‘பொன்னியின் செல்வன்’ல வர்ற வந்தியதேவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, நான் பொய் சொன்னா கூட எல்லாரும் நம்பிருவாங்க, ஆனா உண்மைய சொல்லும் போது ஒருத்தரும் நம்பவே மாட்டாங்க. நம்ப வைக்க, நான் ஒவ்வொரு தடவையும் படாதபாடு படனும், அதுக்கு ஒரு உதாரணம்தான் கீழ வரும் சம்பவம்.
கிபி 1993ஆம் ஆண்டு, தமிழ்நாட்டுல எல்லாரும், தான் உண்டு தன் வேலை உண்டுன்னு, அவங்கவங்க பொழப்ப பார்த்துட்டு இருந்த சமயம், என் வாழ்க்கையில ஒரு சம்பவம் நடந்தது. நான் அப்ப சீரும், சிறப்பும், சீருடையுமா மூன்றாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அந்த சம்பவத்த சொல்றத்துக்கு முன்னாடி ஒரு சிறிய சங்கதி.
இந்திய குற்றவியல் சட்டத்துல,
சின்ன பிள்ளைகள கூட நிறைய்ய்ய்யா மதிப்பெண் எடுக்க சொல்ற, அதுக்காக பள்ளிக்கூடம் முடிஞ்சதும்,
வீட்டுல இருக்க விடாம, டியுசன் எனப்படும் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பிவிடுற, பெற்றோர்களுக்கு
எதாவது தண்டனை இருக்கான்னு பார்க்கனும்.
ஏன்னா, 1வது 2வது படிக்கிற
சின்ன சின்ன பிள்ளைகளக்கூட சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டுர்றாங்க. கொஞ்சமாவது
விளையாட வேண்டிய வயசுல, இப்படி இரண்டு இடத்துலையும் விடாம படிச்சு என்ன செய்ய போறாங்க
பாவம்.

பெற்றோர்கள்ல எனக்கு தெரிஞ்சு
3 வகைதான், தனக்கு சொல்லித் தர தெரியாம அல்லது முடியாம அனுப்புறவங்க. வெளிய போயி படிச்சா
இன்னும் நிறைய மதிப்பெண் வாங்கலாம்ன்னு அனுப்புறவங்க. வீட்டுல தொல்லை தாங்காம அனுப்புறவங்க
(தள்ளிவிடுறவங்க). இதுல முதல் வகை பெற்றோர்களுக்கு வேற வழியில்ல, மீதி இரண்டு வகைகளுக்கும்
என்னதான் பிரச்சனை.
டியுசன் எனப்படும் சிறப்பு
வகுப்புகள் முழுக்க தவறுன்னோ, மதிப்பெண்கள் தேவையில்லைன்னோ சொல்ல வரல. நமக்கு சொல்லித்தர
தெரிஞ்சா, குறைஞ்சது 5வது வரைக்குமாவது வீட்டுலயே படிக்க வைக்கலாமே. ‘ஐந்தில் வலையாதது
ஐம்பதில் வலையுமா’ என்கிற பழமொழிக்கு ஏற்ப, குறைஞ்சது 5வதுக்கு அப்பறம் வலைக்க ஆரம்பிக்கலாமே,
என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
சரி அது இருக்கட்டும்,
நாம காலச் சக்கரத்துல ஏறி மறுபடி கிபி 1993ஆம் ஆண்டுக்கு போய், அந்த சம்பவத்த பார்ப்போம்.
ஏற்கனவே சொன்னதப்போல, நான் அப்போ பச்சிளம் பாலகனா பச்சை வண்ண சீருடையில பள்ளிக்கூடத்துக்கு
போய், 3வது படிச்சிகிட்டு இருந்தேன்.
அதுபோக எங்க அம்மா, என்
வகுப்பு ஆசிரியைகிட்டயே சாயங்காலத்துல சிறப்பு வகுப்புகளுக்கும் சேர்த்துவிட்டிருந்தாங்க.
நானும் பள்ளிக்கூடத்துல சொல்லித்தராத எத, இங்க புதுசா சொல்லிதந்திட போறாங்கன்னு முனங்கிக்கிட்டே,
அப்பப்ப சிலபல எதிர்ப்புகளையும் காட்டிகிட்டு, வேண்டா வெறுப்பா போயிட்டு வந்துட்டு
இருந்தேன்.
அப்போ ஒரு அருமையான வெள்ளி
கிழமை மாலை. நான் பள்ளிகூடத்துல இருந்து வீட்டுக்கு வரும் போது, கொஞ்சம் நெஞ்சு வலிக்கிற
மாதிரி இருந்தது (உண்மையாகவே வலித்தது), ஆனால் நான் பெருசா கண்டுகாம விட்டுட்டேன்.
வீட்டுக்கு வந்து சாப்பிட்டு
முடிச்சதும், வலி இன்னும் அதிகமாச்சு. அம்மா கிட்ட, சரியா டியுசன் கிளம்பும் போது,
"அம்மா எனக்கு நெஞ்சு வலிக்கிதுமா”ன்னு சொல்ல, எங்க அம்மா என்னை பார்த்து செல்லமா
ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு, “சரி சரி வா டியுசன் போகலாம்”ன்னு என்னை இழுத்துகிட்டு
நடக்க ஆரம்பிச்சாங்க.
“டேய் மாதவா, நீ பொய் சொல்றேனு
நினைச்சுட்டாங்க டா”ன்னு புரிஞ்சுது. நானும் போற வழியில திரும்ப, திரும்ப பல தடவை சொல்லி
பார்த்தேன். அம்மாகிட்ட இருந்து வந்த ஒரே பதில் ”பேசாம வாடா”ங்கிறது மட்டும்தான். கடைசியா
ஆசிரியை வீட்டு வாசல்ல வச்சு, வலிக்கிதுன்னு சொல்லி கண்ணீர் விட்டு பார்த்தேன்.
இவ்வளவு நேரம் சாதாரணமா
கேட்டுட்டு இருந்தவங்களோட முகம் கொஞ்சம் மாறுச்சு. நான் கூட வீட்டுக்கு திரும்ப கூப்பிட்டு
போகப் போறங்கன்னு நினைக்கும் போது, பட்டுன்னு “ஏன்டா, உனக்கு நெஞ்சு எங்க இருக்குன்னு
முதல்ல தெரியுமா?”ன்னு கேட்டாங்க.
அம்மா அப்படி கேட்டது கிண்டல்ன்னு
புரியாத பிஞ்சு நெஞ்சம் கொண்ட நான், அப்பாவி பார்வையோட என்னோட (வலியுள்ள)நெஞ்சுல கை
வச்சு ”இதுதான?”ன்னு கேட்டேன். எங்க அம்மா, கூட கொஞ்சம் கடுப்பாகி, நேரா உள்ள போய்
என்னோட ஆசிரியைய கூப்பிட்டு “இங்க வராம இருக்க, இவன் வர வர நிறைய பொய் சொல்றான், கொஞ்சம்
கண்டிச்சு வைங்க”ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.
எங்க அம்மா போறதையே பார்த்துட்டு
இருந்த என்னை, எங்க ஆசிரியை “உள்ளே போஓஓ”ன்னு பாட்சா ரஜினி சப்தத்தில சொல்ல, அழுகையோட
போய் உட்காந்தேன். அதுவரைக்கும் பள்ளிக்கூடம் போகாம இருக்கதுக்கு, வீட்டுல நிறைய பொய்கள
சொல்லி ஏமாத்துன பாவம் எல்லாம் அந்த நேரம் ஒன்னா சேர்ந்து, நெஞ்சு வலியாகி. அத சொன்னா,
பெத்த அம்மாவே நம்பாம போகவும் வச்சிருச்சு. என்ன பண்ண, ‘விதி வலியது’.
வகுப்பு ஆரம்பிச்சு வெகு
நேரமா வலி குறையாம, புசு புசுன்னு அழுதுகிட்டே இருந்தேன். அப்பப்ப ”அழுகாத டா”ன்னு
சொல்லிகிட்டு இருந்த ஆசிரியையும், ஒரு கட்டத்துல கடுப்பாகி “இப்போ அழுகுறத நிறுத்தால
அடி பின்னிருவேன், அப்பறம் இன்னைக்கு முழுக்க அழுதுகிட்டேதான் இருப்ப, பார்த்துக்க”ன்னு
சொல்ல. நானோ மனசுக்குள்ள “இப்பையும் அதத்தான செஞ்சுகிட்டு இருக்கேன், சரி வம்பாவாது
அழுகைய அடக்கியே ஆகனும், இல்லைன்னா, நெஞ்சு வலியோட சேர்த்து அடியும் வாங்கனும்”ன்னு
நினைச்சு பல்ல கடிச்சு வலிய பொருத்துகிட்டேன்.

எப்படா 8 மணி ஆகும்ன்னு
தவிச்சுக்கிட்டு இருந்தேன், வலியையும் பொறுக்க முடியல, அழுகையையும் அடக்க முடியல. அப்பப்ப
யாருக்கும் தெரியாம சட்டையில கண்ண தொடைச்சுகிட்டு இருந்தேன். அதையும், ஒரு நல்லா படிக்கிற
நச்சு பக்கி ஆசிரியை கிட்ட போட்டு குடுத்திச்சு.
நல்ல வேலையா அப்போன்னு
பார்த்து தொலைக்காட்சியில, ஒலியும் ஒளியும் ஓடிக்கிட்டு இருந்ததுனாலையும், குறிப்பா
அப்போதான் வந்த ‘ஜெண்டில் மேன்’ பட பாடலான ‘உசிலம்பட்டி பெண் குட்டி’ பாட்ட பார்க்கிறதுல,
அவங்க கவனம் இருந்ததுனாலையும் நான் தப்பிச்சேன்.
ஒரு வழியா வகுப்பு முடிஞ்சு
என்னை கூப்பிட வந்த அம்மாவ பார்ததும், ஆத்து பக்கதுல ஊத்து தோண்டுனது மாதிரி, அடக்கி
வச்சிருந்த மொத்த அழுகையும் பொங்கி வந்துருச்சு. அத பார்த்த அம்மாவுக்கு அப்போதான்
உண்மை புரிஞ்சு “ஐயையோ உண்மையிலயே வலிக்கிதா?, ஏண்டா தெளிவா சொல்லக்கூடாதா?”ன்னு கேட்டாங்க.
(சாயங்காலத்தல இருந்து அதத்தான டா நிறுத்தாம சொல்லிகிட்டு இருந்தேன்!!). அம்மா உடனே,
என்னை வேக வேகமா வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.
வீட்டுல அப்பா, அம்மா,
சித்தப்பா, மற்றும் சித்தப்பாவின் நண்பர்ன்னு ‘நாலு பேர்’ சேர்ந்து(!?!), ஒரு தானியில(ஆட்டோ)
மருத்துவமனைக்கு தூக்கிக்கிட்டு போனாங்க. பின்னாடியே தாத்தாவும் இன்னொரு சித்தப்பாவும்
வர, குடும்ப சகிதமா அங்க இருந்தோம். உள்ள எனக்கு அவசர சிகிச்சையும், வெளிய அம்மாவுக்கு
அப்பாகிட்ட இருந்து அதை விட வேகத்துல அர்ச்சனையும் வழங்கப்பட்டிருக்கிறது. (நான் அப்போ
சுயநினைவுல இல்ல).
சுமார் அரை மணி நேரம் கழித்து
வெளியே வந்த, எங்க அப்போதய குடும்ப மருத்துவர், தன்னோட கண்ணாடிய மெதுவா கலட்டிட்டு,
“நல்ல வேலை நேரத்துக்கு கொண்டுவந்தீங்க. சளி பிடிச்சு, அது வெளியேறாம உறைஞ்சு போயி,
நெஞ்ச அடச்சு இருந்திருக்கு. இப்போ சரி பண்ணியாச்சு”ன்னு சொல்லி, எல்லோர் மனசுலையும்
பால் வார்த்திருக்கார்.
அப்பறம் என்ன?, அடுத்த
அரை மணி நேரத்துல வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்துட்டாங்க. வரும் வழி எல்லாம் அம்மா என்கிட்ட
மன்னிப்பு கேட்டுக்கிட்டே வந்தாங்க. அவங்க கண் நல்லா கலங்கி இருந்தது, தாய் பாசம்ன்னா
சும்மாவா?, அது போக குற்ற உணர்ச்சி வேற. இருக்காதா பின்ன, இன்னும் கொஞ்ச நேரம் கவனிக்காம
விட்டிருந்தாலும், அன்னிக்கே எனக்கு ‘இரங்கல் பா’ பாடியிருப்பாங்க.
மறுநாள் எனக்கு, “பால்
என்ன, பழங்கள் என்ன, பலகாரங்கள் என்ன, என்ன, என்ன”ன்னு அரச மரியாதையுடன் பலத்த கவனிப்புதான்.
ஆனா இவ்வளவு இருந்தும் என்னோட நேரம், அடுத்த இரண்டு நாளும் சனி, ஞாயிறு, அதனால இத காரணம்
காட்டி பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட முடியல. திங்கள் கிழமை பொடனியில அடிச்சு பள்ளிக்கூடம்
பத்திவிட்டாங்க.
அன்னையில இருந்து இன்னைக்கு
வரைக்கும் ஒன்னு மாறவே இல்ல. நான் பொய் சொல்லும் போதெல்லாம் அமைதியா கேட்குறவங்க, உண்மைய
சொல்லும் போது மட்டும் நம்பவே மட்டாங்க. இப்படித்தான் என்னோட பதின் பருவத்துல, பள்ளிக்கூட
வாத்தியார் தொல்லை தாங்க முடியாம வீட்டை விட்டு ஓடி போக முடிவு பண்ணி, அதை வீட்டுல
இருக்க எல்லார்கிட்டையும் பல தடவை சொன்னேன். அப்பையும் யாரும் என்னை நம்பல, அந்த கதையை
அடுத்து வரும் பதிவுகளில் கண்டிப்பாக கூறுகிறேன். . . .
அற்புதம்
ReplyDeleteVery humors touch
ReplyDeleteNala iruku, Ada Nala iruku da. Go ahead
ReplyDelete