
இதே அக்கப்போறுதான்.
அதுக்குன்னு எதுஎதுக்கு அறிவுரை சொல்லுறதுன்னு இல்லயா, இப்படித்தான்
ஒரு புத்தகத்துல “உங்க துணைக்கு ஒருநாள்ல குறைஞ்சது பத்து முறையாவது ‘ஐ லவ் யு’
சொல்லுங்க, அப்போதான் உங்க வாழ்க்கை ஒளிமயமா இருக்கும்” அப்படின்னு இருக்கு. அதுல
போட்டிருக்க மாதிரி நடக்கனுமுன்னா எல்லார் வீட்லயும் தினமும் சுவத்துல பால்
கணக்குக்கு கோடுபோடுற மாதிரி கோடுபோட்டு கணக்கு வச்சாதான் உண்டு. இப்ப எல்லாம்
பெத்த அப்பா அம்மாவ ஒதுக்கிவச்சுட்டு, பிறந்த பிள்ளைய வளர்க்கத் தெரியாம
‘குழந்தையை நன்றாக வளர்ப்பது எப்படி’ புத்தகம் படிக்கிறது நிறைய தம்பதிகளுக்கு நடைமுறையா
போச்சு.
சரிங்க எல்லாப்பயலும் ஒரே மாதிரி யோசனை சொன்னக்கூட தேவலையே, ஒவ்வொருத்தரும்
ஒவ்வொன்னு சொல்றாங்க இதுல எத செய்றது. வெற்றி கிடச்ச கொண்டாடுங்கன்னு ஒருத்தர்
சொன்னா, இல்ல தோல்வியைத்தான் கொண்டாடனும்ன்னு இன்னொருத்தர் சொல்றார். அட
ஆன்மிகத்துல கூட ஆசையே படாதீங்கன்னு ஒருத்தர் சொன்னா, எல்லாத்துக்கும் ஆசைப்படுங்க
அப்படிங்குறார் இன்னொருத்தர். நடுவுல நம்மள மாதிரி படிக்கிறவுங்க பாடுதான் பெரும்
பாட போகுது.
எனக்கு ஒரு சந்தேகம் மனசுல அறிச்சுக்கிட்டே இருக்கு, இந்த புத்தகத்த
படிச்சா நம்ம ஒரு நல்ல நிலைமைக்கு முன்னேறி ஊரே பாராட்டும் படியா வருவோம்ன்னு
சொல்லுறாங்களே. அப்பறம் அத எழுதுன ஆட்கள் ஏன் இன்னும் முன்னேறாம இருக்காங்க,
எனக்கு தெரிஞ்சு அவுங்களே அத பின்பற்றுனா எதிர்மறையாதான் விளைவுகள் வருது. இப்படிதான்
‘கதவ திறங்க காத்து வரும்’ சொல்லிக்கிட்டு திரிஞ்ச ஒருத்தர், தெரியாத்தனமா அவரோட
கதவ ஒருநாள் திறந்து வைக்க, கண்டதும் வெளிய வரலையா!.
படிக்க வேண்டியது, தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு அதையெல்லாம்
படிக்காம, ‘எளிய வாழ்வுக்கு எட்டாயிரம் சிந்தனைகள்’ படிக்கிறது அவசியமா சொல்லுங்க.
வாழ்க்கையோட அழகே நாம அடிபட்டு, அதுல அனுபவத்த கத்துக்கிட்டு எதையும்
செய்யிறதுதான், அத விட்டுட்டு நம்ம பசங்க காதலிக்கிறதுக்கு கூட கையேடு தேடுறது
கேனத்தனமா இருக்கு.
பின் குறிப்பு:
மக்கள் இந்த மாதிரி புத்தகங்களுக்கு தர்ற அமோக
வரவேற்ப பார்த்துட்டு நானும் ஒரு புத்தகம் எழுத போறேன். அதாவது நம்மளோட தினசரி உணவ
சிந்தாம எப்படி சாப்பிடுவது அப்படிங்கறத 108 எளிய முறைகள்ல விளக்குது என்னுடைய இந்த ‘சிந்தாமல்
சாப்பிடுவது எப்படி’ புத்தகம். இந்த அரிய புத்தகத்தை வாங்க நினைக்கும் வாசகர்கள்
எனது கைபேசிக்கு தொடர்புகொள்ளவும், கைபேசி எண் தெரியாதவர்கள் என்னிடம் நேரில்
வந்து கைபேசி எண்னை பெற்றுக்கொள்ளவும்.
நல்ல முன்னேற்றம் :)
ReplyDeleteenna mo ponga....i am waiting for your book... :)
ReplyDeleteFabulous comment on Worst Self-Help Books!
ReplyDeleteGet me a copy of "Sindhaamal Saapituvadhu Eppadi!" :-)
Super...I'm waiting for the book....
ReplyDeletePhilosopher?
ReplyDelete