Saturday, 28 May 2016

கலந்தாய்வும். . . கந்திதமும். . . (பாகம் 2)



ஒரு வழியா மதியம் ஒரு மணி போல, நண்பன் வெற்றி செய்தியோட வெளியில வந்தான். முதல் வேலையா வீட்டுக்கு தொலைபேசில கூப்பிட்டு சொன்னோம், அவனோட அம்மா என்னோட ராசி பத்தி உயர்வா சொன்னாங்க. என்னோட நண்பன் நல்ல படிச்சு, நுழைவுத்தேர்வுல நல்ல மதிப்பெண் வாங்கி, எனக்கு (என்னோட ராசிக்கு) நல்ல பேர் வாங்கி தந்தான். அங்கிருந்து மதிய சாப்பாடு சாப்பிட கிளம்பினோம், பேசிக்கிட்டே திரு.வி.க பாலத்த தாண்டி வந்தோம். சரியான வெயில், சென்னை வெயில் பத்தி கேள்விபட்டிருக்கேன், ஆனால் அனுபவிக்கிறது அதுதான் முதல் முறை, சட்டையெல்லாம் நினைஞ்சு போச்சு.


வெந்து போய் உணவகத்துக்குள்ள நுழைச்சதும், முதல் வேலையா முகம் கழுவலாம்ன்னு, வேகமா தண்ணிகுழாய தேடி போனேன். காலைல மாதிரி அசிங்க படகூடாதுன்னு, முதல்ல குழாய் எப்படி இருக்குன்னு பார்த்தேன், நல்ல வேலையா சாதாரண திருகு வச்ச குழாய் தான். அப்பாடான்னு நல்லா தண்ணிய திறந்து முகத்துல தெளிச்சேன், தண்ணி பட்டதும் முகமெல்லாம் காந்திருச்சு, அப்படியே கடல்ல இருந்து நேரடியா வந்த தண்ணி போல. காலைல இருந்து எனக்கும் தண்ணி குழாய்க்கும் ராசியே இல்ல.

என்னதான் சாப்பட உட்காந்தாலும், வெயிலுக்கு சரியா சாப்பிடவும் முடியல, ரெண்டு பேருமே அரையும்குறையுமா சாப்பிட்டு, அடுத்து என்ன செய்யன்னு யோசிக்க ஆரம்பிச்சோம். “உடனே ஊருக்கு கிளம்புறதா?, இல்ல சும்மா ஊரு சுத்திட்டு, இரவுக்கு கிளம்புறதா”ன்னு நீதியலங்காரம் கேட்டான். அடிக்கிற வெயிலுக்கு பகல்ல ஊருக்கு கிளம்ப வேணாம்ன்னு திட்டவட்டமா சொல்லிட்டேன். ஆனா அதுவரைக்கும் எங்க போறது, என்ன பண்றதுன்னு தெரியல. அப்பறமா பம்மல்ல இருக்க என்னோட அத்தை வீட்டுக்கு போகலாம்ன்னு முடிவு பண்ணி, அங்க கிளம்புனோம்.

அத்தை வீட்டுக்கு போய், அங்க 7 மணி வரை இருந்தோம். குறிப்பா நல்லா சாப்ட்டோம், கொஞ்சம் நல்ல தண்ணீ குடிச்சோம். திரும்பி வரும் போது பம்மல்ல இருந்து பல்லாவரம் வரைக்கும் ரெண்டு பேரும் பேசிகிட்டே நடந்து வந்தோம். நண்பர்கள் கூட பேசிகிட்டே நடை போறது, இன்னைக்கு வரைக்கும் எனக்கு வாழ்கையில ரொம்ப பிடிச்ச சந்கதிகள்ல ஒன்னு. அதுக்கு தோதா என்னோட நண்பர்கள்ல முக்கால்வாசி பேர், எவ்வளோ தூரம் வேணும்னாலும் சளைக்கமா நடப்பாங்க.

அப்பறம் பல்லாவரத்துல இருந்து மின்தொடர் வண்டில எழும்பூர் வந்து சேர்ந்தோம். அதுக்கு முன்னாடி ‘அக்னிநட்சத்திரம்’ படத்துலதான் எழும்பூர் ரயில்நிலையத்த பார்த்திருக்கேன், அங்க போய் இறங்குனதுல இருந்து “ராஜா ராஜாதிராஜன் இந்த ராஜா”ன்னு கன்றாவியா பாடிக்கிட்டே வந்தேன். ரொம்பவே பொறுமையா வந்த நம்ம நண்பன், ஒரு கட்டத்துல கடுப்பாகி “டேய் இப்ப பாட்ட நிறுத்துறியா?, இல்ல ரயில்ல புடிச்சு தள்ளி விடவா?. போயி மதுரைக்கு எதாவது வண்டில இடம் இருக்கான்னு பாரு”ன்னு திட்டி அனுப்பி வச்சான். ஆனா எங்க நேரமா என்னன்னு தெரியல, மதுரை போற எல்லா வண்டியுமே நிரம்பி வழிஞ்சுட்டு இருந்தது. எந்த ஒரு வண்டியிலையும், கழிவறை கூட காலியா இல்ல.  

இது வேலைக்கு ஆகாதுன்னு வெளிய வந்து, ஒரு பேருந்த புடிச்சசு கோயம்பேட்டுக்கு கிளம்பினோம். 9-30 மணிக்கு மேல ஆயிட்டனாலயா என்னன்னு தெரியல, பேருந்துல பெருசா ஆளே இல்ல, எங்களையும் சேர்த்தே பத்து பேர்கிட்டதான் இருந்தோம். நாங்க ஆளுக்கு ஒரு சாளரத்து இருக்கைய பிடிச்சு வேடிக்கை பார்த்துட்டே போனோம். அந்த வண்டியுமே கோயம்பேடுல போய் தான் கடைசியா நிக்கும், அதனால எங்க இறங்கணும்னு, எந்த நிறுத்தம்ன்னு மண்டகாய தேவையில்ல. காலைல இருந்து வெயில்ல சுத்துனதுக்கு, காத்து வாங்கிக்கிட்டே போனது ரொம்பவே அருமையா இருந்துச்சு.

போயிட்டே இருக்கும் போது, திடிருன்னு என்னோட கவனத்தை எதோ ஈர்க்க, திரும்பி என்னோட பக்கவாட்டுல பார்த்தேன், எதிர்புறமா ஒரு பெண் உட்காந்து இருந்தா. இருபத்திரண்டு வயசு கிட்ட இருக்கும், நேர்த்தியா புடவை கட்டி, பார்க்க ரொம்ப அழகா இருந்தா. (இந்த வரிய எழுதினதுக்காக என்னோட வீட்டுக்காரம்மா கிட்ட அடி வாங்கும் அபாயம் நிறையவே இருந்தாலும், ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் எழுதுகிறேன்).

நான் வெளிய வேடிக்கை பார்க்குறத நிறுத்திட்டு அவளையே பார்த்துட்டு இருந்தேன். அவ அழகா இருந்தது மட்டும் காரணம் இல்ல, அவளோட முகத்துல எதோ ஒரு சோகம், ஒரு விரக்தியோட முன்னாடி இருந்த இருக்கை கம்பிய மட்டும் வெறிச்சு பார்த்துட்டே இருந்தா. எதோ ஒரு துயர சம்பவத்த கடந்து வந்திருக்கா, என்னவா இருக்கும்ன்னு தெரியல. ஆனா அவளோட சோகத்துக்கு முக்கால்வாசி ஒரு ஆணோ அல்லது பல ஆண்களோதான் காரணமா இருக்கனும்ன்னு தோனுச்சு.

நான் அவளையே பார்த்துட்டு இருந்தது தெரிஞ்சோ, இல்ல எதைச்சையாவோ திரும்பி, கலங்கி போய், கண்ணீரை வம்பா அடக்குன கண்ணோட என்னை ஒரு பார்வை பார்த்தா. பட்டுன்னு நான் என்னோட பார்வைய வேற பக்கம் திருப்பிக்கிட்டேன். முழுசா ஒரு நிமிடம் கூட இல்ல மறுபடி அவளை பார்த்தேன். அடக்கி வச்சிருந்த கண்ணீர் வெளிய வந்திருச்சு போல, கண்ண தொடச்சிட்டு இருந்தா. 


தொடச்ச அடுத்த நொடி, நான் அவள பாக்குறேனான்னு பட்டுன்னு என்னை திரும்பி பார்த்தா. இந்த தடவை நான் பார்வைய மாத்திக்கவே இல்ல. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் ஒரு நிமிடம்கிட்ட பார்த்துட்டே இருந்தோம். என்ன? என்னோட பார்வையில அந்த பொண்ணு மேல இருந்த பரிதாபம் தெரிஞ்சுது, அவளோட பார்வையில கோவமும், எரிச்சலும் தெரிஞ்சுது. இந்த தடவை, அவ பார்வைய திருப்பிக்கிட்டா, அடுத்து முகத்த என் பக்கமா திருப்பவே இல்ல, முழுக்க முழுக்க பேருந்துக்கு வெளிய மட்டுமே பார்த்துட்டு இருந்தா. அப்பப்ப அவ கை மட்டும் கண்ணுக்கு போயிட்டு வந்துச்சு.

திடிருன்னு அந்த பொண்ணு எந்திரிச்சு நின்னா, அப்பதான் கவனிச்சேன் வண்டி கோயம்பேட்டுக்குள்ள வந்திருச்சு. நான் என்னோட பைய்ய எடுத்துட்டு இறங்கி பார்த்தேன், எல்லாருக்கும் முன்னாடி இறங்கி வேகமா நடந்து போயிட்டு இருந்தா. அவளோட துயரத்தையெல்லாம் ஒருத்தர்கிட்ட சொல்லி அழுகலாம், இல்ல யாருக்கும் தெரியாம தனியா போய் அழுது தீர்க்கலாம். ஆனா கண்டிப்பான முறையில அடக்கிவச்ச அழுகையெல்லாம் எங்கயோ போய் கொட்ட போறாங்கிறது மட்டும் நிச்சயம். அவ போறதயே பார்த்துட்டு இருந்த என்னைய, நம்ம நண்பன் தோள்ல தட்டி, பாத்தது போதும், காலாகாலத்துல ஊரு போய் சேருவோம் வான்னு ஒரு நக்கல் சிரிப்போட சொன்னான். பாவம் சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும்.


ஆசியாவின் மிக பெரிய பேருந்து நிலையதுக்குள்ள நுழைஞ்சோம். எனக்கோ பேருந்து நிலையத்த சுத்தி பாக்கனும்னு ஆசை, அத அவன்கிட்ட சொன்ன, “இங்க என்னத்தடா சுத்தி பாக்க போற, வா எதாவது வண்டில இடம் இருக்குன்னு பாத்து கிளம்புவோம்”ன்னு என்னைய இழுத்துகிட்டு போனான். மதுரைக்கு போற எல்லா வண்டிலையும் நல்ல கூட்டம், கடைசியா ஒரு பேருந்துல கடைசி இருக்கையில ரெண்டு பேரும் இடத்த புடிச்சு ஊருக்கு கிளம்புனோம்.

வண்டி கிளம்புன கொஞ்ச நேரத்துலையே நீதியலங்கரம் தூங்கிட்டான், காலைல இருந்து அலைஞ்ச அலைச்சல் அப்படி. எனக்குதான் ரொம்ப நேரத்துக்கு தூக்கமே வரல, மனசு முழுக்க ஒரே குறுகுறுப்பு. அந்த பொண்ணுக்கு அப்படி என்னதான் பிரச்சனையா இருக்கும்ன்னு. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயமா தெரிஞ்சுது, முக்கால்வாசியெல்லாம் இல்ல முழுசா அவளோட துயரத்துக்கு, ஆணோ இல்ல ஆண்களோதான் காரணமா இருக்கும். ஏன்னா அந்த பொண்ணு என்னை பார்த்த பார்வை அப்படி, ஏன்டா நீங்கல்லாம் இப்படி இருக்கீங்க?கிற மாதிரியான பார்வை.

அந்த பொண்ணு நான் அவளையே பார்த்துட்டு இருந்தப்ப என்ன நினைச்சிருக்கும், நானே நொந்து போய் இருக்கேன் இதுல இவன் வேற வச்ச கண்ண வாங்காம பார்குறான்ன்னு எரிச்சல் ஆயிருக்கும். அல்லது யார்ன்னே தெரியாத ஒரு மூணாவது மனிதன் முன்னாடி என்னை இப்படி அழ வச்சுடிங்களேன்னு அவளோட துயரத்துக்கு காரணமானவங்கள திட்டிருக்கும், யாரு கண்டா என்னையும் கூட நல்லா திட்டிருக்கும்.

வண்டி திண்டிவனம் தாண்டும்போது, எனக்கு ஓரளவுக்கு கண்ணு சொருக ஆரம்பிச்சிது. மனசு முழுக்க பரவசத்தோட ஆரம்பிச்ச பயணம், என்னிக்குமே விடை தெரியாத கேள்வியோட முடிஞ்சது.

1 comment:

  1. பாவம் சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும்.

    ReplyDelete