Monday, 5 October 2020

ஓட்டம்

 பதின் பருவம், சிந்தனை அபாரமா வளரும் பருவம், ஆனா சிந்திப்பதில் முக்கால்வாசி முட்டாள்தனமா இருக்கும் பருவம். பதின் பருவத்துல, நாம கொஞ்சங்கூட யோசிக்காம செய்யிற கிறுக்குத்தனமான செயல்கள் நிறையவே இருக்கும். அதுலையும் என்னை மாதிரியான ஆளுக்கு கேட்கவே வேண்டாம், (இப்ப வரைக்கும் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறேன்). ஆனா துளியளவு கூட யோசிக்காம நான் செஞ்ச முட்டாள்தானமான வேலைன்னா, அது வீட்டை விட்டு ஓடிப்போக செஞ்ச முயற்சிதான்.

11வது மற்றும் 12வது படிச்சிட்டு இருந்த அந்த இரண்டு வருடங்கள், என் வாழ்க்கையின் இருண்ட காலம்ன்னு சொன்னா அது மிகையாகாது. அந்த அளவுக்கு அந்த இரண்டு வருடங்களும் சொல்லன்னா துயரங்களுக்கு ஆளானேன். இப்பவும் திரும்பி பார்த்தா, புதுசா நண்பர்கள் அமைஞ்சதத் தவிர மித்த எல்லாமே செருப்படிகள் மட்டும்தான் (சமயத்துல விளக்கமாத்து அடிகளும் உண்டு).

11வதுல நான் புதுசா சேர்ந்த பள்ளிக்கூடத்து உதவி தலைமை ஆசிரியர், அவரோட வீட்டுல தனிப்பட்ட முறையில அவர் எடுக்குற ‘டியுசன்’ வகுப்புகளுக்கு நிறைய பேர் வராம போனதுக்கு, என்னோட சித்தப்பா வேலை செய்யிற பயிற்சி மையம்தான் காரணம்ன்னு முடிவுகட்டி. என் மேல காட்டிய தனிப்பட்ட வன்மம், என்னை மிகவும் பாதிச்சு பல கிறுக்கு வேலைகள செய்ய வச்சுது.

எப்படியும் இரண்டு நாளுக்கு ஒரு தடவையாவது ஏதாவது காரணம் சொல்லி என்னைய அடிச்சிடுவார். ஒரு நாள் விடுமுறை எடுத்தாக்கூட, வீட்டுல இருந்து பெத்தவங்கள நேர்ல கூட்டிட்டு வந்தே ஆகனும். அப்படி கூட்டிக்கிட்டு வந்ததும் என்னை பத்தி கண்டதையும் சொல்லி வீட்டுலையும் பேர கெடுத்து விடுவார்.

படிப்புல நான் சூரப்புலி இல்லைன்னாலும், மோசமா படிக்கிறவன் கிடையாது. ஆனா அந்த பள்ளிக்கூடத்துல நான் ஒரு முறை கூட தேர்ச்சி ஆனதே கிடையாது. இதை எல்லாம் வீட்டுல அம்மாகிட்ட சொல்லி பார்த்தேன், அம்மாவோ “நீ முதல்ல ஒழுங்கா இருந்து, நல்லா படிக்கிற வேலைய மட்டும் பாரு”ன்னு முடிச்சிட்டாங்க.

பொறுத்து பொறுத்து பார்த்தேன், வீட்டுலையும் சொல்லி புரியவைக்க முடியல, இதனால படிப்பும் சரியா வரல, அந்த பள்ளிக்கூடமே பிடிக்காம போச்சு. சரி இது வேலைக்கு ஆகாதுன்னு, வீட்ட விட்டு எங்கயாவது ஓடி போயிடலாம்ன்னு முடிவு பண்ணேன். எங்க போறது, எப்படி போறது, என்ன பண்றதுன்னு எதையும் யோசிக்கல, ஆனா போறதுன்னு முடிவு மட்டும் எடுத்துட்டேன்.

சரியா ஒரு வாரத்துல கிளம்புறதுன்னு முடிவு பண்ணிணேன். அந்த ஒரு வாரம் முழுக்க அம்மா, அப்பா, பசங்க, மற்றும் உறவுகள் கூட கடைசியா நல்லா பேசி வச்சு இருந்துட்டு போக யோசிச்சேன் (எல்லாம் ஒரு பாசம் தான், அடுத்து பார்க்க போறது இல்லைல).

‘ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ங்கிற கதையா, அந்த வாரம் முழுக்க, எங்க அம்மா உட்பட எல்லார்கிட்டையும் வீட்ட விட்டு ஓடப்போறத, நானே சொல்ல வேற செஞ்சேன். ஆனா வழக்கம் போல ஒரு பயலும் அத நம்பல, எந்த காலத்துல நான் உண்மைய சொல்றப்ப நம்பியிருக்காங்க. (நான் சொல்லும் உண்மைகளை பிறர் நம்பும் தன்மையை பற்றி தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்).

ஒரு வாரம் கழிச்சு எங்க டியுசன் வாத்தியார் திருமணத்துக்கு போயிட்டு வந்து, வீட்டுல இருந்து 300 ரூபாய் பணத்தை எடுத்துக்கிட்டு, சரியா சொல்லப்போனா திருடிக்கிட்டு. மதிய தூக்கத்துல இருந்த அம்மாகிட்ட “நான் போறேம்மா, இனி திரும்பி வர மாட்டேன்”னு சொல்லிட்டு. அப்போது மாட்டுத்தாவணி என அழைக்கபட்ட பேருந்து நிலையத்துக்கு கிளம்பினேன்.

பேருந்து நிலையத்துல, தோள்ல ஒரு சின்ன பையோட நின்னு, எங்க போகலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். அந்த பையில எனக்கு நெருக்கமானவங்க எல்லாரும் இருக்க ஒரு புகைப்பட தொகுப்பு, அப்பறம் ஒரு குளிர்கண்ணாடி. (அந்த ரணகளத்துலையும் ஒரு கிலுகிலுப்பா, போற வழியில 100 ரூபாய்க்கு குளிர் கண்ணாடி வேற வாங்குனேன்.)

சரி எங்க போறதுன்னு யோசிச்சப்ப, எதாவது கடல் இருக்க ஊருக்கு போகனும்ன்னு மட்டும் தோனுச்சு (கடற்கரை எனக்கு பிடிச்ச இடம்). சொல்லி வச்ச மாதிரி நாகர்கோவில் வண்டி ஒன்னு நிறைய இடத்தோட வர, அங்க இருந்து கன்னியாகுமரி போயிக்கலாம்ன்னு அதுல ஏறிட்டேன்.


வண்டி மதுரைய தாண்டவும், சாலரத்துல காத்துவாங்கிக்கிட்டே பல கற்பனைகள் எனக்குள்ள ஓட அரம்பிச்சது. படத்துல வர மாதிரி பின்னாள்ல ஒரு பெரிய ஆளாகி, வீட்டுக்கு போயி அப்பா, அம்மா, பசங்க  எல்லாத்தையும் பார்க்க போறோம். இன்னைக்கு நம்மள திட்டுன்ன பயளுக எல்லாம், அப்போ நம்மள பத்தி பெருமையா பேசப் போறாங்கன்னு பல கணவுகள். தூக்கம் வரவும் கணவு வர்ற மாதிரி, நான் கணவு காணும் போதே நல்லா தூங்கிட்டேன்.

வண்டி திருநெல்வேலிய நெருங்கிக்கிட்டு இருக்கும் போது எந்திரிச்சு பார்த்தா, சட்டை பையில இருந்த பணத்த காணாம்!. நான் நல்லா தூங்கிக்கிட்டு இருக்கும் போது யாரோ எடுத்திருக்கனும். அப்பதான் எனக்கு முதல் முறையா அடி வயித்த கவ்வுச்சு, பணம் இல்லாம அங்க போயி எங்க தங்குறது கடற்கரையிலயா? அப்படியே தங்குனாலும் சோத்துக்கு என்ன பண்றது?ன்னு, வீட்ட விட்டு கிளம்பும் போது வர வேண்டிய கேள்வியெல்லாம் நடு வழியில வந்துதது.

வரிசையா என்னை நானே கேள்விகளா கேட்டுக்கிட்டேன், ஒவ்வொரு கேள்விக்கும் பல பயங்கள் வந்தது, அந்த பயங்கள் புதுசா பல கேள்விகள கொண்டுவந்தது. “இப்படி கொஞ்சம் கூட யோசிக்காம கிளம்பியிருக்கோமே?”. “பணமும் திருட்டு போச்சு, அப்படியே அந்த பணம் இருந்தாலும் 150 ருபா எத்தன நாளைக்கு பத்தும்?”. “வீட்டுல, திருடுனதுதான் திருடுனோம், கொஞ்சம் கூடவே திருடியிருக்க கூடாதா?, திருட்டுல கூடவா கஞ்சத்தனம்?”. “மாத்துறதுக்கு துணி கூட எடுத்துட்டு வரலையே?”. “அட உள்ளாடைய கூட எடுத்து வைக்கலையே டா உருப்படாதவனே?”. “இதுல வரும் போது வக்கனையா 100 ருபாய்க்கு குளிர் கண்ணாடி வேறயா டா கூமுட்டை?”ன்னு என்னை நானே திட்டிக்கிட்டேன்.

வண்டி திருநெல்வேலி வந்ததும், என்னைய அறியாம ஏதோ பயத்துல கீழ இறங்கிட்டேன். குருட்டு தைரியத்துல பேருந்துல ஏறுனவன், மொரட்டு பயத்துல இறங்கினேன். அடுத்து என்ன செய்ய?, வீட்டுக்கே போகலாம்னா கையில பத்து பைசா கூட இல்ல. பேசாம தற்கொலை செஞ்சுக்கலாமான்னு ஒரு யோசனை வந்தது, ஆனா அதுக்கும் பயமா இருந்தது. உங்க கொள்கை என்னன்னு கேட்டப்ப, யாரோ நின்ன மாதிரி, என்ன செய்யிறதுன்னு தெரியாம, ஒரு நிமிடம் தலை சுத்தி போய் நின்னுகிட்டு இருந்தேன்.

                                                        --- தொடரும்

4 comments:

  1. படிப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணே

    ReplyDelete
  2. Same feeling.I heard this from you during our college days but forgot the climax.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதஸ், Climax அடுத்த பாகத்துல வரும்..

      Delete