Wednesday, 8 February 2012

கேள்விகளும்? திட்டுகளும்!


வணக்கம் நண்பர்களே பல நாள் கழிச்சு வந்திருக்கேன், அதுவும் சில  முக்கியமான கேள்விகளோட வந்திருக்கேன்.

வழக்கமா நான் ஆங்கில புத்தாண்ட கொண்டாடுறது இல்ல, யாருக்கும் பெருசா வாழ்த்து சொல்லுறதும் இல்ல. நம்மள பொறுத்த வரை அது ஒரு விடுமுறை நாள் அவ்வளவுதான், ஆனா இந்த வருட ஆங்கில புத்தாண்டுக்கு நிறைய சங்கதிகள் நடந்தது. அதுல மகிழ்ச்சியான சங்கதி அண்ணைக்கு என்னோட மாமாவுக்கு பையன் பிறந்தான்.

நண்பர்கள்கிட்ட இந்த செய்திய பகிர்ந்துக்கும் போது, நம்ம “சின்ன முழி சித்தன்” ஒரு பொன்மொழிய உதிர்த்தான், ‘புத்தாண்டு அண்ணைக்கு பொண்ணு பிறந்த இன்னும் நல்ல இருக்கும் டா, பொண்ணு பிறந்தா லெட்சுமியே வீட்டுக்கு வந்த மாதிரி’ன்னு சொன்னான்.

இத கேட்ட உடனே எனக்கு ஒன்னும் புரியல, என்னங்க பண்றது சின்ன வயசுல இருந்தே நமக்கு அறிவு கொஞ்சம் மந்தம். அதனால சாதாரணமா புரிஞ்சிக்க கூடிய சங்கதிகள் கூட, எழுவது கேள்வி கேட்ட பிறகு தான் புரிஞ்சிருக்கு. இப்பவும் அதே மாதிரிதான் மேற்கு நாட்டு ஆங்கில புத்தாண்டுக்கும், வடநாட்டு லெட்சுமிகும் என்ன சம்மந்தமுன்னு ஒரே குழப்பம்.


நம்ம வாய் சும்மா இருக்குமா அவன்கிட்டயே விளக்கம் கேட்டேன். அதுக்கு அவன் எல்லாரும் இப்படி தான் சொல்லுவாங்கன்னு சொல்லிட்டு, நீ சரியில்ல வர வர எதுக்கெடுத்தாலும் காரணம் கேக்குறன்னு திட்டிட்டு போய்ட்டான். சரி இது நமக்கு என்ன புதுசான்னு விட்டுட்டேன்.

அப்பறமா வீட்ல, பிறந்த பயலுக்கு பெயர் வைக்கிறது பற்றி விவாதம் நடத்துக்கிட்டு இருந்தது. நான் நல்ல தமிழ் பெயரா வைக்கனுமுன்னு  சொல்லிக்கிட்டு இருந்தேன், உடனே சிலர் ‘இவன் ஒருத்தன் என்னமோ பெரிய தமிழ் புலவர் மாதிரி’ன்னு திட்டுனாங்க. இதுல என் தங்கை வந்து தமிழ் பெயர் எல்லாம் ஒரே பழையகாலத்து பெயரா இருக்கு அதனால வேண்டாம்ன்னு சொல்லுரா. இப்ப என்ன நம்ம தப்பா சொல்லிட்டோம்ன்னு கடுப்பாகிப்போய் வீட்ட விட்டே கிளம்பிட்டேன்.

அங்கிருந்து நம்ம நண்பர் ஒருத்தர் வீட்டுக்கு போயிருந்தேன். நம்ம நேரத்துக்கு அங்க தொலைகாட்சில ஒரு படம் ஓடிகிட்டு இருந்தது அதோட பேர் கூட ‘எதையோ தாண்டி குத்திச்சு வருவியா’ன்னு வருமே. நமக்கு வேற தமிழ தவிர வேற எந்த மொழியும் தெரியாதா, அந்த படம் பல இடத்துல புரியவேயில்ல.

சரின்னு அந்த நண்பர் கிட்ட ‘ஏங்க இவர் தமிழ்ல படம் எடுக்கவே மாட்டாரா?’ கேட்டுட்டு, ‘ஒரு ஆங்கில அகராதி இருந்த குடுங்க, இல்லேன்னா நீங்களே அர்த்தமாவது சொல்லுங்க.’ன்னு சொன்னேன். உடனே உனக்கெல்லாம் ரசிப்பு தன்மையே இல்ல, வர வர அரசியல்வாதி மாதிரி பேசுறன்னு, அவரும் திட்டினாறு. என்னடா இன்னைக்கு முழுக்க யார்கிட்டயாவது திட்டு வாங்கிடே இருக்கோமேன்னு நினைச்சிகிட்டு பேசாம அங்கிருந்தும் கிளம்பிட்டேன்.

சரி பேசுனாதான வம்பு வருது, யார்கிட்டயும் பேசவேண்டாம்ன்னு முடிவெடுத்து வீட்டுக்கு போய்க்கிட்டு இருந்தேன். திடிருன்னு கைபேசி அலறுச்சு, யார்ன்னு பார்த்த நம்ம “நீதியலங்காரம்”. இவன் என்ன சொல்ல போறானோன்னு யோசிச்கிட்டே பேசுனேன். ஒரு இடத்துல இருந்து வர வழி கேட்டான், நான் சொல்லிக்கிட்டே இருக்கும் போது ‘ஒ அந்த பறியல் கிரௌண்ட்(Burial ground) பக்கமா வருமே அந்த தெருதானன்னு சொன்னான், நானும் ஆமா டா அந்த சுடுகாட்டுக்கு பக்கத்துல வர்ற தெருவுல திரும்பி வாடான்னேன்’.

உடனே அவன் ‘டேய் நான் எவ்வளவு நாகரிகமா ‘பறியல் கிரௌண்டு’ன்னு சொன்னேன், நீ என்னடான்னா சுடுகாடுன்னு சொல்லுறியே என்னமோ போ’ அப்படின்னு சொல்லி திட்டுனான், எனக்குனா ஏகச்சக்க கடுப்பு இன்னைக்கு இருந்த மொத கோபத்தையும் அவன் மேல காட்டிட்டு அழைப்ப துண்டிச்சுட்டு வீட்டுக்கு போய் தூங்கிட்டேன்.

சரி இப்ப என்னோட கேள்வி என்னன்னா தமிழ்நாட்டுல ஒரு தமிழன், பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைக்க சொன்னா அவன் புலவன், தமிழ்ல படம் எடுக்க சொன்னா அவன் ஒரு அரசியல்வாதி, எல்லாத்துக்கும் மேல தமிழ்ல பேசுனா அவன் நாகரிகம் இல்லாதவனா? நீங்களே பதில் சொல்லுங்க.

2 comments:

  1. Nandru mama .nammalam namma pasangaluku tamil peru tan vaipoam mama

    ReplyDelete
  2. Tamil is our language. It should be learnt and understood to realize the beauty in old Tamil scripts so for. I am writing all these things in english. That doesn't mean I am avoiding Tamil. In my case I am not using Tamil, much for all my written communications. Similarly We can learn any number of languages and use them with purpose. Nothing wrong in it. There is a common myth among most of the Indian (especially South Indian) minds that if few common words are expressed in English then it is a decent otherwise not. Few examples are like Toilet instead of 'Kalipparai' then 'Burial Ground' instead of 'Sudukaadu'. We can continue to list ample amount of examples like the above. Nothing is wrong with English and Tamil as languages but with People misunderstanding the the very basics of what a language is all about? Communicate/Express
    Nothing more! Nothing less!

    ReplyDelete