வீடு போய் சேர்ந்ததும் கொஞ்சம் இளைப்பாறுனேன்,
அப்பதான் திடிருனு நெனவு வந்து கைபேசி எடுத்து “பத்தரமா வந்துட்டேன்”னு சொல்ல
வேண்டிய இடங்கள்ல சொன்னேன். இல்லேன்னா, “ஏன்டா போய் இறங்குனா ஒரு வார்த்தை சொல்ல
மாட்டியா?”ன்னு, எனக்கு அழைப்பு வந்துரும். முன்னாடினா கூட அம்மா மட்டும்தான் இத
கேட்பாங்க, இப்ப இன்னொரு ஆள் வேற சேர்ந்தாச்சு.
நான் மதியம் போய் இறங்குனதுனால, வீட்டுல
‘வெள்ளையன’ தவிர ஒருத்தனும் இல்ல. அவனுமே மதியம் சாப்பாட்டுக்கு வந்திருந்தவன்,
நான் பொய் கொஞ்ச நேரத்துல வேலைக்கு கிளம்பிட்டான். அவன் போனதும் குட்டி தூக்கம்
போடலாம்னு தோனுச்சு. அப்பறம் என்ன
நெனச்சேனோ அந்த பகுதிய சுத்தி அப்படியே ஒரு நடை போயிட்டு வரலாம்னு, காதுல
கட்டுக்கம்பிய மாட்டி, பாட்டு கேட்டுகிட்டே நடக்க ஆரம்பிச்சேன்.
சென்னைல நிறைய குடியிருப்புகள் இருக்குற
இடங்கள்ல இதுவும் ஒன்னு சொல்லலாம். பொதுவா எனக்கு இந்த மாதிரி சுத்தி வீடுகள்
நிறைய இருக்க நகர்புற பகுதிகள்ல வசிக்கிறது பிடிக்கும். இந்த மாதிரி இடங்கள்ல
இருந்துதான் பழக்கமும் கூட. நண்பர்கள் இருக்குறதுனால, கடந்த இரண்டு முன்று முறையா
சென்னை போனா இங்கதான் தங்குறது. நல்ல இடம், என்ன? இரவுல தூங்கும்போது கொசுதான் ஒரு
பெரிய பிரச்னை.
நான் வெளிய சுத்தீட்டு வர்றதுக்கும், நாம பசங்க
ஒவ்வொருத்தனா வேலை விட்டு வர்றதுக்கும்
சரியா இருந்தது. எல்லாம் கொஞ்ச நேரம் அப்படியே பழைய கதைகள, பேசிட்டு இருந்தோம். நண்பர்களோட
உட்காந்து எந்த ஒரு சங்கதியும் இல்லாம, காலநேரம் போறது தெரியாம பேசுறதுக்கு ஈடா
என்ன உண்டு?. அதுவும் பல நாள் கழிச்சு பாத்துக்கும் போது மகிழ்ச்சிக்கு குறையவா
இருக்கும். ஒரே ஆட்டம் பாட்டம், இரவு வீட்டுலயே தோசை சுட்டு எல்லாரும் ஒன்னா
சாப்பிட்டோம்.
ஊருக்கு கிளம்பும் போது எடுத்த முக்கிய முடிவுகள்ல
ஒன்றான, கடற்கரையில சூரிய உதயத்த புகைப்படம் எடுக்குற திட்டத்த, செயல் படுத்த
ஆயத்தம் ஆனேன். முதல் கட்டமா ‘மஞ்சா மாமா’ கிட்ட வண்டிய கேட்டுவச்சேன். துணைக்கு
வர பசங்கள கூப்பிட்டேன், எல்லபயலும் நெளிஞ்சானுக. கடைசியா ‘திண்டுக்கல் சாரதி’,
“நீ என்னைய எழுப்பி விட்டா நான் கண்டிப்பா வரேன்டா”ன்னான். காலையில சிக்கிரம்
எழுந்து போகனும்னு அஞ்சு மணிக்கு அலறிமணி வச்சிட்டு படுத்தேன்.
மறுநாள் காலைல ‘மஞ்சா மாமா’ என்னை எழுப்பிவிட்டு,
“மாமா ‘பால்மால் பாசகாரன்’ வந்துடான், போய் கூப்பிட்டு வந்திரியா”ன்னான். நான்
வாரி சூரூட்டி எந்திரிச்சு மணிய பார்த்த ஏழரை. நான் வச்ச அலறிமணி அடிக்கவே
இல்லையே, என்னடா இதுன்னு கைபேசில எடுத்து பார்த்தா, ரொம்ப புத்திசாலித்தனமா
சாயங்காலம் அஞ்சு மணிக்கு வச்சிருந்தேன். சரி இன்னும் நாள் இருக்குல, நாளைக்கு எடுத்துக்கலாம்ன்னு
விட்டுட்டேன்.
அன்னைக்கு மதியம் ஒரு கடைல சாப்பிடும் போது, வெளிய
பீட்சா விளம்பரத்த பார்த்துட்டு ஒரு நெனப்பு வந்தது (படம் இல்லைங்க சாப்பிடுவோம்ல
அது). கொஞ்ச நாளா அத சாப்பிட்டு பாக்கணும்னு ஆசை. ஏன்னா? அத முன்னாடியே சாப்பிட்டு
பார்த்த நம்மள மாதிரி பசங்கல்லாம் “என்னடா அது நல்லவா இருக்கு?” அப்படின்னு முகத்த
ஒரு மாதிரி வச்சிட்டு சொல்லுறாங்க. அதே நம்ம ‘சின்னமுழி சித்தன்’ மாதிரி மேற்கத்திய
கலாச்சார விரும்பிகள் அது ரொம்பவே நல்ல இருக்கும்னு சொல்லுறாங்க. அதான் ஒரு தடவை
அப்படி அதுல என்னதான் இருக்குன்னு பாத்துடனும்ன்னு நினைச்சேன்.
நாம எந்த காலத்துல இந்த மாதிரி பொருட்கள சொந்த
காசுல வாங்கி சாப்பிட்டிருகோம். பக்கதுல நம்ம ‘பாசகாரன்’ உட்காந்து இருந்தான்,
எனக்கு படியளக்குற நண்பர்கள்ல முக்கியமானவன் இவன்தான. அவன் கிட்டயே பீட்சா வாங்கி
தர சொன்னேன், அவனும் இரவு எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்னு சொன்னான். ஆனா
அன்னிக்கு இரவு பசங்கள்ல பல பேர் வீட்டுல இல்லாத காரணத்துனால திட்டம் கைவிடப்பட்டது.
மறுநாள் நானும் ‘பால்மால் பாசகாரனும்’
கடற்கரைக்கு போகலாம்னு முடிவு எடுத்தோம். இந்த தடவை சரியா விடிய காலைல எழுந்து
பார்த்தா, வானம் நல்ல மேகமூட்டமா இருந்தது. இதுல எங்க போய் சூரிய உதயத்த படம்
புடிக்கன்னு யோசிச்சிட்டு இருந்தேன். இருந்தாலும் பரவைல்லைன்னு கிளம்புனா போற
வழியில வகை மழை, ரெண்டுபேரும் நல்ல நெனஞ்சிட்டு திரும்பி வந்தோம்.
அடுத்த ரெண்டு மூனு நாளும் நல்ல மழை பெஞ்சிது, அதனால
போகமுடியல. ஒரு வழியா புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்னாடி ‘திண்டுக்கல் சாரதி’ய
கூட்டிகிட்டு போய், புகைப்படம் எடுத்துட்டு வந்தேன். அப்பவும் அடிவானதுல நிறைய
மேகங்கள் இருத்துனால புகைப்படம் சரியா வரல. என்ன பண்றது? ஆட தெரியல, தெரு
கோணல்ன்னுதான் சொல்லணும், வேற வழி.
- தொடரும்
Find Dindigul sarathy spelling mistake and correct it :)
ReplyDelete