ஆங்கில புத்தாண்டுக்கும் நமக்கும் என்னைக்கும்
சம்பந்தம் இருந்ததே இல்ல. சின்ன வயசுல அத கொண்டாடுற மாதிரி ஏதும் சந்தர்ப்பம்
அமையல. வளர்ந்த பிறகு “அத ஏன் நாம கொண்டாடனும்?” அப்படின்ற கேள்வி மனசுக்குள்ள
வந்திருச்சு. என்னோட நண்பர்களும் ஏறக்குறைய என்னய மாதிரியேதான், இதெல்லாம் பெரிசா
கொண்டாட மாட்டாங்க. எங்களோட இந்த ஒற்றுமைய மித்தவங்க “ஒரே குட்டையில ஊறுண மட்டைகள்”ன்னு
சொல்லுவாங்க, ஆனா நாங்க இத “புத்திசாலிகள் எல்லாரும் ஒரே மாதிரி யோசிப்பாங்க”ன்னு
சொல்லுவோம்.
ஆனா இந்த வருடம் ஆங்கில புத்தாண்டு கொஞ்சம்
சிறப்பா இருந்ததது, ரொம்ப நாட்களுக்கு அப்பறம் நண்பர்களோட இருக்கும்படி அமைஞ்சிது.
கடந்த வருட இறுதியில நான் கொஞ்சம் சும்மாதான் இருந்தேன், அதனால அப்படியே புத்தாண்ட
ஒட்டி சென்னை பக்கம் போயிட்டு வரலாம்னு முடிவு பண்ணேன். சரியா நான் இத யோசிச்சிக்கிட்டு
இருக்கும் போது நம்ம ‘பால்மால் பாசக்காரன்’ கைப்பேசில கூப்பிடான். என்னோட திட்டத்த
சொல்லவும், பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி அவனும் வர்றேன்னு சொன்னான்.
அப்படின்னா இவன் இருக்க வரைக்கும் எனக்கு அங்க செலவே இல்லைன்னு அர்த்தம். (இவன் இல்லைன்னாலும்
அங்க இருக்க நண்பர்கள்தான் செலவு பண்ணுவாங்க).
கடந்த முறை போனப்ப முன்றே நாட்கள்தான் இருக்க
முடிஞ்சது, அதுலயும் இரண்டு நாள் என்னோட உறவினர்களோடயே சரியா போச்சு. பசங்களோட
நெறைய நேரம் செலவிட முடியல, ‘வெள்ளையன்’ அதுக்கு ரொம்பவே கோபப்பட்டான். அதனாலேயே
இந்த தடவை சில முடிவுகளோட கிளம்ப தயார் ஆனேன். அது என்னன்னா,
- ஒரு வாரத்துக்கு மேல இருக்க மாதிரி போகனும்,
- இந்த தடவை உறவினர்கள் வீட்டுக்கு போகாம
பசங்களோட மட்டுமே இருக்கணும்,
- நான் முன்னாடி தங்கி இருந்த மாம்பலம்
பகுதிக்கு போய், பழைய இடத்தையெல்லாம் நல்லா சுத்தனும்,
- எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமா, காலையில கடற்கரைக்கு
போய் சூரிய உதயத்த புகைப்படம் எடுக்கணும்.
காலையில கிளம்பி போகலாம்ன்னு முடிவு பண்ணேன். பொதுவா
தொடர்வண்டில பகல்ல பயணிக்கிறது ஒரு அலாதி சுகம். அங்க தான் ஒரு உயிர்ப்பு
இருக்கும். வெளிய வேகமா போற மரஞ்செடிகள், அத பாக்குறதுகுன்னு சாளர இருக்கைக்கு
சண்டை போடுற குட்டி பிள்ளைங்க. அவங்கள சமாதான படுத்தி, கொண்டுவந்த இட்லிய கிண்ணத்துல
வச்சு ஊட்டி விடுற தாய்மார்கள்ன்னு வண்டியே ஆனந்தமாயமா இருக்கும். இன்னும் சொல்லப்போனா
அங்க மட்டும்தான் கடைசி வரைக்கும் யாருன்னே தெரியாம அன்பா பேசிட்டு இருப்போம். இது
போக எனக்கு முக்கியமான ஒன்னு தொடர்வண்டில பகல்ல விலை ரொம்ப கம்மி.
எல்லாம் எடுத்து வச்சு விடியக் காலைல வந்து தொடர்வண்டில
ஏறுனதும் பார்த்தா, ஒரு பெட்டிக்கு ஆறு தொலைகாட்சி தொங்கிக்கிட்டு இருந்தது. பொதுவா
பேருந்துலதான் தொலைகாட்சிய வச்சு தூங்கவிடாம தொல்லை பண்ணுவாங்க, இப்ப இங்கயும் துயரத்த
கூட்ட ஆரம்பிச்சுடாங்களேன்னு நொந்துக்கிட்டு பொய் உட்கந்தேன். இந்த அபாரமான ‘தொலைகாட்சி’
யோசனை யாருக்கு வந்ததோ தெரியல. மித்தவங்களுக்கு எப்படியோ எனக்கு இது சுத்தமா
பிடிக்கல, மேல சொன்ன பயணத்தோட அழகையே கெடுக்கிற மாதிரி இருந்தது. அது ஒன்ன தவிர பயணம்
நல்லா அருமையா இருந்தது.
மதியம் போல ‘சென்னை மத்திய ரயில் நிலையம்’ வந்து
இறங்குனேன். குளிர்காலமா இருந்ததுனால
பெங்களூருக்கும் சென்னைக்கும் தட்பவெப்ப நிலையில ரொம்பப் பெரிய வித்யாசம் இல்ல.
பொதுவா அங்க இருந்து சென்னை வந்தாலே வேர்த்து ஊத்த ஆரம்பிச்சிடும். நிலையத்துக்கு
வெளிய நடந்துகிட்டு இருந்த ‘மெட்ரோ’ வேளைகள கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டு, மெல்லாமா
நடந்து ‘பூங்கா’ ரயில்நிலையம் வந்துசேர்ந்தேன்.
பயணச்சீட்டு வாங்கீட்டு வண்டிக்காக
காத்திருந்தேன், சென்னைல நான் இருந்த இரண்டு வருடங்களும் என்னோட முக்கியமான
பொழுதுபோக்கே மின் தொடர்வண்டிகள்ல பயணிக்கிறதுதான். இங்க இருந்தப்ப எத செய்றேனோ
இல்லையோ, மாசமான என்னோட முதல் வேலையே 150 ரூபாய் கொடுத்து தாம்பரத்துல இருந்து
சென்னை கடற்கரை வரைக்கும் சலுகை கட்டணப் பயணச்சீட்டு வாங்குறதுதான். ஒரு நாளைக்கு
குறைஞ்சது இரண்டு தடவையாவது இதுல போயிட்டு வருவேன். எங்க போறேன், எதுக்கு போறேன்னு
தெரியாமலே நிறைய தடவை போயிருக்கேன்.
ஒருவழியா வண்டி வரவும் அதுல ஏறி நுங்கம்பாக்கம்
வந்து, சூளைமேட்டுல நண்பர்களோட வீடு போய் சேர்ந்தேன். அங்க நம்ம 'வெள்ளையன்’
“வாடா”ன்னு சொல்லி தன்னோட வழக்கமான 'கழுதப்புலி' சிரிப்போட என்னை வரவேற்த்தான்.
- தொடரும்
பின்குறிப்பு:
பயணக்கட்டுரை
எழுதனும்னு ரொம்ப நாள் ஆசை, சந்தர்ப்பம் கூடி வந்தனால உள்ளதகுதுன்னு
தொடங்கிட்டேன். பயணக்கட்டுரைகள் எழுதுறதுக்குன்னு எதாவது தனிப்பட்ட முறைகள்
இருக்கான்னு எல்லாம் தெரியல, வழக்கம் போல என் மனம் போன போக்குலயே போயிருக்கேன். ஆதலால்
பிழைகள் இருப்பின் பொருத்தருள்க.
Yaru da athu velliyan
ReplyDelete@aathas tats gulam
ReplyDelete