Monday, 18 May 2020

கண்காட்சி பாகம் - 3

மறுநாள் விடியகாலை கிளம்ப வேண்டிய இருந்தது, முதலமைச்சர் மட்டும் இல்லாம பல அமைச்சர்கள் வர்றதுனால, 9 மணிக்கு ஆரம்பிக்கிற கண்காட்சிக்கு, 7 மணிக்குள்ள அங்க இருக்கனும்னு சொல்லிட்டாங்க (பாதுகாப்பு முன்னேற்பாடுகள்). நாங்களும் சாப்பிடாம கூட கிளம்பினோம். கிளம்புமும் போது, வீட்டுகாரர் வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாரு.

 

அவர் கூட 20 நிமிடம் பேசிட்டு கிளம்பினோம், சரியா சொல்லனும்ன்னா அவர் பேசுறத கேட்டுட்டு இருந்தோம். நாங்க நேரமாகுதுன்னு கிளம்பும் போது, “நானும் கண்காட்சிக்கு வருவேன் தம்பி, முதலமைச்சர் நம்ம ஊருக்கு வந்திருக்காரு, நாம போயி ஒரு எட்டு பார்க்காம இருந்தா நல்லாவா இருக்கும்”ன்னாரு. நண்பன் படக்குன்னு “ஆமா ஆமா, இல்லைன்ன அவர் உங்கள தப்பா நினைச்சுக்க மாடாரா?”ன்னான். நல்ல வேலையா அவர் காதுல விழுகல, நான் சிரிப்ப அடக்கிக்கிட்டு வேகமா நடந்துட்டேன்.

 

அப்படி இப்படின்னு சரியான நேரத்துக்கு போய் சேர்ந்தோம். அங்க ஒவ்வொரு காட்சியகத்துலயும் 3 நாற்காலிகள், ஒரு மின்விசிறி வச்சிருந்தாங்க. சரின்னு நாங்க போய் உட்கார்றத்துக்குள்ள, “தம்பீ, எல்லாம் தயாரா இருக்கா”ன்னு கேட்டுக்கிட்டே அந்த உ.பொ வந்தாங்க. அவங்க கூடவே இன்னும் இரண்டு பேர் வந்து உட்காந்துக்கிட்டாங்க. அப்பத்தான் புரிஞ்சது அந்த நாற்காலி, மின்விசிறியெல்லாம் எங்களுக்கு இல்லைன்னு.

 

சரின்னு வேலைகள ஆரம்பிச்சோம், விளக்க வடிவம் இருக்க இடத்துல நானும், காட்சியகத்துல நண்பனும் போயி நின்னுகிட்டோம். மித்த படி வர்றவங்களுக்கு தர வேண்டிய துண்டுப்பிரசூரம், விலை, மானிய விவரம் எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டோம். நான் தனியா நண்பன் கிட்ட, பாடமும், சில சந்தேங்களும் கேட்டுக்கிட்டேன் (மறுபடி தேர்வுக்கு போற மாதிரியே இருந்தது).

 

8:30 மணி போல ஒரு அதிகாரி வந்து, “தண்ணி வேணும்ன்னா பின்னாடி இருக்கு போயி வாங்கிக்கோங்க”ன்னு, வரிசையா எல்லார்கிட்டையும் சொல்லிகிட்டே போனார். அவர் சொல்றது, எதொ விக்கிரவாண்டில பேருந்து நிக்கும் போது “வண்டி 15 நிமிடம் நிக்கும், சாப்பிடுறவங்க சாப்பிட்டுக்கோங்க”ன்னு சொல்ற மாதிரியே இருந்தது. அடுத்த பத்தாவது நிமிடம் மறுபடி வந்து “தண்ணி வேணும்ன்னா பின்னாடி இருக்கு போயி வாங்கிக்கோங்க”ன்னு கத்திக்கிட்டே போனாரு.

 

நான் கூட, நமக்கெல்லாம் முன்னக்கூட்டியே தண்ணியெல்லாம் தனியா தந்திருவாங்க போலன்னு நினைச்சு போய் பார்த்தா, ஒரு கடையப் போட்டு தண்ணி, ஆவின் பால், தேநீர் எல்லாம் வித்துக்கிட்டு இருந்தாங்க. இத எங்களுக்கா வந்து வாங்கத் தெரியாதா, இதுக்கு ஏன் இவரு இப்படி கூவிக்கிட்டு இருக்காருன்னுட்டு வந்து என் இடத்துல நின்னுட்டேன். ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு கொஞ்ச நேரம் கழிச்சுதான் தெரிஞ்சிது.

 

9 மணிக்கு மேல கூட்டம் வர ஆரம்பிச்சது, வந்தவங்க எல்லாருக்கும், சூரிய மின்சக்தி இயங்கற முறை, அதோட மானியம் எவ்வளவு, அதுக்கு விண்ணப்பிக்கிறது எப்படின்னு விளக்கி சொல்ல ஆராம்பிச்சேன். நான் பயந்த மாதிரி இல்லாம, எல்லாருக்கும் புரியிற மாதிரி தெளிவா சொல்லி, அவங்க கேட்ட சந்தேகங்களுக்கு கூட சரியா பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன்.

 

பரவாயில்ல, நல்லாத்தான் போகுதுன்னு நான் நினைச்ச நொடியில, “தம்பீ, எப்படி போகுது, எல்லாம் சரியா இருக்கா?”ன்னு கேட்டுக்கிட்டே அந்த உ.பொ வந்தாங்க, அவங்க கூடவே இன்னொருத்தரும். வந்த வேகத்துக்கு அந்த இரண்டு பேரும், சூரிய மின்சக்திய பத்தி நிறைய கேள்விகள் கேட்டாங்க, ஆரம்பத்துல நானும் நல்லாத்தான் பதில் சொன்னேன். போகப் போக தொழில்நுட்பத்துக்குள்ள மிக ஆழமா போய், சுத்தமா தேவையே இல்லாத கேள்விகளா கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

 

அதுக்கு நண்பன்கிட்ட கேட்டு பதில் சொன்னா, அது மிக சரியா இருக்கனும்ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. உதாரணமா, ‘5 குதிரை திறன் கொண்ட அந்த பம்புக்கு, எத்தனை சூரிய மின்சக்தி தகடுகள் தேவைபடும்?’, ‘அந்த தகடுகள் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி பண்ணும்?’, ‘இது கினறு, ஆழ்துலை கினறு எல்லாத்துலையும் வேலை செய்யுமா?’, இந்த மாதிரியான கேள்விகள் தேவையானது.

 

அத விட்டுட்டு, ‘ஒரு தகடு எத்தனை அறைகளா(Cells) பிரிக்க பட்டு இருக்கு?’, ‘அதுல விழுற சூரிய ஒளிய எப்படி அளக்குறது?’, ’தகடுகளோட சாய்மான அளவு எவ்வளவு இருக்கனும்?’ அப்படின்னு கேட்ட கேள்விகள் எல்லாமே வேற மாதிரி இருந்தது. “இதெல்லாம் இப்ப எதுக்குயா கேட்குறிங்க, இல்ல இத தெரிஞ்சுக்கிட்டுதான் என்ன செய்ய போறிங்க”ன்னு மனசுக்குள்ளயே கேட்டுக்கிட்டேன். அப்படியும், “சாய்மான அளவு 12 டிகிரிக்கு இருக்கனும்”ன்னு தெரிஞ்சத சொன்னா, “அது தப்பு 11.45 டிகிரிதான் இருக்கனும், என்ன தம்பீ நீங்க”ன்னு பதில் சொன்னாங்க.

 

நான் கொஞ்சம் முழிக்க ஆரம்பிக்க, “தம்பீ, இதெல்லாம் தெரிஞ்சக்கனும்ப்பா, திடீருன்னு எங்க துறை சேர்ந்த உயர் அதிகாரிகள் வந்து இதேல்லாம் கேட்டா என்ன பண்ணுவிங்க?”ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. அப்போ இவ்வளவு நேரமும் கேள்வி கேட்டது வர்ற மக்களுக்கு சொல்றதுக்கு இல்லையா?, ”அடப்பாவிகளா, பள்ளிக்கூடத்துல, அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது இப்படித்தான் பிள்ளைகள போட்டு படுத்துவாங்க”, அதே மாதிரி இருத்தது.

 

அதிகாரிகள் கொஞ்சம் அங்கிட்டு நகரவும்தான், நிம்மதியாச்சு. அடுத்து வழக்கம் போல வர்ற மக்களுக்கு பதில் சொல்றதுலயே நேரம் போச்சு. 11 மணி போல, தண்ணி தாகம் எடுக்க ஆரம்பிச்சு தண்ணி வாங்கலாம்ன்னு போனேன். வழிய அடைச்சு வச்சிருந்தாங்க, அங்க நின்ன காவலர்கள் கிட்ட கேட்டா முதலமைச்சர் இங்க வந்துட்டு போற வரைக்கும் யாரும் வெளிய போக முடியாதுன்னு சொல்லிடாங்க.

 

“ஓ, இதுக்கு தான் அந்த ‘விக்கிரவாண்டி’ அதிகாரி நிறுத்தாம கத்திக்கிட்டு இருந்தாரா?”ன்னு அப்போதான் புரிஞ்சிது. சரின்னு மறுபடி வந்து வேலைய பார்க்க ஆரம்பிச்சுட்டேன், தண்ணி கிடைக்காதுன்னு தெரிஞ்சதும் தாகம் இன்னும் கூடுன மாதிரி இருந்தது, நல்ல வெயில் வேற. அப்படியும் சமாளிச்சு நின்னா, “தம்பீ, எப்படிப்பா போகுது?”ன்னு அந்த உ.பொ. இந்த முறை வேற ஒரு பெண் அதிகாரியோட வந்துட்டாங்க. வழக்கம் போல அதே மாதிரி கேள்விகள். எனக்கு மொரட்டுத்தனமா கண்ணக்கட்ட ஆரம்பிச்சிருச்சு.

 

1 மணிக்கு மேல அங்கிருந்த அரசாங்க அதிகாரிகளுக்கே, தண்ணி கிடைக்காம, அவங்களும் கடுப்பாக ஆரம்பிச்சாங்க. அடுத்த பஞ்சாயத்தா ‘அடி வயிற்றிலே ஒரு மாற்றம்’ அடக்க முடியாம வேற இருந்தது, அதையும் மீறி வர்றவங்களுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். “தம்பீ, இப்படியெல்லாம் சொன்னா அவங்களுக்கு புரியுமா, இருங்க நான் சொல்றேன்”ன்னு அந்த உ.பொ. திரும்ப வந்து ஆரம்பிச்சாங்க.

 

அவங்க கூடவே வந்த இன்னொரு அதிகாரி, இவங்க சொன்னதுக்கு நேர் எதிரா இன்னொன்னு சொல்ல, இவங்க பதிலுக்கு, தனக்கு இத யாரும் சொல்லவே இல்லயேன்னு சொல்லன்னு, அவங்களுக்குள்ளயே பேச ஆரம்பிச்சிடாங்க. அது வரைக்கும் என்கிட்ட சந்தேகம் கேட்டுகிட்டு இருந்த உழவர், இத பார்த்துட்டு மெதுவா அங்கிருந்து நகர்ந்துட்டாரு.

 

அதாவது இலவச மின்சாரம் வச்சிருக்க உழவர்கள், சூரிய மின்சக்திக்கு மானியம் வாங்க முடியுமா முடியாதன்னு விவாதம். இதுல என் பக்கம் திரும்பி, “உங்களுக்கு தெரியுமா தம்பீ”ன்னு என்கிட்ட கேட்டாங்க. அரசாங்க அதிகாரிகளுக்கே சரியா தெரியல, இதுல நான் என்னத்த கண்டேன். ஏன்யா என் ஆத்திரத்த கிளப்புரிங்க, நானே வேற ஒன்ன அடக்க முடியாம நிக்கிறேன்.


தொடரும். . .


1 comment:

  1. நல்ல பொழுது போக்கு

    ReplyDelete