நாட்டுல
என்னன்னமோ அதிசயங்கள் நடக்குது, அதுல ஒன்னா, இரண்டு வருடங்களுக்கு முன்னாடி எனக்கும்
திருமணம் நடந்தது. இந்த இரண்டு வருடத்துல என்னோட வருமானம் முன்ன பின்ன இருந்ததைத்
தவிர, வேற ஏதும் தொல்லைகள் இல்லாம, திருமண வாழ்க்கை சுமூகமா நல்லாவே போயிட்டு
இருந்தது.
ஆனா
நம்ம ஊர்லதான் ஒரு நியதி இருக்கே, திருமணம் முடிஞ்ச ஒரு வருடத்துக்குள்ள பிள்ளை
பெத்து போட்டுறனும், இல்லேன்னா அது பெரிய குத்தம். எனக்கோ கொஞ்சம் நாள் அவகாசம்
தேவை பட்டது. குழந்தை பெத்து வளர்க்குற அளவுக்கு பணமும் இல்ல, அதுக்கான பக்குவம்
இருக்கான்னும் தெரியல. நானே திருமணம் ஆகியும் எங்க அப்பா தயவுல வாழ்க்கைய
ஓட்டிட்டு இருக்கேன்.
இந்த
காரணத்தை எல்லாம் கூடி பேசி நானும் என்னோட வீட்டுக்காரம்மாவும், கொஞ்ச நாள் பிள்ளை
பெத்துக்குறத தள்ளி வச்சிருந்தோம். இத பத்தி எங்க ரெண்டு பேர் வீட்டுலையும் தெளிவா
சொல்லவும் செஞ்சோம், அதனால வீட்டுல அமைதியா இருந்தாங்க. ஆனாலும் மழை விட்டாலும்
தூவானம் விடாதுன்னு சொல்லுவாங்களே, அது மாதிரி வீட்டுக்கு வர்ற சில சொந்தங்கள் “என்னப்பா உன்
பொண்டாட்டி இன்னும் சும்மாவா இருக்கா?”ன்னு
ஆரம்பிச்சிட்டு கிளம்பிருவாங்க. அப்பறமா நாங்க ரெண்டு பேரும், வீட்ட அமைதியாக்க
பேரும் பாடு படுவோம்.
இப்படியாப்பட்ட
சூழ்நிலையில என்னோட மச்சானுக்கு (வீட்டுக்காரம்மாவோட அண்ணன்) ஒரு ஆண் குழந்தை
பிறந்தது. ‘வெறும்
வாய மென்டவங்களுக்கு அவல் கிடைச்ச மாதிரி’,
அதுவரைக்கும் அடக்கிவாசிச்சவங்க பல பேர் எனக்கு இன்னும் குழந்தை இல்லாததை பத்தி
பேச ஆரம்பிச்சிட்டாங்க. “இவங்களுக்கு
வேற வேலையே இல்ல”ன்னு,
நான் இத பெருசா எடுத்துக்கல, பொறுமையா இருந்துட்டேன். ஆனா என் பொறுமைய சோதிக்கிறதுக்கும்
ஒரு நாள் வந்தது.
ஒரு
திருமணத்துக்காக நானும் என்னோட வீட்டுக்காரம்மாவும் கும்பகோணத்துக்கு, என்னோட
மாமனார் வீட்டுக்கு போனோம். திருமணம் முடிஞ்ச மறுநாள் விடியக்காலைல என்னை எழுப்பி
கோயிலுக்கு போகணும், ஒரு வேண்டுதல் இருக்குன்னு கிளம்ப சொன்னாங்க. நானும் குளிச்சி
கிளம்பி என் வீட்டுக்காரம்மாகிட்ட போய் “என்ன
காலங்காத்தால எழுப்பி கிளம்ப சொல்றாங்க, அப்படி என்ன வேண்டுதல்?”ன்னு கேட்டேன். அவ
ஒரு மாதிரி முழிச்சா, பக்கத்துல இருந்த எங்க அம்மாச்சி “உங்களுக்கு இத்தன
நாளாயும் குழந்தை இல்லைல, சீக்கிரம் குழந்தை பிறக்கணும்னு வேண்டிதான் பா”ன்னு சொன்னாங்க.
‘அடப்பாவிகளா, அப்படி
எத்தன நாளாச்சு, திருமணம் முடிஞ்சே ரெண்டு வருடம்தானய்யா ஆகுது’ன்னு மனசுக்குள்ள
நினைச்சிகிட்டேன். சரி எதுக்கு இப்ப பஞ்சாயத்துன்னு பேசாம அவங்களோட போனேன்.
கும்பகோணம் பக்கத்துல இருக்க திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கு கூட்டிடு
போனாங்க, அது குழந்தை பிறப்புக்கு வேண்டுறதுக்குன்னே இருக்க கோயிலாம். ஒரு வழியா செய்ய
வேண்டிய சடங்கெல்லாம் செஞ்சு முடிச்சு கிளம்புனோம். ஒரு குடுவையில நெய் குடுத்து
அத 48
நாள் எங்க ரெண்டு பேரையும் சாப்பிட சொன்னாங்க.
வீட்டுக்கு
வந்ததும், என்னோட அம்மாச்சி என்னை உட்காரவச்சு ஒரு அரை மணிநேரம், குழந்தையின்மை
பற்றியும், அந்த நெய்ய சாப்பிட்டா எப்படி சீக்கிரம் குழந்தை பிறக்கும்ன்னும், நிறைய
அறிவுரைகள் சொன்னங்க, கடுப்போட கேட்டுட்டு வந்தேன். நான் அங்கிருந்து நகண்டதும், என்னோட
வீட்டுக்காரம்மாக்கு தனியா ஒரு ‘வகுப்பு’ நடந்தது.
எனக்கு
கோவம் தலைக்கேறி, அத அவங்க கிட்ட காட்டவும் முடியாம வீட்டுக்கு வெளிய வந்து, எங்க
அம்மாக்கு கைபேசில கூப்பிட்டு, “என்னமா
இங்க ஒரே இம்சையா இருக்கு”ன்னு
கத்துனேன். உடனே அவங்க “டேய்
கத்தாத டா, நான்தான் இதெல்லாம் செய்ய சொன்னேன், நாங்களும் எத்தன நாள்
காத்திருக்கிறது”ன்னு
சொல்லிட்டு. அவங்க ஒரு, அரை மணி நேரம் அறிவுரை சொல்லி முடிச்சாங்க. “டேய் மாதவா உன்னால
முடியதுன்னே முடிவு பண்ணிட்டாங்க போல டா”ன்னு
ஜனகராஜ் மாதிரி எனக்கு நானே புலம்பீட்டு வீட்டுக்குள்ள போனேன்.
யார்கூடவும்
பேசாம நேரா எங்களோட அறைக்குள்ள போய் கதவ சாத்தீட்டேன். சரி கொஞ்ச நேரம்
தொலைகாட்சியாவது பார்ப்போம்ன்னு போட்டேன், அத போட்டதும் ஒரு அம்மா நல்ல கணீர்
குரல்ல “குழந்தையின்னமை
பிரச்னையா, அரும்பாக்கம் வந்தீங்கன்னா, அஞ்சே நிமிடத்தில் உங்களுக்கு குழந்தை
பிறந்திடும்”ன்னு
சொல்லிட்டு இருந்தாங்க. ‘அட
போங்க டா இங்கயும் இதானா’ன்னு
கடுப்புல அதையும் அமத்தி போட்டு அமைதியா உட்காந்துட்டேன்.
கொஞ்ச
நேரத்துல எங்க அப்பத்தா கைபேசில கூப்பிட்டாங்க. அவங்க எனக்கு கூப்பிடுறது இது தான்
முதல் முறை, போன தடவை ஊருக்குப் போன போது என்னோட கைபேசி எண்ண எழுதி கொடுத்துட்டு
வந்தேன். கைபேசிய எடுத்து “என்ன
அப்பத்தா, எப்படி இருக்கீங்க”ன்னு
கேட்டேன்.
“நான் நல்லா இருக்கேன்
டா, நீ திருக்கருகாவூர் போனியாம்ல, நல்லது டா. அங்க கொடுத்த நெய்ய ரெண்டு பேரும்
தினமும் சாப்பிடுங்க, அப்பத்தான் எதாவது நல்லது நடக்கும்”ன்னு சொல்லி அவங்க
பங்குக்கு கொஞ்சம் கடுப்பேத்துனாங்க. நான் அடுத்து பேசுறதுக்குள்ள அவங்களே “ஆமா உன்
பொண்டாட்டிக்கு எதாவது பிரச்னை இருக்கான்னு பாத்தியா?”ன்னு கேட்டாங்க.
இருந்த வெறுப்புல “ஆமா
இருக்கு, எவனாவது நல்லா சம்பாதிக்கிறவன பார்த்து கட்டிக்காம, என்னைய போய்
கட்டிக்கிட்டா. அதான் அவளுக்கு இருக்க ஒரே பிரச்சனை. வைங்க!!!”ன்னு கத்திட்டு வச்சுட்டேன்.
கடுப்பு
தலைக்கேறி போய் என்ன செய்யன்னு தெரியாமா, அப்படியே அறைகுள்ளயே உக்காந்து
கிடந்தேன். பழைய வார இதழ் ஒண்ணு கண்ணுல மாட்டுச்சு, சரின்னு கட்டில்ல சாஞ்சு அத
புரட்ட ஆரம்பிச்சேன். சிவபெருமான் தன்னோட கனவுல வந்தத பத்தி ஆதீனம் கொடுத்த பேட்டி
இருந்துச்சு, அத படிச்சிட்டு இருந்தேன். கனவ பத்தி படிச்சதுனாலையா, இல்ல காலைல
இருந்து அலைஞ்ச அலுப்பானு தெரியல துக்கம் கண்ண கட்டிக்கிட்டு வந்தது. யார் யார்
கனவுலயோ வர சிவபெருமான் இப்ப நம்ம கனவுல வந்தா நல்லா இருக்கும்னு யோசிச்சிட்டே
அசந்துட்டேன்.
கனவுல சிவன் வருவாருன்னு பார்த்தா, அவருக்கு பதிலா அவரோட
பேர்ல இருக்க சேலம் சித்த வைத்திய தாத்தா வந்துட்டாரு. “டேய்
நாசமா போயிராதிங்க டா, ஒழுங்கா என்கிட்ட வந்துருங்க டா, உங்கள வேற யாரும்
காப்பாத்த முடியாது டா”ன்னு
கண்ணாடிய மாட்டிக்கிட்டு கதற ஆரம்பிச்சிட்டாரு. பதறி போய் படாருன்னு எழுந்து
உட்கந்துடேன்.


:D :D - Senthil Kumar AC
ReplyDeleteSo sad!!!!!
ReplyDeleteGood one. I like the way you have expressed whay you went through. Lot of people go through this and we can hope this to change may be when we are grand or great grand fathers ☺
ReplyDelete